Wednesday, October 9, 2024
Home » சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகள், கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகள், கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

- சில நபர்களால் விருதுகள், பத்திரங்கள் வழங்கப்படுகின்றமை அம்பலம்

by Rizwan Segu Mohideen
February 23, 2024 12:38 pm 0 comment

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின் அடிப்படையில் உரிய செயன்முறைக்கமைய தெரிவு செய்யப்படும் சிறப்புக்குரிய இலங்கை பிரஜைகளுக்காக ஜனாதிபதியால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் கௌரவ நாமங்களுக்காக பயன்படுத்தப்படும் பெயர்களை பயன்படுத்தி சில நபர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக விருதுகள் மற்றும் சன்னஸ் பத்திரங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றமை ஜனாதிபதி அலுவலகத்திற்கு தெரியவந்துள்ளது.

அதனால் தேசிய விருதுகளுக்காக பயன்படுத்தப்படும் கௌரவ நாமங்களை வேறு தரப்பினர் தவறாக பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், முறையற்ற விதத்தில் வழங்கப்படும் விருதுகள் காரணமாக இதுவரையில் இலங்கையில் கௌரவிப்புக்கு பாத்திரமானவர்களுக்கு செய்யும் அநீதியாகவும் அவமரியாதையாகவும் அமைவதாக ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறான செற்பாடுகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

1986ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியால் 387/3 மற்றும் 1986.02.03 திகதிய அதிவிசேட வர்த்தமானி பத்திரத்தின் மூலம் தேசிய விருகள் அறிமுகப்பட்டத்தப்பட்டன. பின்னர் 627/8 மற்றும் 1990-09-12 திகதிய அதிவிசேட வர்த்தமானி பத்திரத்திரம், 863/4 மற்றும் 1995-03-20 திகதிய அதிவிசேட வர்த்தமானி பத்திரத்திரம், 1535/12 மற்றும் 2008-02-08 திகதிய அதிவிசேட வர்த்தமானி பத்திரத்திரத்தின் ஊடாக தேசிய விருது வழங்கும் செயன்முறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 18-02-2023 ஆம் திகதி சமர்பிக்கப்பட்ட PS/NC/ACD/95/2023 இலக்க அமைச்சரவைக் குறிப்பு மூலம், “விசிஷ்ட கௌசல்யாபிமானி” மற்றும் “விசிஷ்ட ஜனரஜ அபிமானி” ஆகிய இரண்டு புதிய விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் ஊடாக தேசிய விருதுகளுக்கான பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படுவதோடு, ஜனாதிபதியினால் பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்காக சிறந்த சேவை ஆற்றிய, இலங்கையர்கள் மற்றும் இலங்கையர் அல்லாதவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்குவதற்கான தெரிவுக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தேசிய விருதுகளை பெற விரும்பும் தகுதியுள்ள இலங்கையர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கான புதிய முறைமை ஒன்றை தயாரிப்பதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஜனாதிபதியின் இணக்கப்பாட்டுக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்களைக் கொண்ட தேர்வுக் குழுவால் விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விருது பெற்றவர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, குறிப்பிட்ட திகதியில் ஜனாதிபதி தலைமையில் விருதுகள் வழங்கப்படும்.

சுதந்திர தினம், நினைவு தினம் தேசிய வீரர்கள் தினம் உட்பட விருதுகள் வழங்கப்படுவதற்கு பொருத்தமான திகதிகளை ஜனாதிபதிக்கு தீர்மானிக்க முடியும். மேலும், இலங்கையர் அல்லாதவர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x