Monday, May 13, 2024
Home » 72 தொழிற்சங்கங்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில்

72 தொழிற்சங்கங்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில்

- தமக்கும் DAT கொடுப்பனவு அதிகரிப்பை வழங்குமாறு போராட்டம்

by Prashahini
January 16, 2024 12:14 pm 0 comment

72 தொழிற்சங்கங்கள் இன்று (16) காலை 6.30 முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை (17) காலை 8.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவீ குமுதேஷ் தெரிவித்தார்.

வைத்தியர்களுக்கான சேவைக்கால இடையூறு, வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு எனப்படும் DAT கொடுப்பனவை ரூ. 35,000 இலிருந்து ரூ. 70,000 ஆயிரமாக ரூ. 35,000 இனால் அதிகரிக்கவுள்ளதாஈ நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அண்மையில் முன்வைத்த யோசனையை அமைச்சரவை அங்கீகரித்திருந்தது.

இந்த தீர்மானத்திற்கு எதிராகவே பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (16) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளன.

வைத்தியர்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவு அதிகரிப்பை வழங்குவது நியாயமற்றது என ஏனைய சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், மருந்தாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், மருந்து கலவையாளர்கள் மற்றும் பூச்சியியல் அதிகாரிகள் உள்ளிட்ட 72 சுகாதார சங்கங்களின் உறுப்பினர்கள் இதில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

எவ்வாறாயினும், மகப்பேற்று சிகிச்சை நிலையங்கள், சிறுவர் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் எதிர்காலத்தில் பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சரின் குறித்த வேண்டுகோள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தை கோரவில்லை எனவும் பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதனிடையே, சில தொழிற்சங்கங்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்காமல் தீர்வினை வழங்குவதற்காக அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்க தீர்மானித்துள்ளன.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இன்றைய தினமும் அதிகாரிகளுக்கு தமது சங்கம் சந்தர்ப்பத்தை வழங்குவதாக, அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT