Monday, May 20, 2024
Home » கேலிச்சித்திரத்துறையில் இலங்கையில் தனக்கென தனியான முத்திரை பதித்தவர் ‘சிரித்திரன்’ சுந்தர்

கேலிச்சித்திரத்துறையில் இலங்கையில் தனக்கென தனியான முத்திரை பதித்தவர் ‘சிரித்திரன்’ சுந்தர்

நாளை அன்னாரின் நினைவுதினம்

by mahesh
March 2, 2024 9:48 am 0 comment

நாற்பது வருடங்களுக்கு மேலாக கேலிச் சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய சிரித்திரன் சுந்தர் பதினைந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். ‘செய்தொழில் தெய்வம், சிரிப்பே சீவியம்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் ‘சிரித்திரன் சுந்தர்’ என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம். மார்ச் 3, 1924 இல் பிறந்த அவர் மார்ச் 3, 1996இல் மறைந்தார்.

கேலிச்சித்திரங்கள், கட்டுரைகள் மற்றும் நடைச்சித்திரங்கள் என சிரித்திரனில் சுவைபட விடயதானங்கள் இடம்பெற்றன. சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திர நாயகர்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மயில்வாகனத்தார் போன்றவர்கள் வரலாற்றுப் புகழ்பெற்றவர்கள்.

‘மகுடி பதில்கள்’ என்னும் தலைப்பில் சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் என்றும் புகழ்பெற்றவை.

‘சிரித்திரன்’ 1963ஆம் ஆண்டில் சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழ். அவரின் மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. சிரித்திரன் சஞ்சிகை மூலம் பல எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர்.

சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் சஞ்சிகை தனியிடத்தைப் பெற்றது. அவரது படைப்புகள் மண்வாசனை உள்ளவையாகவும், பாத்திரங்கள் யாழ்ப்பாணப் பேச்சுவழக்குத் தமிழைச் சுவையாகப் பேசுபவையாகவும் விளங்கின.

தமிழ் மக்களிடையேயுள்ள சாதி வேறுபாடுகள் போன்ற பிற்போக்குத் தனங்கள், மூடக்கொள்கைகளை நகைச்சுவையாக – ஆனால், உறைப்பாகக் குத்திக்காட்டி நையாண்டிசெய்தார் சிரித்திரன் சுந்தர்.

சிரித்திரன் சுந்தர் கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த தினகரனில் முதலில் கேலிச்சித்திரக்காரராக (Cartoonist) பணிபுரிந்தார். அக்காலத்தில் ‘தினகரன்’ பத்திரிகையில் ஆசிரியராக இருந்த க. கைலாசபதியின் அழைப்பை ஏற்று அப்பத்திரிகையில், சுந்தர் ‘சவாரித்தம்பர்’ என்ற தொடரை வரையத் தொடங்கினார். சவாரித்தம்பர் வாசகரிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. சவாரித்தம்பருக்காகத் தினகரனை வாங்கியோரும் பலர்.

சவாரித்தம்பர் என்பவர், அக்காலத்தில் கரவெட்டியில் வாழ்ந்து கொண்டிருந்த – முற்போக்கு எண்ணங்கொண்ட ஒரு பெரியார். வண்டிச் சவாரி செய்வதில் வல்லவர். சுந்தர் அவரோடு நன்கு பழகியவராக இருந்தார்.

அந்தக் கேலிச்சித்திரங்களை அவர் படித்து, “சிவஞானத்தின்ரை வேலை நல்லாயிருக்கு” என்று சொல்லிச் சிரித்து மகிழ்ந்தவராம். சவாரித்தம்பர் பாத்திரத்தைக் கண்ணியமான பாத்திரமாகவே சுந்தர் படைத்துவந்தார்.

அதில் வந்த சின்னக்குட்டி, பாறி மாமி பாத்திரங்களும் கரவெட்டியில் வாழ்ந்தவர்களே. தினகரன் வாரமஞ்சரியில் ‘மைனர் மச்சான்’, ‘சித்திர கானம்’ ஆகிய கேலிச்சித்திரத் தொடர்களையும் சுந்தர் வரைந்தார்.

சிரித்திரனை 1963 இல் ஆரம்பித்தார் சுந்தர். 1970 வரை கொழும்பு பண்டாரநாயக்க வீதி சுதந்திரன் அச்சகத்திலும், 1970 முதல் 1971 வரை டாம் வீதியில் குமரன் அச்சகத்திலும் அச்சஞ்சிகை அச்சிடப்பட்டது. 1971 முதல் யாழ்ப்பாணம் பிரவுண் வீதியில் ஸ்ரீலங்கா அச்சகத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியது.

1971 நவம்பர் முதல் சிரித்திரன் தனது சொந்த அச்சகத்தில் இருந்து வெளியாகியது. போர்க்கால சூழலில் 1995 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது சிரித்திரன் இதழ் நிறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டே ஆசிரியர் சிவஞானசுந்தரம் மறைந்தார்.

மொத்தம் 32 ஆண்டு காலம் தொடர்ந்து சிரித்திரன் வெளிவந்தது. பல எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்த சிரித்திரன் புதுக்கவிதைகளையும் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் வெளியிட்டது. சிரித்திரன் சஞ்சிகை மூலம் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் இன்று உலகில் பலர் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள்.

திக்குவல்லை கமால், திக்கவயல் தர்மகுலசிங்கம் (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ்நங்கை ஆகியோர் சிரித்திரனில் எழுதிய ஆரம்பகால எழுத்தாளர்கள். எஸ். அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் என பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தது சிரித்திரன்.

மலையகப் படைப்பாளி ராகுலனின் ‘ஒய்யப்பங் கங்காணி’, செங்கை ஆழியானின் ‘ஆச்சி பயணம் போகிறாள்’, ‘கொத்தியின் காதல்’ ஆகிய புகழ்பெற்ற படைப்புகள் சிரித்திரனால் வெளியிடப்பட்டன.

அத்துடன் காசி ஆனந்தனின் ‘மாத்திரைக் கதைகள்’ பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா ‘நடுநிசி’ என்ற மர்மக்கதையை எழுதினார். மாஸ்டர் சிவலிங்கத்தின் ‘விண்ணுலகத்திலே’ எனும் சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் போன்றவை சிரித்திரனால் வெளியிடப்பட்டன.

சிரித்திரன் நகைச்சுவைகளை மாத்திரம் தாங்கி வரவில்லை. தரமான சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கியக் கட்டுரைகள், கலைஞர்களுடனான நேர்காணல்கள் முதலிய ஆக்கங்களும் அதனை அழகுசெய்தன. சிரித்திரன் நேர்காணல்கள் அடங்கிய நூலினை, ‘தேன்பொழுது’ என்ற பெயரில் சுந்தர் வெளியிட்டார். வேறு ஆக்கங்களும் பல நூலாக வெளியிடப்பட்டுள்ளன. ‘சிரித்திரன் சித்திரக் கொத்து’ என்ற கேலிச் சித்திரத் தொகுதியை, 1989 ஆம் ஆண்டு சுந்தர் வெளியிட்டார். ‘மகுடி பதில்கள்’, ‘கார்ட்டூன் உலகில் நான்’ ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன.

சிரித்திரன் இதழ் Centre for Creativity and Innovation நிறுவனத்தால் மீளவும் புதுப்பொலிவுடன் அச்சிலும், இணையத்திலும் பதிப்பிக்கப்பட்டு 2021 ஜனவரி முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து உலகெங்கும் கிடைக்க கூடிய வகையில் வெளியிடப்பட்டு வருகின்றது. siriththiran. com எனும் இணைய விலாசத்திலிருந்து தற்போது வெளிவருகிறது.

–ஐங்கரன்

விக்கினேஸ்வரா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT