Monday, May 20, 2024
Home » நோன்பின் மாண்பை பேணி இரட்டிப்பு நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம்!

நோன்பின் மாண்பை பேணி இரட்டிப்பு நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம்!

by Rizwan Segu Mohideen
March 15, 2024 11:56 am 0 comment

இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளுள் நோன்பு மிகப்பிரதானமான தொன்றாகும். வெறுமனே பசித்திருப்பது மாத்திரமன்றி, ஒரு மனிதன் தனது ஐம்புலங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே நோன்பின் பிரதான கோட்பாடாகும். இதனை அல்லாஹ் தனது அருள்மறையாம் அல் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்; உங்களின் முன்னோருக்கு விதியாக்கப்பட்டதை போன்று உங்களுக்கும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.

பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஸ்ரத் சல்மான் ( ரலி) அறிவிக்கிறார்கள். ஷஃபான் மாதம் இறுதியில் ஓர் நல் உபதேசம் செய்தார்கள்.

மனிதர்களே, உங்களிடம் ஓர் மகத்தான மாதம் வருகிறது. அது பறக்கத் பொருந்திய மாதமாகும். அதில் லைலதுல் கத்ர் என்ற ஓர் இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும். அதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அதனுடைய இரவு நேரங்களில் நின்று (தராவீஹ்) தொழுவதை நன்மைக்குரிய செயலாக ஆக்கியுள்ளான்.

எந்த மனிதன் இம்மாதத்தில் ஒரு நற்செயலைச் செய்து அல்லாஹுத்தஆலாவின் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறாரோ அவர் ரமழான் அல்லாத மற்றைய மாதங்களில் ஒரு பர்ழை நிறைவேற்றியவர் போலாவார். மேலும் இம்மாதத்தில் ஒரு பர்ழை நிறைவேற்றியவர் ரமழான் அல்லாத மாதங்களில் எழுபது பர்ழை நிறைவேற்றியர் போலாவார்.

இம்மாதம் பொறுமையின் மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சொர்க்கமாகும். எனவே, நாம் நோன்பு நோற்று வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்துவது போல் எமது இதர உறுப்புக்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் நோன்பின் பலாபலன் எம்மைச் சேரும். நல்லதை பேசி நல்லதை செய்து ஏனைய மனிதர்களுடன் சுமுகமாக பழகி, சுக துக்கங்களில் பங்கு கொள்வதாலும், அல்லாஹ் தந்தவற்றில் ஒருபகுதியை ஏனையோருக்கு வழங்குவதாலும் ரிஸ்க் எனும் அபிவிருத்தியினை அல்லாஹ் வழங்குகிறான்.

எந்த மனிதர் ஓர் நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்கிறாரோ அவருடைய அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. நரக நெருப்பிலிருந்து அவர் விடுதலையாக காரணமாகிறது. இது மாத்திரமன்றி நோன்பு நோற்றவரைப் போன்று நன்மையும் கிடைத்து விடுகிறது. எனினும் நோன்பாளியுடைய நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது என அண்ணல் நபி (ஸல்) கூறிய போது, ஸஹாபாக்கள் “யாறசூலுல்லாஹ் எங்களில் நோன்பாளிகளை நோன்பு துறக்க வைக்க சக்தி பெற்றவர்கள் இல்லையே” என்ற போது, றலுல்லாஹ் (ஸல்) அவர்கள் “வயிறு நிறைய உணவளிக்க வேண்டியதில்லை. மாறாக ஒரு பேரீச்சம்பழம் அல்லது ஒரு மிடறு தண்ணீர் அல்லது பால் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு நோன்பு துறக்கச் செய்தாலும் அவருக்கு அல்லாஹ் அந்த நன்மையை வழங்கி விடுகிறான்” என்று கூறிய பின்னர் “இம்மாதத்தில் முதற் பகுதி றஃஹ்மத்துடையதாகவும் நடுப்பகுதி பாவமன்னிப்புடையதாகவும் இறுதிப் பகுதி நரக நெருப்பை விட்டும் விடுவிப்பதாகவும்” என்றார்கள்.

‘எவரேனும் இம்மாதத்தில் தன் அடிமைகள் வேலைக்காரர்களின் வேலைப் பழுவை குறைப்பாரோ அவரை அல்லாஹ் மன்னித்து நரக விடுதலையும் அளித்து விடுவான் எனவும் அருளினார்கள். எனவேதான் ரமழான் மாதத்திற்கு முன்னரே ஷஃபான் மாத இறுதியிலேயே றஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் புனிதமிகு ரமழான் மாதத்தின் நோன்பைப் பற்றிக் கூறினார்கள்.

எனவே, நாமும் புனித நோன்பு மாதத்தின் ஒர் வினாடியையேனும் வீணாகக் கழிக்காது வீண் பேச்சுக்களை விட்டும், விளையாட்டுக்கள்,தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்தும் தொழுகைகளை இமாம் ஜமாஅத்துடன் தொழுது இதர சுன்னத்தான நபிலான தொழுகைகளில் ஈடுபட்டு திக்ர்,ஸலவாத்,ஸ்திஃபார் எனும் பாவமன்னிப்பு அல் குர்ஆன் திலாவத் போன்ற இன்னோரன்ன நல் அமல்களில் ஈடுபட்டு வருவதுடன் நோன்பின் மாண்பைப் பேணி இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவோமாக!

தவிரவும் ஏழை எளியோரின் துயர்துடைக்கவென எம் மீது விதியாக்கப்பட்ட ஸகாத் எனும் ஏழை வரியினை முறையாகக் கணக்கிட்டு வழங்கி எமது பொருட்களிலும், வாழ்க்கையிலும் பறக்கத்தையும், அபிவிருத்தியையும் பெற்று நோன்பின் பலாபலன்களை முழுமையாக, முறையாக பெற்ற நல் மக்களாக எம்மை ஆக்கிக் கொள்வோம்.

எம்.ஏ.எம். ஹஸனார்
ஊவா சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT