Wednesday, October 16, 2024
Home » 09 ஆவது பாராளுமன்றின் 05ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

09 ஆவது பாராளுமன்றின் 05ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

காலை 10.30 க்கு ஜனாதிபதியின் அக்கிராசன உரை; மரியாதை வேட்டுக்கள், வாகன பவனி இடம்பெறாது

by mahesh
February 7, 2024 6:00 am 0 comment

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (07) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படுகிறது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (06) நடைபெற்றதுடன், தேவி பாலிகா கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.

அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (07) மு.ப 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் ஆலோசனை வழங்கினார்.இதற்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாதென பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார். விருந்தினர்கள் இன்று (07) காலை 09.45 மணிக்குள் தங்கள் இருக்கைகளில் அமருமாறு கோரப்பட்டுள்ளதாக வும் அவர் குறிப்பிட்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருடைய பாரியாரின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வருகையும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதற்பெண்மணியின் வருகையும் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்பர். இதனைத் தொடர்ந்து, படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கொழும்பு தேவி பாளிகா கல்லூரியின் மாணவியர் ஜயமங்கல கீதம் இசைக்கவுள்ளனர்.

இதன் பின்னர், உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி மு.ப 10.25 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் பிரதிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வார். சபைக்குள் நுழையும்போது பிரதிப் படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x