Sunday, May 19, 2024
Home » தமிழ் இலக்கியப் பெருவெளியில் ஆளுமைமிக்க பெருங்கலைஞன் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்தீன்

தமிழ் இலக்கியப் பெருவெளியில் ஆளுமைமிக்க பெருங்கலைஞன் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்தீன்

by mahesh
February 7, 2024 1:19 pm 0 comment

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்தீன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகப் பரப்பில் ஒரு முக்கியமான எழுத்தாளுமை மிக்கவர். அவரை இன்று எதிர்பாராத விதமாக எழுத்தாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான இக்பால் அலி மூலமாக அறிந்து கொண்டாலும், அவர் எங்கள் உறவினர் என்று மிகவும் பெருமையுடன் தெரிந்து கொண்டேன். அந்தளவுக்கு எங்கள் குடும்பத்தோடு பின்னிப் பிணைந்தவர்.

அவர் மருதமுனையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அக்காலத்தில் அவருக்கு எனது ஊரான மடவளைக்கும் எங்கள் குடும்பத்தினர்களுக்குமிடையே நெருங்கிய உறவு இருந்தது. அவர் எனது சொந்த பந்தங்களை நினைவூட்டி மருமகன் என்ற உறவு முறையோடு என்னை அழைத்தமை எனக்கு களிபேருவகை ஏற்பத்தியது. எங்கள் குடும்பத்திற்கும் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்தீன் அவர்களுக்கும் இடையில் மலர்ந்த உறவு சிலாகித்துப் பேசப்பட்டது. அவரைச் சந்தித்து கலந்துரையாடிய இன்றைய நாள் என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் இன்னுமொரு வகையான தடத்தை பதிவு செய்துள்ளது.

இத்தகைய பெருமைமிக்க இலக்கிய ஆளுமைக்கும் எங்கள் குடும்பத்திற்குமிடையிலான நட்புறவு குறித்த பல்வேறு விடயங்களை நாங்கள் கலந்துரையாடினோம். என் தகப்பனை ‘மச்சான்’ என்று வாய்நிறைய உச்சரித்தார்.

அதேவேளையில் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இக்பால் அலியின் இளமைப் பருவ காலத்தில் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்தீன் அவர்களுடனும் மற்றும் அவரது தந்தை புலவர் மணி ஷரிப்தீன் அவர்களுடனும் கொண்டுள்ள இலக்கிய நட்புறவுகள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது இருவரும் பழைய நினைவுகளை வெட்டவெளிச்சமாகப் பேசி கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர்.

இறுதியாக அவர் எழுதிய பெருந்தொகையான நூல் பிரதிகளை எனக்கும் இக்பால் அலிக்கும் அன்பளிப்புச் செய்தார். இந்தச் சந்திப்பு எனக்கு நிறைந்த மனநிறைவைத் தருகின்றது. நான் இந்தச் சந்திப்பை எனது வாழ்நாளில் மறக்க முடியாத வரலாற்றுப் பதிவாக எனது முகப்புத்தகத்தில் பதிவிலிடுகின்றேன்.

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்தீன் அவர்கள் கிழக்கு மாகாணம் மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டு கொழும்பில் வாழ்ந்து வருபவர். தமிழ் இலக்கிய உலகில் முன்னணிமிக்க காவியம் படைக்கக் கூடிய ஒருவராகத் திகழ்கிறார். ஜின்னாஹ் அவர்கள் பெரும்கவிஞன் புலவர்மணி ஷரிபுத்தீன் அவர்களின் மகனாவார். காவியம், கவிதை, சிறுகதை, புதினம், சிறுவர் இலக்கியம், கட்டுரை, மொழிமாற்றம் ஆகிய துறைகளில் மிகப் பெறுமதிமிக்க நூல்களை இலக்கிய உலகிற்கு தந்து பெரும் புகழையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.

1965 இல் இலக்கிய உலகிற்குள் பிரவேசித்த இவர் ஆரம்பக் கல்வியினை மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியினை கல்முனை உவெஸ்லி கல்லூரியிலும் மருத்துவக் கல்வியினை இராஜகிரிய பல்கலைக்கழகத்திலும் பயின்றார். புதுக் கவிதையாளர்கள் மலிந்து போயிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்களது இடர் நிறைந்த வாழ்வியல் கோலங்களை தனது தனித்துவ மரபுக் கவிதைகளின் ஊடாக வெளியுலகிற்கு கொண்டு வந்தவர் ஆவார்.

1983 ஜுலை இனக்கலவரத்தின் போது தனது சகோதர இனம் பட்ட துன்பங்களைக் கண்ணால் கண்டு நெஞ்சுருகி கலவரம் முடிந்த இரண்டாம் நாளே பத்தொன்பது அறுசா விருத்தங்களை எழுதிக் கண்ணீர்ப் பதிவுகளாக ஆக்கியவர் ஜின்னாஹ் அவர்களே. இதுவே இந்த இனக்கலவரம் பற்றி இலங்கையில் வெளிவந்த முதலாவது கவிதையாகவும் அமைந்தது.

‘1983 ஆம் ஆண்டு ஜுலை 23,25 களில்’ என்ற தலைப்பில் அமைந்த இக்கவிதை அவரது ‘முத்து நகை’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. யுத்தத்தினால் சீர்குலைந்து போயிருக்கும் தமிழ்_ முஸ்லிம் உறவைப் பலப்படுத்த அர்ப்பணிப்போடு இயங்கிய ஒருவர். இனங்களுக்கிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துகின்ற விடயங்களை இவரது எழுத்துக்கள் மூலம் தரிசிக்க முடிகின்றது. அதிக தமிழ் பற்றுமிக்கவர். நல்ல மனிதநேயமிக்க பண்பாளர்.

கலைஞர் கருணாநிதியின் புதினமான ‘பண்டாரவன்னியன்’ நூலை 1600 கவிதைகளில் காவியமாகப் பாடியிருக்கிறார். கலைஞர் கருணாநிதி அதைப் பார்த்து வியந்து வாழ்த்தும் வழங்கியிருக்கிறார்.

நமது நாட்டில் காவியம் பாடக் கூடிய ஓரிருவரில் ஜின்னாஹ் அவர்களும் ஒருவராக விளங்குகிறார். 60 ஆண்டுகளுக்கு மேலாக காவியங்கள் பாடி இன்று தன்னிகரில்லா இலக்கிய இமயமாக உயர்ந்துள்ளார். நல்லதொரு கவிஞன் சிறுவர் இலக்கியப் படைப்பாளியாக மாறும் போது, அவரது எழுத்தின் வீச்சின் சுவை சிறப்பாக அமையும். இதை நாம் ஜின்னாஹ்வின் ஒவ்வொரு சிறுவர் படைப்பிலக்கியத்திலும் கண்டு கொள்ளலாம்.

ஜின்னாஹ் அவர்கள் இந்த இலக்கியப் உலகில் பல்வேறு விருதுகளையும் பரிசில்களையும் பெற்றுள்ளார். இலக்கியச் செயற்பாட்டிலும் ஈடுபாடுடையவர். 2002 இல் இலங்கையில் இஸ்லாமிய மாநாட்டை திறம்பட நடத்திய அனுபவம் மிக்கவராகவும் இருந்துள்ளார். தமிழ், இஸ்லாமிய இலக்கியத்தின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டு வருபவர்களில் முதன்மையானவராகத் திகழ்கின்றார்.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்ற உறுப்பினராகவும் அதன் இலக்கியச் செயலாளராகவும் இலங்கை நூலக சேவைகள் சபையின் நூல் நுண்ணாய்வுக் குழு அங்கத்தத்தவராகவும் கொழும்பு கம்பன் கழக ஆட்சிக் குழு உறுப்பினராகவும் திருமறைக் கலாமன்ற ஆலோசனைச் சபை உறுப்பினராகவும், அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் இலங்கை ஒருங்கிணைப்பாளராகவும் அரசாங்க மின்னியல் ஊடக ஆலோசனைச் சபை உறுப்பினராகவும் இலங்கை கலாசார அமைச்சின் நுண்கலைப் பிரிவு உறுப்பினராகவும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுத் தலைவராகவும் இருந்து தமிழ்ப்பணி ஆற்றினார்.

தலைமுறையினர் இவருடைய சிறப்புக்களை அறிந்து கொண்டாடக் கூடிய படைப்பாளியாக விளங்குகின்றார். பழகுபவர்களுடன் மிகவும் இனிமையாகவும் எளிமையாகவும் பழகக் கூடிய நல்லதொரு மனிதர். 1987 களில் இக்பால் அலி இளமைப் பருவத்தில் தன் தோழர்கள் சகிதம் கண்டியில் இருந்து கொழும்பு சென்று ஒரு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார் எனின், உடன் அவர் எல்லோரையும் வீட்டுக்கு வரச் சொல்லி இலக்கிய விவகாரங்கள் எல்லாம் கதைத்து விட்டு அவரின் நண்பர்கள் அனைவருக்கும் விருந்துபசாரம் செய்து அனுப்பி வைக்கக் கூடிய ஓரு நல்ல மனிதர்.

இந்த நல்ல குணங்கள் அவருடன் ஒட்டி இருப்பதால் கடல் கடந்தும் பல இலக்கிய ஜாம்பவான்கள் அவரை நேசிக்கிறார்கள். இந்தியாவில் அதிகளவு படைப்பாளிகளுடன் அவருக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. அவர்கள் இவரை நன்கு மதிக்கின்றார்கள்.

இவருடைய இலக்கிய ஆளுமைக்கு ‘காப்பியக்கோ 75’ என்ற நூல் மகுடம் சூட்டக் கூடியதாக வெளிக்கொணரப்பட்டுள்ளது. அந்நூலில் ஜின்னாஹ்வின் படைப்பிலக்கியம் பற்றியும் அவருடைய குடும்பப் பின்னணி, வரலாறு, சாதனைகள், பாராட்டுக்கள் போன்ற அனைத்து விடயங்களையும் மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் அந்நூலில் உலகிலுள்ள தமிழ் இலக்கியப் பெருந் தகைமைகள் வியந்து வழங்கிய பாராட்டுக்கள் தக்க சான்றாக அமைந்துள்ளன.

தன் தந்தையின் ஆசிப்பா புலவர் மணி ஷரிப்புத்தீன் மற்றும் எஸ். டி. சிவநாயகம், ​ெடாக்டர் கவி.கா.மு.​ெஷரிப், முதுபெரும் புலவர் கலாபூசணம் கை. க. சிற்றம்பலம், செய்யது முஹம்மது ஹஸன், பேரறிஞர் அப்துற் ரஹீம், கவிக்கோ ​ெடாக்டர் அப்துல் ரஹ்மான், என். எம். கடம்பேஸ்வரன், பன்மொழிப்புலவர் சோ. பத்மநாதன், பேராசிரியர். எஸ். சிவலிங்கராஜா, கலாபூசணம் சைவப்புவலர் சு. செல்லத்துரை, கம்பவாரிதி ஜெயராஜ், கவிஞர் இ. முருகையன், இலக்கியச் செம்மல் செ. குண​ரட்னம், பன்மொழிப் புலவர் த. கனகரத்தினம், பல்கலை வேந்தர் கவிஞர் சில்லையூர் செல்வராசன், கவிஞர் எம். வை. எம். முஸ்லிம், புலவர் ஹிலால் முஸ்தபா (தமிழ் நாடு), க. கருணை ஆனந்தன், புலவர் ப. மு. அன்வர் (மலேசியா), புலவர் மைதீ. சுல்தான் (மலேசியா), கவிராசயோகி கபிலவாணன் (தமிழ் நாடு), கவிஞர் மருதூர்க்கொத்தன், தமிழ்மாமணி அல் அஸுமத், விஷ்வப்பிரம்மம் காந்தன் குருக்கள், கவிமணி மௌலவி எம். எச். எம். புஹாரி, கவிஞர் பெரியதம்பிப்பிள்ளை தருமலிங்கம், தத்துவக் கவிஞர் இ. பதுருதீன்(தமிழ் நாடு), கவிஞர் ஜவாத் மரைக்கார், கவிஞர் ஏ. எம். எம். அலி, புலவர் தனங்கிளப்பு வ. சின்னப்பா, கவிஞர் பாண்டியூரான், கவிஞர் பாலமுனை பாரூக், கவிஞர் கீழ்கரவை கி.குலசேகரன், பெறாமகள் கவிஞர் லுணுகலைஸ்ரீ, கவிஞர். ப. க. மகாதேவா. கவிஞர் சிவலிங்கம் ஆறுமுகம், கவிக்கோ காத்தான்குடி பௌஸ், திருமதி பத்மாவதி சிவலிங்கம், தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர். எம். எம். உவைஸ். பேராசிரியர் கே. எம். மொஹிதீன், பேராசிரியர் கலாநிதி சிலம்பொலி சு. செல்லப்பனார், அமைச்சர். சௌ. தொண்டமான், பேராசிரியர் சபா ஜெயராசா, பேராசிரியர் சோ. சந்திரகேசரம், தெ. ஈஸ்வரன், எஸ். எச். எம் ஜெமீல், மு.பொன்னம்பலம், ஆனந்த விகடன் துணை ஆசிரியர் ஜே. எம். சாலி, தமிழறிஞர் தகவம் வ. இராசையா, புலவர் ஏ. வி. எம். ஜாபர்தீன் (தமிழ்நாடு) நாவலாசிரியர் வ. அ. இராசரத்தினம், முனைவர் க. இரகுவரன், கவிஞர் சோலைக்கிளி, காவியமணி ​ெடாக்டர் அகளங்கன், எஸ். இஸட். எம். மசூர் மௌலானா, தமிழ்மாமணி அஷ்ரஃப் சிஹாப்தீன், ஓவியர் ஆசை இராசையா, ​ெடாக்டர் தி. ஞானசேகரன், மு. சிவலிங்கம், கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ், புலவர் சோம. சிவப்பிரகாசம் (தமிழநாடு), பேராசிரியர் முனைவர் மு. இ. முஹம்மது மரைக்கார், பேராசிரியர் முனைவர் நசீமா அகமது, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், செ. யோகநாதன், ​ெடாக்டர் ஹிமாயா செய்யத், வசந்தி தயாபரன, பேராசிரியர் ​ெடாக்டர் எஸ். முஹம்மது, எஸ் ஐ. நாகூர் கனி, ​ெடாக்டர் எம். எம். நதர்ஷா (புதுக்கல்லூரி), திருச்சி செய்யத் (துபாய்), மா. பாலசிங்கம், என். நஜ்புல்ஹுஸைன், பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன், ​ெடாக்டர் கே. குணராசா, கவிஞர். ஜா.முஹையதீன் பாட்ஷா (தமிழ்நாடு), வடமாகாண முன்னாள் முதல்வர் சீ. வி. விக்கினேஸ்வரன், பேராசிரியர் சொ. சந்திரசேகரன், பேராசிரியர் காரை. செ. சுந்தரம்பிள்ளை, ​ெடாக்டர் பா. முனயமுத்து (தமிழ்நாடு), கவிஞர் வாலி, பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான், தோப்பில் முஹம்மது மீரான், பேராசிரியர் செ. யோகராசா, பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், பேராசிரியர் சா. நசீமா பானு, கே. ஆர். டேவிட், நேசன் அடிகளார், கவிஞர் அதாவுல்லாஹ் (தமிழ நாடு) அ. லெட்சுமணன், கவிஞர் டாக்டர் தாஸிம் அஹ்மது, பாவலர் அ. உசேன் (புதுச்சேரி) விரிவுரையாளர் உசேன் கான் (சென்னை) பேராசிரியர் மு. ஜபார் ஸாதிக் அலி, சுபத்திரா மணியன், மா. பா. சி, பேராசிரியை செல்வி. பேபி (தமிழ் நாடு) மௌ;ளம்ஜி. எம். ஜே. முஹம்மது இக்பால், பேராசிரியர் சேமும முகம்மதலி, பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ், பேராசிரியர் தக்கலை பஷீர், ஏ. பீர்முகம்மது, ஜீவா சதாசிவம், எம். ஏ. எம். நிலாம், அன்னலட்சுமி இராசதுரை, முஸ்டின், கே. எஸ். சிவகுமாரன், ​ெடாக்டர் பெட்ரிக் அந்தோனிப் பிள்ளை, பாத்திமா ஷரிப்புத்தீன் ஆகிய பிரபல்யங்களுடைய வாழ்த்துரையும் மதீப்பீடும் ஜின்னாஹ்வின் பெரும் இலக்கிய ஆளுமையை வெளிக்காட்டி நிற்கின்றன.

1989 முதல் நூலான முத்துநகை முதல் இற்றைவரை 29 நூல்களை எழுதி வெளியிட்டதுடன் இன்னும் மூன்று நூல்களை அச்சகத்தில் உள்ளதாகவும் அறிகின்றோம்.

அவருடைய அன்பு மனைவி அன்னை வெளியீட்டகத்தின் செயலாளர் ஹம்ஸியா பரீதா ஷரீபுத்தீன், சுமார் 45 நூல்கள் வரை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இவரது வெளியீடுகள் ஒவ்வொன்றும் கனதியும் தூர இலக்கும் கொண்டவையாகக் காணப்படுகின்றன.

ஜின்னாஹ் ஷரிப்புதீனின் உலகளாவிய இலக்கியப் பயணங்களுக்கு உடனிருந்து உதவுவதோடு அவரது கடினமான உழைப்பில் முதல் ஆனந்தம் கொள்பவர். இந்தத் தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள். மூன்று ஆண்களும் வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்,

அதேவேளையில் ஜின்னாஹ்வுக்கு உடன் பிறந்தோர் 16 பேர். புலவர் மணி ஷரிபுத்தீன் அவர்களுக்கு 17 பிள்ளைகள் மிகப் பெரிய குடும்பம். இத்தகைய பெரும் கவிஞரின் இலக்கிய முயற்சிகளுக்கு தகைமைச் சான்றுகளும் விருதுகளும் பரிசில்கள் எண்ணற்றவை கிடைக்கப் பெற்றுள்ளமை போற்றத்தக்கதாக அமைந்துள்ளது.

கவிஞர் ஜின்னாஹ் அவர்கள் இஸ்லாமிய இலக்கியத்துக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு அளப்பரியது. அவை தத்ரூபமாக பல்கலைக்கழக மட்டங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக சமூகத்திற்கு மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற முதன்மைக் கவிஞர் என்ற தகுதிக்கு உரிமையாளராக இவர் மதிக்கப்படுகிறார். அவர் நீடூழி காலம் தொடர்ந்து இலக்கியப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT