Sunday, May 5, 2024
Home » NLB லொத்தர் சீட்டு சூப்பர் பரிசு மற்றும் மில்லியன் பரிசுகள் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு

NLB லொத்தர் சீட்டு சூப்பர் பரிசு மற்றும் மில்லியன் பரிசுகள் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு

- லொத்தர் சபையின் 2023 வருமானத்தில் ரூ. 7.1 பில்லியன் அரச ஒருங்கிணைந்த நிதியத்திற்கு

by Rizwan Segu Mohideen
February 17, 2024 9:43 am 0 comment

– ‘அத சம்பத’ புதிய லொத்தர் சீட்டு அறிமுகம்

தேசிய லொத்தர் சபையினால் 2023 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டுக்களின் சூப்பர் பரிசு மற்றும் மில்லியன் பரிசுத் தொகைகளுக்கான காசோலைகள் மற்றும் வாகனங்கள் வென்றவர்களுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நிதி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று (16) நடைபெற்றது.

இதன்போது, கொவிசெத, மெகா பவர், மெகா பவர் 60 உள்ளிட்ட லொத்தர் சீட்டிழுப்புக்களின் வெற்றியாளர்களுக்கான பணப் பரிசு மற்றும் வாகன பரிசுகள், விற்பனை முகவர்களுக்கான ஊக்குவிப்பு பரிசுகள், சான்றிதழ்கள் என்பனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

அதற்கு மேலதிகமாக தேசிய லொத்தர் சபையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் “அத சம்பத” புதிய லொத்தர் சீட்டை வௌியிடும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. அதன் முதல் சீட்டு தேசிய லொத்தர் சபையின் தலைவர் சீ.யாபா அபேவர்தன அவர்களினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி ரெனோல்ட் சீ. பெரேரா ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் வகையில் தேசிய லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

தேசிய லொத்தர் சபை 2023 ஆம் ஆண்டுக்கான வருமானத்தில் 7.1 பில்லியன் ரூபா நிதியை அரச ஒருங்கிணைந்த நிதியத்திற்கு வழங்கப்பட்டதோடு, அதற்மைவான காசோலை தேசிய லொத்தர் சபையின் தலைவர் சமீர. சீ. யாப்பாவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்திருந்த லொத்தர் சீட்டிழுப்பு வெற்றியாளர்களுக்கான பணப் பரிசு, வாகன பரிசு, விற்பனை முகவர்களுக்கான பணப் பரிசு, சான்றிழ்கள் என்பன நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்லாபிட்டிய மற்றும் செஹான் சேமசிங்க ஆகியோரினால் வழங்கப்பட்டன.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, திறைசேரியின் பிரதி செயலாளர்களான டபிள்யூ.ஏ.சரத்குமார, ஆர்.எம்.பி. ரத்நாயக்க, ஏ.கே.செனவிரத்ன உள்ளிட்டவர்களுடன் நிதி அமைச்சின் அதிகாரிகள், தேசிய லொத்தர் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், சீட்டிழுப்பு வெற்றியாளர்கள், விற்பனை முகவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT