Monday, May 20, 2024
Home » வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக நேற்று நிறுத்தம்

வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக நேற்று நிறுத்தம்

பிரச்சினைகளை ஆராய குழு நியமனம்

by mahesh
March 2, 2024 10:30 am 0 comment

யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூரப் பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்கு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பணிப்புரைக்கமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேனவின் தலைமையில் நேற்று (01) இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து தூரப் பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைக்கமைய நேற்று முன்தினம் வியாழக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணத்திலிருந்து தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைக்கமைய உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக குழு நியமிக்கப்படுமென்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், உரிய விடயம் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை ஒரு வாரத்துக்குள் ஆளுநருக்கு சமர்பிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நியமிக்கப்பட்டுள்ள குழுவினர், யாழ். புதிய பஸ் நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்களை இணைந்த நேர அட்டவணைக்கேற்ப தூர சேவைகளில் எவ்வாறு ஈடுபடுத்த முடியுமென்பது தொடர்பாக ஆராயவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்திலிருந்து தனியார் மற்றும் இ.போ. சபைக்கு சொந்தமான பஸ்கள் தூர சேவையை ஆரம்பிக்க வேண்டுமெனக் கோரி நேற்று முன்தினம் முற்பகல் யாழ். நகரில் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது. சம்பவ இடத்துக்கு விரைந்த ஆளுநர், தனியார் பஸ் உரிமையாளர் கோரிக்கை தொடர்பாக விசேட கலந்துரையாடலை நடத்தி தீர்வு பெற்றுத்தருவதாக கூறினார்.

அதற்கமைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோருடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் குழுவை நியமிக்க ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

ஆளுநரின் பணிப்புரைக்கமைய குறுகிய காலத்துக்குள் தமது கோரிக்கைக்கான தீர்வை எதிர்பார்ப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்ததுடன், பணிபகிஷ்கரிப்பை கைவிட்டு வழமையான சேவைகளை முன்னெடுக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT