Monday, May 6, 2024
Home » மக்களின் நேரடி தெரிவுகளாகவே யாழ். மாவட்டத்தில் அபிவிருத்தி
சுற்றறிக்கையில் கூறப்பட்டதன்படி

மக்களின் நேரடி தெரிவுகளாகவே யாழ். மாவட்டத்தில் அபிவிருத்தி

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

by gayan
February 17, 2024 6:00 am 0 comment

விவசாயத்துக்கான நீர், குடிநீர் பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான தீர்வை எட்டுவதற்கு அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய கூட்டத்தை கொழும்பில் நடத்தவும் முடிவு

யாழ். மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு அங்கு வாழும் மக்களின் நேரடி தெரிவுகளாக முன்மொழிவுகள் திரட்டப்பட்டு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாத போதும் இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ். மாவட்டத்துக்கென 322 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (16) மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை ஒதுக்கப்பட்ட நிதி மிக சொற்பமானதாகவே உள்ளது. அதாவது சிறு விடயங்களை மேற்கொள்வதற்கான நிதியாகவே உள்ளது. அதற்கிணங்கவே இம்முறை பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு அப்பிரதேச மக்களின் நேரடி தெரிவுகளாக திட்டங்களும் முன்மொழிவுகளும் திரட்டப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது ஒப்புதலின்றி 2024ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஜனாதிபதியுடன் நேரடியாக தொடர்புகளை பேணி வருபவர்கள் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதிக்கு இவ்விடயம் தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்திலும் அனுப்பியுள்ளனர். அதற்கு ஜனாதிபதியும் இணங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

அதன்படியே ஜனாதிபதிக்கு உங்களது தெரிவுகளை அனுப்புங்கள் அல்லது எம்மிடம் தாருங்கள் என்று நான் கூறினேன். அத்துடன் இத்திட்டத்தில் தமது திட்டங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். அதனடிப்படையில் ஒரு வாரத்துக்குள் அவர்களது திட்டங்களையும் உள்வாங்கி உரிய தரப்பினர்களுக்கு வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT