Monday, May 20, 2024
Home » அர்த்தபூர்வமான இறைவணக்கம்

அர்த்தபூர்வமான இறைவணக்கம்

by Gayan Abeykoon
February 23, 2024 11:15 am 0 comment

இறைவணக்கம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வை கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது எது? வணக்கத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் வைத்தே அனேகமானவர்கள் பார்க்கின்றனர். பள்ளிவாசலில் குனிந்து எழும்புவது மட்டுமே வணக்கம் என்று சிலர் கருதுகின்றனர். அத்தோடு நமது கடமை முடிந்துவிட்டது என்று வேறுசிலர் நோக்குகின்றனர்.இவ்வாறு வணக்கம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வையைக் கொண்டுள்ளனர்.

இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது என்ன? என்பது தொடர்பில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளான். “நான் ஜின்களையும், மனிதர்களையும், என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்கும் படைக்கவில்லை” (அல் குர்ஆன் 51:56)

இவ்வசனத்தைப் படித்தபின் அனேகமானவர்களின் எண்ணங்களில் வெறும் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பமும் தவறான கற்பிதமும் தோன்றும். இவற்றை மட்டும் நிறைவேற்றுவதற்காக இறைவன் நம்மைப் படைத்தான் என்ற கேள்வியும் கூடவே எழும்.

இவைதான் வணக்கமென நாம் கருதும் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுக்கு அன்றாட வாழ்வின் ஒருநாளில் எத்தனை மணி நேரங்களை நாம் ஒதுக்குகின்றோம் என்பதை யோசித்துப் பார்த்தாலே, வணக்கம் என்பது இவை மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக  ஐவேளை தொழுகைக்காக 24 மணி நேரத்தில் 5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மாதங்களைக் கணக்கிட்டால் 8.5 சதவீதம் மட்டுமே நோன்புக்காக ஒதுக்கப்படுகிறது. ஜகாத் என்பதோ வருடத்தில் ஒரு முறை மட்டும் தான். வாழ்நாளில் ஒரு முறை தான் ஹஜ்.

‘என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி உங்களை நான் படைக்கவில்லை’ என்ற இறைக்கூற்றின் அடிப்படையில் நோக்கும் போது 24 மணி நேரமும் தொழுது கொண்டோ, நோன்பு நோற்றுக்கொண்டோ அல்லது ஜகாத் கொடுத்துக்கொண்டோ தான் இருக்க வேண்டும்.

இது நடைமுறை சாத்தியமானதல்ல. இதனை அனைவரும் அறிவர். வணக்கம் என்பது தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல. ஓர் ஏழைக்கு உணவளிப்பதும் மத, இன, மொழி வேறுபாடு பார்க்காமல் கவலை சூழ்ந்த மனிதனின் கண்ணீர் துடைக்க உதவுவதும், அமானிதம் பேணி, அடுத்தவர் உரிமையில் கை வைக்காமல் இருப்பதும், நாவால் பிறர் மனதை நோகடிக்காமல் இருப்பதும், மலர்ந்த முகத்துடன் மக்களைச் சந்திப்பதும், தேவையற்றை கோபத்தையும் அவசியமற்ற ஆத்திரத்தையும் கட்டுப்படுத்திக்  கொள்வதும் இலஞ்சம் வாங்க மறுக்கும் இலட்சியவாதியாக இருப்பதும், உண்மையை உரக்கச் சொல்வதும் வியாபாரத்தின்போதும், கொடுக்கல் வாங்கலின்போதும் நீதியுடனும் விட்டுக்கொடுக்கும் மனோபாவத்துடனும் நடந்துகொள்வதும் வணக்கம் தான்

உங்கள் வேலையையும் உங்களது பணியையும் ஈடுபாட்டுடனும் பொறுப்புடனும் நிறைவேற்றுவதும், ஊதியத்திற்கு உகந்த முறையில் உழைப்பதும், உண்ணும் உணவும் அருந்தும் பானமும் அனுமதிக்கப்பட்ட வழிமுறையினூடாக இருப்பதும், அணியும் ஆடையும், அத்தியாவசியப் பொருட்களும் அனுமதிக்கப்பட்ட முறையில் சம்பாதித்தவையாக இருப்பதும் வணக்கமேயாகும்.

இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் உழைப்பதும் சிலபோது வணக்கத்தில் கட்டுப்படும். வயலில் உழைப்பவரும், தொழிற்சாலையில் இயங்குபவரும், கடைவிரிக்கும் வியாபாரியும், அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியரும், துறைசார் நிபுணர்களும் தங்களுடைய பணிகளை வணக்கமாகவும், மறுமை வெற்றிக்கான ஆதாரமாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

ஆயினும் அதற்கென சில நிபந்தனைகள் உள்ளன. ஒன்று: இஸ்லாம் அனுமதித்த தொழிலாக அது இருக்க வேண்டும். இரண்டு: நோக்கம் (நிய்யத்) நல்லதாக இருக்க வேண்டும். மூன்று: செய்வன திருந்தச் செய்ய வேண்டும். ஏனெனில் ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள்,  “உங்களில் ஒருவர் ஒரு செயலைச் செய்தால் அதைச் செவ்வனே செய்வதை இறைவன் விரும்புகின்றான்” என்று கூறினார்கள். (ஆதாரம்: பைஹகி).

அந்தப் பணியில் இறை வரம்புகளை மீறக்கூடாது. (மோசடி, திருட்டு, துரோகம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது). இறைக் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு அந்தப் பணி தடையாக இருக்கக் கூடாது. இந்த வரம்புகளை பேணும்போது யார் எப்பணி செய்தாலும் அப்பணியை வணக்கமாகவே இஸ்லாம் கருதுகிறது. ஒரு தடவை பலசாலியான ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் கடந்து சென்றார். அப்போது தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர் மட்டும் இறைப் பாதையில் போராட முன்வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?” என்று கூறினர்.

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “அறிந்துகொள்ளுங்கள்! தமது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவர் உழைக்கச் செல்கின்றார் என்றால் இவரும் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். தமது வயதான பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவர் உழைக்கச் செல்கின்றார் என்றால் அப்போதும் இவர் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். அடுத்தவரிடம் கையேந்தாமல் தமது சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைக்கச் செல்கின்றார் என்றால், அப்போதும் இவர் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். ஒருவர் பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் உழைக்கச் செல்கின்றார் என்றால் அப்போதுதான் இவர் சைத்தானின் பாதையில் இருக்கின்றார்” என்று கூறினார்கள். (ஆதாரம்: தபரானி)

இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் இப்படித்தான் பட்டியலிடப்படுகிறதே தவிர, தொழுகையையும் நோன்பையும் மாத்திரம் வைத்தல்ல. இந்த வணக்கங்கள் தான் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும்.

அப்பாஸ்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT