Monday, May 20, 2024
Home » தீர்ப்பு நாளின் அதிபதி

தீர்ப்பு நாளின் அதிபதி

by sachintha
February 16, 2024 10:46 am 0 comment

இஸ்லாத்தின் முக்கிய அடிப்படைகளில் ஒன்றாக மறுமை நாள், மறு உலக வாழ்வு உள்ளது. தற்போது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கை நிரந்தரம் அற்றது. இந்த உலக வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், நன்மை- தீமைகளுக்கு ஏற்ப நமது மறுமை வாழ்வு அமையும். இதனை அல் குர்ஆனும், நபிமொழிகளும் விளக்குகின்றன. இந்த உலக வாழ்வில் அவன் சம்பாதித்த செல்வம், அவன் சுற்றம், மனைவி-மக்கள் என எதுவும் மறுமைநாளில் பயன்படாது. அவன் செய்த நற்செயல்கள் மட்டுமே அவனுக்கு அப்போது துணை நிற்கும் என்று அல் குர்ஆன் குறிப்பிடுகிறது.

இதுகுறித்து அல் குர்ஆன், “அல்லாஹ்வே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியும் ஆவான்”. (1:4) என்றுள்ளது.

“ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும், இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகுதூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும். அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூருமாறு உங்களை எச்சரிக்கின்றான். இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்”. (3:30).

“புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள், கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல், இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஸக்காத் கொடுத்து வருதல், இவையே புண்ணியமாகும். இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், வறுமை, இழப்பு போன்ற துன்பத்திலும், நோய் நொடிகள் போன்றவற்றின் கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும் உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள், இன்னும் அவர்கள் தாம் பயபக்தியுடையவர்கள்”.

(2:177).

“யார் என்னுடைய (அல்லாஹ்வின்) உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும். (20:124).

அல்லாஹ் அளிக்கும் தீர்ப்பில் இருந்து யாரும் தப்பிக்கவே முடியாது. எனவே தான் மறு உலகம் இருக்கிறது என்பதிலும், அந்த மறுமை நாளில் நமது செயல்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் என்பதிலும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இந்த நம்பிக்கை வந்தால் உலக வாழ்வில் எந்த தவறு செய்ய மனிதன் விரும்ப மாட்டான். இறைவன் வகுத்த வழியில் தனது வாழ்வை நடத்த முயற்சி செய்வான்.

மறு உலக வாழ்வு பற்றிய நம்பிக்கை தான் இஸ்லாத்தின் ஆணிவேராகவும், அஸ்திவாரமாகவும் அமைந்துள்ளது. அந்த நம்பிக்கை எவ்வளவு ஆழமாக மனித உள்ளத்தில் பதிந்திருக்கின்றதோ, அதற்கேற்ப ஒருவனது செயல்களில் மாற்றங்கள் நிகழும். இதனால் தான், தன் அல் குர்ஆன் நெடுகிலும் அந்த நாளைக் குறிப்பிடுகின்றான் அல்லாஹ். அதைப் பற்றி திருக்குர்ஆனில், “நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த இறுதித்தீர்ப்பு நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து நல்வழிகளில் செலவு செய்யுங்கள்”. (2:254)

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆக வேண்டும். அன்றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்கள் செய்கைகளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல அற்ப இன்பப்பொருளேயன்றி வேறில்லை”. (3:185)

உலக வாழ்வு ஏற்றத்தாழ்வு நிறைந்தது. கடினமாகவும், உண்மையாகவும் உழைப்பவன் குறைந்த ஊதியம் பெற்று கஷ்டப்படுவான். அடாவடித்தனம் செய்து வாழ்பவன் போற்றப்படுபவனாக இருப்பான். நல்ல நடத்தை உள்ளவன் தூற்றப்படுபவனாக, கெட்ட செயல்கள் செய்பவன் உயர்ந்தவனாக கருதப்படுவான்.

தகுதியுள்ளவன் தரக்குறைவாகவும், தகுதியற்றவன் உயர்ந்தவனாகவும் வாழ்வான். கல்வி அறிவு இல்லாதவன் கண்ணியப்படுத்தப்படுபவன் ஆகவும், கல்வி அறிவில் சிறந்தவன் ஒதுக்கப்படுபவன் ஆகவும் இருப்பான். சுருக்கமாக சொல்வது என்றால் ‘நல்லதுக்கு காலம் இல்லை’ என்று நினைக்கும் அளவுக்கு உலக வாழ்க்கை காணப்படும்.

இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும் என்றால் மறு உலகம் இருக்க வேண்டும். அதை ஒரு அதிபதி ஆட்சி செய்ய வேண்டும். அவன் நேர்மையானவனாக இருக்க வேண்டும். எது நீதியோ அதை நிலைநாட்டுபவனாக இருக்க வேண்டும்.

அத்தகைய நீதிபதியாகத்தான் அல்லாஹ் இருக்கின்றான். தீர்ப்பு நாளின் அதிபதியாக இருக்கும் அவன் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன். மனம் திருந்தி பாவ மன்னிப்பு கேட்டு, மீண்டும் பாவங்களை செய்யாமல் வாழ்ந்து, நற்செயல்களை அதிகம் செய்தால் தீர்ப்பு நாளில் இறைவனின் தண்டனையில் இருந்து நாம் தப்பிக்க முடியும். நரக நெருப்பில் இருந்து விடுதலை பெற இயலும்.

எனவே புனிதமான சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்களாக வாழக்கூடிய நல்ல பாக்கியத்தை நமக்கும், உலக மக்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருளட்டும்.

அபூ முஷீரா…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT