Thursday, May 16, 2024
Home » இணக்கப்பாடு காணப்படாமல் தீர்வுகளை எட்டுவது எவ்வாறு?

இணக்கப்பாடு காணப்படாமல் தீர்வுகளை எட்டுவது எவ்வாறு?

by gayan
February 3, 2024 6:00 am 0 comment

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் தலைமைக்கான தெரிவில் இணக்கப்பாடு இல்லையென்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. கட்சிக்கான தலைவரைத் தெரிவு செய்வதில் இரு வாரங்களுக்கு முன்னர் பெரும் இழுபறிகள் நிலவின. இறுதியில் தலைவர் தெரிவுக்கான தேர்தல் நடத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைவராகத் தெரிவாகியிருந்தார். இத்தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தோல்வியுற்றார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலை இலங்கையில் அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் உற்றுநோக்கினர். இலங்கையில் தமிழர்கள் மத்தியில் மாத்திரமன்றி ஏனைய இனத்தினர் மத்தியிலும் இவ்விவகாரம் முக்கியத்துவம் பிடித்திருந்தது.

அத்துடன் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களும் தமிழரசுக் கட்சியின் ஒவ்வொரு அசைவையும் ஆவலுடன் நோக்கினர். வடக்கு, கிழக்கு தமிழினத்தின் ஆரம்பகாலத்து பாரம்பரியக் கட்சி அதுவென்பதால் இயல்பாகவே அக்கட்சி மீதான ஆர்வம் தமிழ் மக்களிடம் உள்ளதைத் தவிர்க்க முடியாது.

கட்சியின் தலைவர் தெரிவின் பின்னர் நடைபெற்ற பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவிலும் முரண்பாடுகள் நிறைந்திருந்ததைக் காண முடிந்தது. தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெறுகின்ற உள்முரண்பாடுகள் தொடர்பாக ஒருதரப்பினர் வேதனைப்படுகின்ற அதேவேளை, மற்றொரு தரப்பினர் வேடிக்கை பார்க்கின்றனர் என்பதை அக்கட்சியினர் புரிந்து கொள்ளாதிருப்பதுதான் வேதனையளிக்கின்றது.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவப் பதவிகளுக்காக அக்கட்சிக்குள் பலர் ஆசைப்படுகின்றனர் என்பது தெரிகின்றது. அதேசமயம் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அக்கறையைப் பார்க்கிலும், பதவியைக் கைப்பற்றுவதிலும் போட்டாபோட்டியிலுமே அக்கட்சியினர் பலர் குறியாக உள்ளதைக் காண முடிகின்றது.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனக் கூறக்கூடிய பாரம்பரியக் கட்சியொன்று அழிந்தொழிந்து போய்விடலாகாது என்ற உண்மையான கரிசனையை பலரிடம் காண முடியவில்லை. ஏட்டிக்குப் போட்டியான காரியங்களை முன்னெடுப்பதிலேயே பலரும் குறியாக நின்றதைத்தான் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் தெரிவுக்கான தேர்தல்களின் போது காண முடிந்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களே கட்சியின் எதிர்காலம் பற்றி உண்மையான அக்கறை கொண்டிருப்பதையும், பின்னரான காலப்பகுதியில் வந்து கட்சியில் ஒட்டிக் கொண்டவர்கள் ஏட்டிக்குப் போட்டியான திரைமறைவுக் காரியங்களில் ஈடுபட்டிருந்ததையும் நன்றாகவே கண்டுகொள்ள முடிந்தது.

தலைவர் தெரிவுக்கான தேர்தலின் போது, தனது வாக்கை யாருக்கு அளித்தேன் என்பதை அரசியல் பக்குவமற்ற விதத்தில் ஒருசிலர் வெளிப்படையாகச் சொல்கின்ற வேடிக்கைத்தனத்தையும் அங்கு காண முடிந்தது. அன்றைய காலத்தில் புத்திஜீவிகளால் கட்டியெழுப்பப்பட்ட பெரும் கட்சியொன்று இவ்வாறு விமர்சனத்துக்கு உள்ளாவதையிட்டு, மூத்த உறுப்பினர்கள் மாத்திரமே கவலைப்படுவரென்பது உறுதி.

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் குரலாகவும், அம்மக்களின் ஏகபிரதிநிதித்துவமிக்கதாகவும் விளங்குகின்ற கட்சியே தமிழரசுக் கட்சியென்பதில் எதுவித ஐயப்பாடும் கிடையாது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அடையாளமாகவும் அக்கட்சியைக் கூற முடியும். முப்பது வருட காலமாக நிலவிய கொடிய யுத்தத்திலும் கூட அக்கட்சியை சிதைந்து விடாமல் காப்பாற்றுவதில் பங்களித்தவர்கள் பலர்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் சார்பாக ஜனநாயக ரீதியிலான அரசியல் பிரதிநிதித்துவமொன்று இயங்குவதை புலிகள் இயக்கம் உள்ளூர ஒருபோதும் விரும்பியதில்லை என்பதே உண்மை. யுத்தம் நிலவிய முப்பது வருட காலமும் தமிழரசுக் கட்சியாகட்டும் அல்லது தமிழரசுக் கட்சியின் ஒன்றுசேர்ந்த அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பாகட்டும்… அக்கட்சியினர் முழுமையான சுயாதீனத்துடன் இயங்கினர் என்று கூற முடியாது. அவர்கள் நெருக்குதல்களையே நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கொண்டனரென்பது வெளிப்படையானது.

ஆனாலும் அக்கட்சியை சிதைந்து போகாமல் இதுநாள் வரை மூத்த தலைவர்கள் கட்டிக்காத்து வந்துள்ளனரென்பதை மறுக்க முடியாது. அவ்வாறு கட்டிக்காக்கப்பட்டு வந்த தமிழரசுக் கட்சியானது எதிர்காலத்தில் சிதைந்து போய்விடுமோ என்பதுதான் தமிழ் மக்கள் பலரின் கவலையாகும்.

தமிழ் மக்களுக்கென்று தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல உள்ளன. தமிழர் தரப்பு அரசியல் ரீதியில் பிளவுபட்டு நின்று இயங்குவதால் இப்பிரச்சினைகளை ஒருபோதுமே தீர்க்க முடியாது. தமிழர் தரப்புக்குள் முதலில் அரசியல் ரீதியில் ஒற்றுமை அவசியமாகும். தமிழரசுக் கட்சிக்குள் மாத்திரமன்றி, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்துக் கட்சிகளிடையேயும் ஐக்கியம் ஏற்படுவது முதலில் அவசியம்.

தமிழர் தரப்புக்குள் ஒற்றுமை நிலவினாலேயே ஆளும் தரப்புடன் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்தி தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழியேற்படுமென்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT