Saturday, May 11, 2024
Home » தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சீர் செய்யும் நடவடிக்கை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சீர் செய்யும் நடவடிக்கை

- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் பாரிய சொத்து இழப்புகள் தவிர்ப்பு

by Prashahini
January 17, 2024 11:44 am 0 comment

வெள்ள அனர்த்தத்தினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் காரணமாக மேற்கொண்ட முன்பாதுகாப்பு நடவடிக்கைகளினால் பாரிய சொத்து இழப்புக்கள் தவிர்க்கப்பட்டிருப்பதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் கடந்த 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சீர்செய்து, பல்கலைக்கழகத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்காக உபவேந்தரின் நேரடி கண்காணிப்பில் ஊழியர்களினால் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

தற்போது பல்கலைக்கழகத்துக்குள் இருந்த வெள்ளம் வடிந்து வருகின்ற நிலையில் தாழ்வான சில இடங்களில் தற்போதும் நீர் தங்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது. மேலும் கட்டடத் தொகுதிகளுக்குள் உட்புகுந்த வெள்ள நீரினால் தளபாடங்கள், உபகரணங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பயனாக ஊழியர்களின் மேலான ஒத்துழைப்புடன் சொத்து இழப்புக்களை குறைக்க கூடியதாக இருந்தது.

எவ்வாறாயினும் வெள்ள நீரை அகற்றி, கட்டடங்களையும் சூழலையும் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தோடு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டால் கையாள வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

அஸ்லம் எஸ். மெளலானா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT