Home » Tamil News

லொஹான் ரத்வத்த இராஜாங்க அமைச்சரானார்

- ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

by Rizwan Segu Mohideen
January 29, 2024 10:34 am 0 comment

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் (29) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் (2020), இரத்தினக்கல்‌, தங்க ஆபரணங்கள்‌ மற்றும்‌ கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்‌ இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சராகவும் பின்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்று (2021), அங்கிருந்த 2 அரசியல் கைதிகளை முழந்தாலிடச் செய்து, தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்வேன் என அச்சுறுத்தல் விடுத்ததாக லொஹான் ரத்வத்தே மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

குறித்த விடயத்தை அடுத்து, வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்தே இராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய சுதந்திர முன்னணி கட்சியைச் சேர்ந்த ஜயந்த சமரவீர இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுகங்கள் வழங்கல் வசதிகள் இயந்திரப் படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, லொஹான் ரத்வத்த கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவரும் தனது பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT