Sunday, May 5, 2024
Home » இலங்கைக்கு நிழல் கொடுக்கும் இந்திய வீட்டுத்திட்டங்கள்

இலங்கைக்கு நிழல் கொடுக்கும் இந்திய வீட்டுத்திட்டங்கள்

by Rizwan Segu Mohideen
February 29, 2024 2:20 pm 0 comment

நெருக்கிய நட்பு நாடுகளான இலங்கையும் இந்தியாவும் இரு தரப்பு அறிவுசார், கலாச்சார, மத மற்றும் மொழியியல் ரீதியலான தொடர்புகளை கொண்டிருக்கின்றன. வரலாற்று ரீதியாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் 2,500 வருட கால சமய மற்றும் கலாச்சார அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இருநாடுகளினதும் பொருளாதார, இராஜதந்திர மற்றும் கடல்சாா் பாதுகாப்பு உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் கோவிட் தொற்று என்பவற்றின் போது நெருங்கிய அயலவராக அரவணைத்த இந்தியா தமிழ்மக்களின் நலன் தொடர்பில் அலாதியாக கரிசனை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இருநாடுகளுக்கும் இடையில் தொப்புள்கொடி உறவு காணப்படும் அதே வேளை வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்தியா அனைத்து சமயங்களிலும் குரல்கொடுத்து வருகிறது. அத்தோடு மலையகத் தமிழ் மக்களின் நலன் தொடர்பிலும் பல தசாப்தங்களாக பங்காற்றி வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் அழைத்து வரப்பட்ட மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை அண்மித்துள்ளது. லயன் அறைகளில் பல ஆண்டுகளாக கஷ்டப்படும் அந்த மக்களின் சமூக பொருளாதார,சுகாதார மேம்பாட்டிற்காக பலவழிகளிலும் சேவையாற்றியுள்ள இந்தியா அவர்களுக்காக வீட்டுத் திட்டம் ஒன்றை செயற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் இந்தியாவினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தை ஆதரிப்பதற்கான நமது முயற்சிகளைத் தொடர இந்திய மக்கள் மற்றும் இந்திய அரசாங்கம் மற்றும் குறிப்பாக நமது பிரதமர் நரேந்திர மோடியின் ஆழ்ந்த மற்றும் உறுதியான அர்ப்பணிப்பை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2017 இல் மேற்கொண்ட விஜயத்தின் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான எமது விருப்பத்தை பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.ஏற்கெனவே மலையக மக்களுக்காக 4000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டிருப்பதோடு அதற்கு மேலதிகமாக இந்தத் திட்டம் வழங்கப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.

மலையக தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்திய அரசாங்கம் இந்த வீட்டுத்திட்டத்தை வழங்கியது. 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் 4 ஆவது கட்டம் அண்மையில் ஒன்லைன் ஊடாக திறந்து வைக்கப்பட்டது.இதன் போது மலைய மக்களுக்கு இந்திய அரசு வழங்கிய வீட்டுத்திட்டத்திற்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். அந்த மக்களுக்கு பொருளாதார, சமூக உரிமைகளை வழங்குவதன் ஒரு பகுதியாகவே இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே திட்டமிட்ட தொகைக்கு மேலதிகமாக 3 மடங்கு அதிக தொகையை இந்திய வழங்க முன்வந்திருப்பது அந்நாட்டின் பெருந்தன்மையை காட்டுகிறது. ஏதோ கடமைக்காக அந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதாக இருந்தால் ஏற்கெனவே அறிவித்த தொகையை வழங்கி நடையை கட்டியிருக்கலாம். ஆனால் உண்மையான நோக்கத்துடன் இந்த பணியில் கைவைத்துள்ளதால் அதிக தொகையை வழங்கி மனப்பூர்வமாக இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய இந்தியா தன்னை அர்ப்பணித்துள்ளது பாராட்டத்தக்கது.

முழு இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்கான 3 பில்லியன் ரூபாய் பெறுமதியான பல்துறைசார் உதவிப் பொதியில் இந்தத் திட்டம் அடங்குகிறது. இன்றுவரை, இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத்தின் நலன்களுக்காக இந்தியா இதுவரை 30 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை செவிட்டிருப்பது பிரமிப்பான விடயமாகும்.

இதில் சுகாதாரம், போக்குவரத்து, வீட்டுவசதி, கல்வி, வாழ்வாதார மேம்பாடு மற்றும் பல்வேறு துறைகள் அடங்கும்.

பெருமளவான தோட்டத் தொழிலாளர்களுக்கு அவசர மருத்துவ வசதியை பெற்றுக் கொடுக்கம் திக்ஓயா மருத்துவமனையும் இதில் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீட்டுத் திட்த்திற்கு முன்னர் வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கான வீட்டுத் திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக செயற்படுத்தியிருந்தது. இது வரை இலங்கையில் சுமார் 60 ஆயிரம் வீடுகளை இந்தியா நிர்மாணித்துள்ளது என்றால் அது சாதாரண விடயமல்ல. இலங்கை அரசாங்கத்தினால் நாடுபூராவும் முன்னெடுக்கும் வீட்டுத் திட்டங்களுக்கு அடுத்ததாக வேறொரு நாடு இலங்கையில் அதிக வீடுகளை கட்டியிருக்குமானால் அது இந்தியா மாத்திரம் தான்.

வீட்டுத் திட்டச் சுருக்கம்:
• முதற் கட்டம்: வட மாகாணத்தில் உள்ள பயனாளிகளுக்கு 1,000 வீடுகளை நிர்மாணிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததோடு இந்த திட்டம் 2012 ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது.
• இரண்டாம் கட்டம்: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 45,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டாம் கட்டம் 2012 ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் 2018 டிசம்பரில் நிறைவடைந்தது.
• இரண்டாவது கட்டத்தில் ஒரு பயனாளிக்கு 550,000 ரூபாநிதி உதவி கட்டம் கட்டமாக வழங்கப்பட்டது.
• மூன்றாம் கட்டம்: இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டமானது மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்காக 4,000 வீடுகளை நிர்மாணித்தது.இந்தத் திட்டம் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
• மூன்றாம் கட்டத்தில் வீடுகட்டுவதற்காக ஒரு பயனாளிக்கு 950,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.
• நான்காம் கட்டம்: 2017 மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலும் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதாக அறிவித்தார். மேலும் இது தொடர்பானஒப்பந்தம் 2018 ஆகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது. இந்தத் திட்டத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்க மொத்தமாக 14,000 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம் இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகளுடன் முன்நோக்கிப் பயணிக்க முடிந்தது. இந்த உதவிகள் கிடைத்திருக்காவிட்டால் இலங்கை முன்நோக்கிப் பயணித்திருக்க முடியாது என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. எனவே, இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுத்திக்கொள்வதில் இலங்கை ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில்,இலங்கையும் இதிலிருந்து பயன்பெறுவதில் கவனம் செலுத்தியுள்ளது. இந்தியப் பிரதமர் மோடியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்தபோது, இதுகுறித்து இணக்கப்பாட்டிற்கு வந்து, இதனை மையப்படுத்தி பணியாற்ற இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு மட்டங்களில் இருதரப்பு உறவுகளால் பலன்கள் கிடைத்திருக்கின்றன. இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கான அபிவிருத்தி உதவித் திட்டங்களை இந்தியா நடைமுறைப்படுத்தி அந்த மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயற்திட்டங்கள் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்த உதவியுள்ளன.

இலங்கையின் மிக முக்கியமான வர்த்தக பங்காளியாக இந்தியா உள்ளது. பொருளாதார வளா்ச்சியின் இலக்கை முன்னோக்கிய இந்த நகா்வில், இரு நாடுகளும் பொருளாதார உறவுகளை உறுதிப்படுத்தவும், பிராந்திய ரீதியாக தங்கள் பொருளாதார முக்கியத்துவத்தை வலுப்படுத்தவும் ஆற்றல்களைக் கொண்டுள்ளன.

இலங்கை தனது ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள இந்தியா பிரயத்தனம் செய்வதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டி வந்தாலும் அவ்வாறு விமர்சிக்கும் எந்த நாடோ அமைப்புகளோ இந்தியா செய்து வரும் உதவிகளில் சிறிதளவு கூட செய்திருக்குமா? நெருக்கடி நிலையில் இலங்கை தூக்கி நிறுத்த உதவியதோடு நின்று விடாது புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வதிலும் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. எதிர்காலத்தில் மேலும் பல துறைகளில் பங்களிப்புச் செய்ய இந்தியா தயாராக இருப்பதோடு அது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையும் இருநாடுகளுக்கும் பல வழிகளிலும் சாதகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

– ஷபா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT