Thursday, May 16, 2024
Home » நாட்டின் முன்னேற்றத்துக்கு தேசிய நல்லிணக்கமே அவசியம்

நாட்டின் முன்னேற்றத்துக்கு தேசிய நல்லிணக்கமே அவசியம்

by mahesh
January 17, 2024 6:00 am 0 comment

இலங்கையின் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இம்முறை யாழ்குடாநாட்டில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தின் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இத்தேசிய வைபவத்தில் பிரதம அதிதியாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் கலாநிதி விஜேதாச கலந்து கொண்டார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலின் இத்தேசிய வைபவம் இந்து சமயப் பாரம்பரியங்களில் அடிப்படையில் இடம்பெற்றதோடு முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இத்தேசிய வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, ‘நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் நாடொன்றை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் இன்றியமையாததாகும். பல்லின மக்கள் வாழும் நாடொன்றில் தேசிய நல்லிணக்கம் காணப்படாவிட்டால் அந்நாடு முன்னேற்றப்பாதையில் செல்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும்.

அந்த வகையில் அற்ப அரசியல் நலன்களை முன்னிறுத்தி கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களில் காணப்பட்ட தவறுகள் மற்றும் பிழைகளின் விளைவாக 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இந்நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. அதன் விளைவாக மக்கள் பலவிதமான நெருக்கடிகளுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளானார்கள். இந்நெருக்கடி அரசியலிலும் கொதிநிலையை தோற்றுவித்தது. அதன் விளைவாக அன்றைய பிரதமரும் அரசாங்கமும் பதவி விலகும் நிலை உருவானது. அந்த நிலையில் அன்றைய ஜனாதிபதியும் கூட சொற்ப காலத்தில் பதவி விலகினார்.

இந்த நிலையில் நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத இக்கட்டான சூழல் உருவானது. அந்த நிலையில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி நாட்டின் தலைமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றார். அவர் நாட்டின் தலைமையை ஏற்றதோடு நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை பரந்த அடிப்படையில் ஆரம்பித்தார். அந்த வேலைத்திட்டங்கள் குறுகிய காலம் முதல் பயனளிக்கத் தொடங்கின. அதன் விளைவாக நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அசௌகரியங்களும் கட்டம் கட்டமாக நீங்கத் தொடங்கின. பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் மக்கள் முகம் கொடுத்த நெருக்கடிகளும் பாதிப்புக்களும் தற்போது பெரும்பாலும் நீங்கியுள்ளன. ஆனாலும் அந்த நெருக்கடியின் தாக்கங்கள் நிலவவே செய்கின்றன.

நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்வதற்குரிய வேலைத்திட்டங்கள் தொடராக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பயனாக தற்போது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுகின்றது. என்றாலும் நாட்டில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் வலுவான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த நல்லிணக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும். அதன் ஊடாக நாட்டை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

பல்லின மக்கள் வாழும் எந்தவொரு நாட்டினதும் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் தேசிய நல்லிணக்கம் மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறான நல்லிணக்கத்தைக் கொண்டுள்ள நாடுகளும் மக்களும் தான் பொருளாதார ரீதியில் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேநேரம் அற்ப அரசியல் நலன்களை அடைந்து கொள்ளும் நோக்கில் கடந்த காலங்களில் சிலர் முன்னெடுத்த தவறானதும் பிழையானதுமான கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களின் விளைவாகவே நாடு பலவித நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் நிலைமைக்கு உள்ளானது. பல்லின மக்கள் வாழும் இலங்கையைத் தொடர்ந்தும் முன்றே்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் மிகவும் அவசியம். அதனையே நீதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் பல மட்டங்களிலும் உணரப்பட்டுள்ளளது.

அதற்கேற்ப நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டை பொருளாதார ரீதியில் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும். எந்த நாளும் மூன்றாம் மண்டல நாடாகவும் வளர்முக நாடாகவும் இருக்க முடியாது. அதனால் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்றகாக முன்னெடுக்கப்டும் வேலைத்திட்டங்களுகக்கு ஆதரவலும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தை உண்மையாக விரும்பும் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பும் அதுவேயாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT