Sunday, May 19, 2024
Home » போதைப்பொருளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம்

போதைப்பொருளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம்

by gayan
February 17, 2024 6:00 am 0 comment

நாட்டில் போதைப்பொருள் குற்றங்கள் தற்போது பெருமளவில் குறைந்துள்ளன. பொலிசார் தற்போது முன்னெடுத்து வருகின்ற ‘யுக்திய’ நடவடிக்கை காரணமாகவே போதைப்பொருள் குற்றங்கள் பெருமளவில் குறைந்திருப்பதாக பரவலாக செய்திகள் வெளிவருகின்றன.

போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிசார் ஆரம்பித்துள்ள ‘யுக்திய’ என்ற விசேட நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான தீவிர நடவடிக்கை மூலமே நாட்டில் போதைப்பொருள் குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென்பது மக்களின் நம்பிக்கையாகும்.

உலகெங்கும் இன்றைய சமுதாயம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக போதைப்பொருள் பாவனை விளங்குகின்றது. பொழுதுபோக்குக்காகவும், சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோசத்துக்காகவும் பயன்படுத்தப்படும் இந்த போதைப்பொருட்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவித்து இறுதியில் வாழ்வையே சீரழித்து விடுகின்றன. போதைப்பொருள் பாவனையானது இறுதியில் மரணத்துக்கே வழிவகுக்கின்றது.

ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பன அந்நாட்டில் சுகதேகிகளாக வாழும் மக்களிலேயே தங்கியுள்ளது. அதிலும் நாட்டின் எதிர்காலத்தையும் தலைவிதியையும் தீர்மானிப்பவர்களாக இளம்தலைமுறையினரே காணப்படுகின்றனர். இந்நிலையில்,தெற்காசிய வலயத்தில் பல தொன்மையான வரலாறுகளையும், சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்ற இலங்கையிலும் போதைப்பொருள் படிப்படியாக ஊடுருவியுள்ளது.

இலங்கையில் இருந்து போதைப்பொருளை ஒழித்துக் கட்டுவதற்கு பல்வேறான முயற்சிகள் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட போதிலும், போதைப்பொருள் குற்றங்களை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதென்பது பெரும் சவாலாகவே காணப்படுகின்றது. ஆனாலும் நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற யுக்திய நடவடிக்கையானது பெரும் பலனைத் தந்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

போதைப்பொருள் பாவனை என்பது வெறும் சட்டப் பிரச்சினை என்று எவரும் கருதி விடலாகாது. அது சமூகப் பிரச்சினை ஆகும். அதாவது எமது சமூகத்தை படிப்படியாகச் சீரழிக்கின்ற பாரிய பிரச்சினை ஆகும்.

அத்துடன் போதைப்பொருளை சமூகத்திலிருந்து ஒழிப்பதென்பது குறித்ததொரு தரப்பினரது பொறுப்பு என்று ஏனையோர் ஒதுங்கி விட முடியாது. இவ்விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே போதைப்பொருள் அரக்கனை எமது சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்க முடியுமென்பதை மறந்துவிட முடியாது.

ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள சமூகநல அமைப்புகள் போதைப்பொருள் அரக்கனுக்கு எதிராக போராடுவதற்கு முன்வர வேண்டும். அதன் ஊடாகவே சமூகமட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். கிராமங்களிலுள்ள இளைஞர் அமைப்புகளுக்கு இவ்விடயத்தில் பெரும் பங்கு உள்ளதை மறந்துவிட முடியாது.

போதைப்பொருள் பாவனையின் தீமையை மதத்தலைவர்களும் தமது அன்றாட சமய நிகழ்வுகளில் நினைவூட்டல் வேண்டும். போதைப்பொருள் பாவனையிலிருந்து மக்களை மீட்பதற்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்தல் அவசியம். பெற்றோர் தம் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்த்தல் அவசியம். தனியார் கல்வி நிலையங்கள் போன்றவற்றை சூழ ஏற்படும் நட்புச் சூழலையும், விளையாட்டு மைதானச் சூழலையும் பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். பொது நிறுவனங்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டுவது அவசியமாகும்.

அதேசமயம் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நடத்தைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் குறித்து மிகவும் அவதானமாக இருத்தல் அவசியம். பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானித்தால் பெற்றோர் உடனடியாகவே அவ்விடயத்தில் கவனம் செலுத்தத் தவறக் கூடாது.

இளவயதினரின் உடல் எடையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுதல், உடல் தோற்றங்களில் அக்கறை காட்டாத விதத்தில் அவர்கள் நடந்து கொள்ளுதல், வழமைக்கு மாற்றமான செயல் நடத்தைகள், காரணம் இல்லாமல் சிரித்தல், காரணம் இல்லாமல் பேசுதல் போன்ற நடவடிக்கைகள் தென்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. எக்காரணமும் இன்றி தீவிரமாக உடல் வியர்த்தல், கண்களை வேகமாக அசைத்தல் அல்லது கண்கள் அரைவாசி மூடியது போன்று சிவந்து காணப்படுதல், வழமைக்கு மாற்றமாக உணவுகளில் விருப்பமின்றி நடத்தல் போன்றனவும் போதைப்பொருள் பாவனைக்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும்.

ஆரம்பப் பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் உயர்தரம் கற்கும் மாணவர்கள் வரை அனைவரும் போதைப்பொருள் வியாபார விஷமிகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளிவருகின்றன. போதைப்பொருள் என்று தெரியாமல் கூட பிள்ளைகளில் உடலுக்குள் அவை செல்வதற்கான ஆபத்துகள் இருக்கின்றன. எனவே பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

போதைப்பொருள் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப மக்கள் ஒவ்வொருவருமே முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT