Monday, May 20, 2024
Home » இனி ஒன்லைன் மூலம் மட்டுமே ரயில் ஆசனங்கள் முன்பதிவு

இனி ஒன்லைன் மூலம் மட்டுமே ரயில் ஆசனங்கள் முன்பதிவு

- துன்ஹிந்த ஒடிஸி என்ற புதிய ரயில் விரைவில் அறிமுகம்

by Prashahini
March 14, 2024 11:09 am 0 comment

இன்று (14) முதல் முழுவதுமாக ஒன்லைனிலேயே ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று இரவு 7.00 மணி முதல் ரயில் ஆசனங்களை ஒன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 40 சதவீத ஆசன முன்பதிவே ஒன்லைன் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் முழுவதுமாக ஒன்லைன் மூலம் மட்டுமே ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும்.

ஒன்லைன் மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்துவிட்டு பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து டிக்கெட்டினை பெற வேண்டிய நிலை இதுவரை இருந்த போதிலும், இன்று முதல் ஆசன முன்பதிவு சீட்டின் புகைப்படம் இருந்தால் போதும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர அரசு ஊழியர்களுக்கான இலவச அனுமதிப்பத்திரத்தையும் ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்காக கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றும், அவ்வாறு பணம் வசூலிக்கப்படும் என்ற வதந்தி பொய்யானது என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில், “துன்ஹிந்த ஒடிஸி” என்ற புதிய ரயில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலான ரயில் சேவையில் சேர்க்கப்படவுள்ளது.

முன்னதாக, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், “எல்ல ஒடிஸி” மற்றும் “சீதாவக ஒடிஸி” என்ற இரண்டு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT