Wednesday, May 15, 2024
Home » வீதிவிபத்துகளை கட்டுப்படுத்த உதவும் CCTV தொழில்நுட்பம்

வீதிவிபத்துகளை கட்டுப்படுத்த உதவும் CCTV தொழில்நுட்பம்

by mahesh
January 27, 2024 6:00 am 0 comment

வீதிகளில் வாகனப் போக்குவரத்துக் குற்றங்களைக் கண்காணிப்பதற்கு CCTV கண்காணிப்பு கமரா தொழில்நுட்பம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தியானது நேர்மையான முறையில் வாகனம் செலுத்துகின்ற சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்கு மிகுந்த நிம்மதியை ஏற்படுத்தியிருக்குமென்பதில் எதுவித சந்தேகமுமில்லை.

உலகில் வாகனவிபத்துகளில் மக்கள் உயிரிழக்கின்ற நாடுகளில் இலங்கையையும் பிரதானமாகக் குறிப்பிட முடியும். எமது நாடு சிறியதாக இருந்த போதிலும், சராசரியாக எடுத்து நோக்கினால் அன்றாடம் எட்டு தொடக்கம் பத்துப் பேர் வரை வாகனவிபத்துகளினால் உயிரிழப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். நாட்டின் மொத்த சனத்தொகையை எடுத்துக் கொண்டால் இந்த உயிரிழப்புகள் அதிகமென்றே கூற வேண்டும்.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாகனங்களின் எண்ணிக்ைக அதிகரிப்புக்ேகற்ப, வாகன விபத்துக்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. வீதிகள் நன்கு சீரமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக சாரதிகள் தங்களது வாகனங்களை அதிவேகமாகச் செலுத்துகின்றனர். அதன் காரணமாக வாகனவிபத்துகள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

அதுமாத்திரமன்றி, தனியார்பஸ்காரர்கள் போட்டிபோட்டுக் கொண்டு வாகனம் செலுத்துவதால் பாரதூரமான விபத்துகள் சம்பவிக்கின்றன. தனியார்பஸ் சாரதிகளில் பலர் வீதியில் செல்கின்ற பயணிகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லையென்று பலரும் கூறுகின்றனர். இதுபோன்றுதான் முச்சக்கரவண்டிச் சாரதிகளும் வீதிப்போக்குவரத்து விதிமுறைகளைப் பொருட்படுத்தாமல் வாகனம் செலுத்துகின்றனர். அதேசமயம் மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்ைகயும் நாட்டில் அதிகரித்துள்ளது. வாகனப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களில் மோட்டார்சைக்கிளோட்டிகளும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

நாட்டில் வாகனவிபத்துகள் அதிகரிப்பதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. தனியார்பஸ் சாரதிகளில் சிலர் போதைப்பொருட்களை பாவித்த நிலையில் வாகனங்களைச் செலுத்துவதும் விபத்துக்கான காரணம் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களும் பலர் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவ்வாறானவர்கள் தமக்கு மாத்திரமன்றி, தமது பஸ்ஸில் பயணம் செய்பவர்களுக்கும் உயிராபத்தை ஏற்படுத்துகின்றனரென்பதை மறந்து விடலாகாது.

வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்ைககளால் விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு முடியவில்லை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். போக்குவரத்துப் பொலிசாரின் நடவடிக்ைககள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் குரலாக இருக்கின்றது.

நாட்டிலுள்ள சந்திகளில் உள்ள வீதிச்சமிக்ஞை விளக்குகளின் அருகில் நின்றவாறு, வாகனசாரதிகள் தவறிழைக்கின்றனரா என்று கண்டுபிடிப்பது மாத்திரமே போக்குவரத்துப் பொலிஸாரின் கடமை அல்ல. அதற்கும் அப்பால் அவர்கள் அதிக விடயங்கள் மீது கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.

போதைப்பொருட்களைப் பயன்படுத்திய நிலையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் சரிவர கடைப்பிடிக்கப்பட்டு வாகன விபத்துக்கள் கட்டுப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். வாகன சாரதிகள் மாத்திரமன்றி, வாகனமோட்டிகளும் வீதிப்போக்குவரத்து சட்டதிட்டங்களை மதித்துச் செயற்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் வீதிகளில் நிம்மதியாக நடமாடுவதற்கு வழியேற்படும்.

CCTV கண்காணிப்பு கமரா தொழில்நுட்பமானது வாகன விபத்துகளைக் குறைப்பதற்கு சிறந்ததொரு தீர்வாக அமையுமென்று நாட்டு மக்கள் நீண்ட காலமாகவே கோரி வருகின்றனர். உலகின் பல நாடுகளில் இந்தத் தொழில்நுட்பம் நீண்ட காலமாகவே நடைமுறையில் இருந்து வருகின்றது. அதன் காரணமாக அந்நாடுகளில் வீதிவிபத்துகள் மிகவும் குறைவாகவே இடம்பெறுகின்றன. அதுமாத்திரமன்றி, வாகனசாரதிகளும் மிகவும் அவதானமாகவே வாகனத்தைச் செலுத்துகின்றனர்.

அந்நாடுகளில் வீதிகளின் பிரதான சந்திகள் மற்றும் கடவைகளில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வீதிச்சமிக்ைஞ விளக்குகளை அலட்சியம் செய்தவாறு எந்தவொரு வாகனமும் செல்லும் போது, அச்சாரதி இழைக்கின்ற குற்றம் உடனடியாகவே CCTV கமராவினால் பதிவு செய்யப்படுகின்றது. அக்குற்றத்துக்கான அபராதமும் உடனடியாகவே குறித்த சாரதிக்கு வந்து சேருகின்றது. அவர் குற்றத்திலிருந்து ஒருபோதுமே தப்பிக் கொள்ள முடியாது.

அதன் காரணமாக வீதிகளில் வாகனம் செலுத்துகின்ற போது, சாரதிகள் மிகவும் அவதானமாகவே உள்ளனர். வீதிவிபத்துகளும் குறைவடைகின்றன. அபராதம் செலுத்த வேண்டி வருமென்ற எச்சரிக்ைகயுணர்வு அவர்களிடம் எந்நேரமும் காணப்படுகின்றது.

இவ்வாறான CCTV கண்காணிப்பு கமரா தொழில்நுட்பம் இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்படுவது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும். சந்திகளில் ஒன்றையொன்று முந்திக் கொண்டு ஓடுகின்ற எந்தவொரு வாகனமும் குற்றத்திலிருந்து தப்பிக்ெகாள்ள முடியாது. வீதிச்சமிக்ைஞ விளக்குகளுக்கு முன்னுரிமையளித்து அவதானத்துடன் வாகனம் செலுத்துகின்ற சாரதிகளுக்கும் இதன் மூலம் பாதுகாப்புக் கிடைக்கின்றது. இந்தத் தொழில்நுட்பமானது கொழும்பில் மாத்திரமன்றி நாட்டின் பல இடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT