Monday, May 20, 2024
Home » சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நீதி அமைச்சரிடம் கோரிக்கை
வேலணையில்

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நீதி அமைச்சரிடம் கோரிக்கை

by Gayan Abeykoon
January 17, 2024 1:00 am 0 comment

யாழ்ப்பாணம், வேலணை பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவிடம் அப்பிரதேச பொது அமைப்புப்  பிரதிநிதியொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்மராட்சியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்தில்  நேற்று  செவ்வாய்க்கிழமை காலை  நீதி அமைச்சருக்கும் கிராம மட்ட சகவாழ்வு மன்ற உறுப்பினர்களுக்கும் இடையில்  நடைபெற்ற சந்திப்பின் போதே, வேலணை கிழக்கு மத்தி பிரதேச  பிரதிநிதி இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

இந்த சந்திப்பு  தொடர்பாக வேலணை கிழக்கு மத்தி பிரதேச பிரதிநிதி தெரிவித்த போது,

“வேலணை பிரதேசத்தில் கடற்றொழில் மற்றும் விவசாயமும் பிரதான தொழில்களாக உள்ளன. கால்நடை வளர்ப்பால் அதிகளவான மக்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், கால்நடைகளை திருடி அவற்றை இறைச்சிக்காக பயன்படுத்தப்படும்  சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.  பசு உள்ளிட்ட மாடுகள் திருடப்படுவதுடன், தினமும் சராசரியாக 3 மாடுகள்வரை திருடப்படுகின்றன.  இதனால் மக்கள் வாழ்வாதார ரீதியாக வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக பிரதேச செயலக மற்றும் மாவட்ட மட்டம்வரை   கொண்டு சென்றபோதிலும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

இதேவேளை,  வேலணை நீர்வளம் குறைந்த பிரதேசமாக உள்ள நிலையில் நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது.  இங்கு சட்டவிரோத மணல் அகழ்வு அதிகளவில் இடம்பெறுவதால், குடிநீர் உவர்நீராக மாறுகின்றது.  1990 – 2019 வரையான காலப்பகுதிக்கிடையில்  வேலணையில் 70 சதவீதமான நன்னீர் கிணறுகளில் உவர்நீராக மாறியுள்ளன. எனவே, வேலணை மக்களுக்கு பாரிய சவால்களாக காணப்படும் கால்நடை திருட்டு மற்றும் மணல் அகழ்வு பிரச்சினைகளுக்கு  உரிய தீர்வு கிடைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என்றார்.

சாவகச்சேரி விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT