Friday, May 3, 2024
Home » 4 அரச இலக்கிய விருதுகளை ஒரே வருடத்தில் வென்ற எழுத்தாளர் சுமைய்யா ஜெஸ்மி மூஸா

4 அரச இலக்கிய விருதுகளை ஒரே வருடத்தில் வென்ற எழுத்தாளர் சுமைய்யா ஜெஸ்மி மூஸா

by mahesh
February 28, 2024 11:16 am 0 comment

இலக்கிய ஈடுபாடென்பது கலைத்துவமான சமூக நோக்கோடு தொடர்புடையது. அதில் முழுநேர ஈடுபாட்டோடு பயணிப்போர் பலர். திருப்தி நோக்கோடு பயணிப்போர் சிலர். இலக்கிய ஆற்றலின் வளர்ச்சியும் பங்குபற்றுதலும் தொடர்ச்சியான நகர்வும் அதற்கான தூண்டுதல்களிலேயே தங்கியுள்ளன. துறைசார்ந்தவர்களை ஊக்குவிக்க இலங்கை அரசு காலாகாலமாக மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியனவாகும்.

துறைசார்ந்தவர்களுக்கான போட்டிகளை நடத்துவதும் அவற்றைத் தெரிவுக்குள்ளாக்கி பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வளங்கி கௌரவமளிப்பதும் அங்கீகார அடையாளப்படுத்தலுடன்‌ இலக்கியவாதிகளின் ஈடுபாட்டை அதிகரிக்க வைக்கும் வழியென்றே குறிப்பிடலாம்.

அவ்வகையில் இலங்கை கலாசாரத் திணைக்களத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதிலும் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் திட்டங்கள் பாராட்டுதலுக்குரியன. இதன் மூலம் பல இலைமறை காய்கள் கனிந்து‌ மணம் பரப்புகின்றன.

கல்முனை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றிவரும் மருதமுனை சுமைய்யா ஜெஸ்மி மூஸா‌ 2023 ஆம் ஆண்டில் நான்கு அரச விருதுகளை தனதாக்கிக் கொண்டமை அடையாளப்படுத்தக் கூடிய விடயமாகும்.

பாடசாலைக் காலம் முதல் தமிழ்,ஆங்கில ஆக்க இலக்கிய செயற்பாடுகளில் ஆர்வம் கொண்ட சுமைய்யா தனிநபர் கௌரவ நிகழ்வுகளுக்காக பிரதேச செயலக மட்டத்திலும் பொதுவெளிகளிலும் பாராட்டுக்குரிய கவிதைகளை எழுதி வருகிறார். மேலும் சிறுகதை, கட்டுரை ஆக்கங்களில் ஈடுபாடு கொண்ட இவர், 2023 ஆம் ஆண்டு நான்கு அரச இலக்கிய விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2023- கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பிரதேச இலக்கியப்போட்டி- (சிறுகதை_ -முதலிடம்),

2023- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மீலாதுன் நபி விழா -(நிகழ்நிலைக் கட்டுரைப் போட்டி_- இரண்டாமிடம்), 2023 -கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட இலக்கியப்போட்டி- (சிறுகதை_- மூன்றாமிடம்), 2023- கிழக்கு மாகாண அரச ஊழியர்களுக்கான படைப்பாக்கப் போட்டி- (சிறுகதை_- இரண்டாமிடம்)

இவையே 2023 இல் இவர் பெற்றுக் கொண்ட நான்கு அரச‌ கௌரவங்களுமாகும்.

அரச நிறுவனம்சார் இலக்கிய ஈடுபாடுடைய ஒருவர் ஓர் ஆண்டில் அதிக தடவை பெற்றுக் கொண்ட கௌரவமாக இது கொள்ளப்படுகிறது.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவியான இவர், நாடறிந்த இலக்கிய விமர்சகர், ஊடகவியலாளர் ஜெஸ்மி எம்.மூஸாவின் துணைவியாராவார்.

ஏ.எல்.எம்.ஷினாஸ்  (பெரியநீலாவணை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT