Monday, May 13, 2024
Home » அத்துமீறும் தமிழக மீனவர்களால் வடக்கு மீனவர்களுக்கே பாதிப்பு

அத்துமீறும் தமிழக மீனவர்களால் வடக்கு மீனவர்களுக்கே பாதிப்பு

கச்சதீவை மீளக் கோருவது நியாயமல்ல

by damith
February 19, 2024 9:30 am 0 comment

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால், இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே இலங்கை மீனவர்களின் பாதிப்புகளை உணர்ந்து இந்திய மீனவர்கள் செயற்படவேண்டுமென வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். அதேவேளை, இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழையும்போது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால், அதற்காக அவர்கள் கச்சதீவைக்கோருவது ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக இலங்கைக் கடற்பரப்பினுள் நுழையும் இந்திய இழுவைப் படகுகளை, இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றி அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

தமிழ் நாட்டிலும், இந்திய பாராளுமன்றத்திலும், இந்திய மீனவர்களின் கைதுக்கு எதிராகக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதுடன், கச்சதீவை மீளக் கோரும் கருத்துக்களும் வலுப்பெற்றிருந்தன.

இது தொடர்பில் வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது இரண்டு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையாகும். இருந்தாலும் இருநாடுகளும் ஒற்றுமையாகச் செயற்பட்டு இந்தப் பிரச்சினைக்குரிய தீர்வைக் காணவேண்டும்.

அயல் நாடான இந்தியாவும், எமது நாடும் சகோதரர்களைப்போன்றது. இவ்வாறிருக்கும்போது சில பிரச்சினைகள் ஏற்படும். இதற்காக இவ்வாறான கருத்துக்களை கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

இந்திய மீனவர்கள் இவ்வாறு இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதால் இலங்கை மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். குறிப்பாகத் தமிழ் நாட்டையும், எம்மையும் எடுத்துக்கொண்டால் நாம் மொழியாலும் ஒன்றுபட்டவர்களாகக் காணப்படுகின்றோம்.

அந்த அடிப்படையில் உண்மைத்தன்மையை உணர்ந்து எமது மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு இந்திய மீனவச் சகோதரர்களும் இதனைப் புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.

தொடர்ந்தும் இணக்கமாக நாமும் இந்தியாவும் சகோதரப் பாசத்துடன் செயற்படும்வகையில் அவர்களுடைய கருத்துக்களும் இருக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT