Home » ‘தெளிவத்தை ஜோசப் கதைகள்’ பெருந்தொகுப்பு தமிழ் இலக்கியத்துக்கு கிடைத்த அருங்களஞ்சியம்

‘தெளிவத்தை ஜோசப் கதைகள்’ பெருந்தொகுப்பு தமிழ் இலக்கியத்துக்கு கிடைத்த அருங்களஞ்சியம்

by gayan
January 13, 2024 6:02 am 0 comment

தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து, முழுமையான தொகுப்பு ஒன்றினைக் கொண்டுவரும் முயற்சி பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது. 1979இல் யாழ்ப்பாணத்திலிருந்து வைகறை வெளியீட்டின் மூலம் தெளிவத்தை ஜோசப்பின் முதலாவது சிறுகதைத் தொகுப்பினை ‘நாமிருக்கும் நாடே’ என்ற தலைப்பில் வெளியிட்டதன் நீட்சி போலவும் இது அமைந்தது. ‘நாமிருக்கும் நாடே’ என்ற தொகுப்பிற்காக அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்து பேருழைப்பை நல்கிய சிவம் கமலநாதன், எஸ்.பாலசுப்ரமணியம் ஆகியோரின் மறைவினைக் கண்ணீரோடு நினைவு கூருகிறேன். அவுஸ்திரேலியாவில் வாழும் மூக்கையா நடராஜா, கனடாவில் வாழும் வி.தேவராஜ் ஆகியோர் இன்றும் எம் முயற்சிக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வருகின்றனர்.

தன்னை நாடி வரும் அனைத்து எழுத்தாளர்களுக்கும், அவர்களின் கைவசம் இல்லாத கதைகளை எல்லாம் தனது சேகரத்திலிருந்து தேடிக்கொடுத்துதவிய தெளிவத்தை ஜோசப் அவர்களிடம் அவர் எழுதிய கதைகளே இல்லாமல்போனது துரதிர்ஷ்டவசமானது.

‘நாமிருக்கும் நாடே’ (1979) என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கூனல், சிலுவை, ஒரு தோட்டத்துப் பையன்கள் படம் பார்க்கப் போகிறார்கள் ஆகிய கதைகள் வெளியான இதழ்கள், பத்திரிகைகள் என்பன அழிந்துபோய்விட்டதென்றே கூறவேண்டும்.

குறிப்பாக, பதுளையில் வெளியான ‘அல்லி’ சஞ்சிகை பதுளைக்குள்ளேயே உலவிய, சில இதழ்களே வெளியாகி நின்றுபோன நிலையில், அந்த சஞ்சிகையை ஒரு பதினான்கு ஆண்டுகள் கழித்துத் தேட முனைந்தபோது அதனை எங்குமே பெற்றுக் கொள்ளமுடியவில்லை. தொகுப்பு வேலைகள் முடிந்து, அந்தக் கதையைப் பெறமுடியாது என்ற தீர்மானத்தில் அச்சுக்குத் தயாரானபோது, மூக்கையா நடராஜா ஓர் அற்புத சஞ்ஜீவியைப் போல அந்த ‘அல்லி ‘ இதழை, பண்டாரவளையிலிருந்து கொண்டுவந்து தந்தார்.இன்று அந்த சஞ்சிகையையும் தொலைத்துவிட்டோம். உண்மையில் தெளிவத்தை ஜோசப்பின் அந்தக் கதை காப்பாற்றப்பட்டது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நான் தமிழகம் சென்றிருந்தபோது, தெளிவத்தை ஜோசப் நலங் குன்றி இருக்கிறார் என்றும்,சிறுகதைத் தொகுப்பை உடன் கொண்டுவர வேண்டுமென்றும் இலங்கையில் இருந்து எச்.எச்.விக்ரமசிங்க, மல்லியப்புசந்தி திலகர் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.

லண்டன் திரும்பியதும் முதல் வேலையாகக் கைவசம் உள்ள கதைகளைச் சேர்த்து, தொகுப்பைக் கொண்டுவந்து விடலாம் என்று முனைந்தபோதுதான், தேடியேயாகவேண்டிய கதைகளின் பட்டியல் கவலையைத் தந்தது.

இந்த வேளையில்தான் எள் என்றால் எண்ணெயாகச் செயற்படும் எச்.எச்.விக்கிரமசிங்க இந்தச் சுமையைத் தன் தோளில் சுமக்க முன்வந்தார். வீரகேசரி நடத்திய மலையகச் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகளைத் தொகுத்து, எஸ்.எம்.கார்மேகம் அவர்கள் 1971 இல் ‘ கதைக்கனிகள்’ என்ற தலைப்பில் அத்தொகுதியை வெளியிட்டபோது, அதன் பின்னணியில் நின்று உழைத்தவர்கள் கே.கோவிந்தராஜும் எச்.எச்.விக்ரமசிங்கவும்தான்.

தொடர்ந்த -அயராத நூல் பதிப்புப்பணிகள் மலையக இலக்கிய வரலாற்றின் பதிப்புத் துறையில் விக்ரமசிங்கவுக்கு தனி இடத்தைக் கொடுத்திருக்கிறது. அலைச்சலையும் உழைப்பினையும் துணிச்சலையும் வேண்டி நிற்கும் பயணம் இது.

தெளிவத்தை ஜோசப் மீது சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாஞ்சை கொண்டிருந்த விக்கிரமசிங்க அவர்கள் இந்தச் சிறுகதைத் தொகுப்பாக்க முயற்சியைத் தனது சொந்தப் பணி போலக் கருதிச் செயலில் இறங்கினார்.

பெற்றோலும் டீசலும் கிடைக்காத தருணத்தில் கொழும்பின் அருஞ்சுவடிகள் திணைக்களத்திற்குச் சென்று வருவது எவ்வளவு காசை விழுங்கியிருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. மின்வெட்டு காரணமாக, அருஞ்சுவடிகள் திணைக்களம் மிகச் சொற்பநேரமே இயங்கியது. ஒவ்வொரு கதையையும் தேடிப் பிரதி எடுப்பது என்பது இன்னும் பணத்தைக் கொட்டியாக வேண்டிய நிலை. அருஞ்சுவடிகள் திணைக்களத்திலும் தேடிச் செல்லும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் அனைத்தும் இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை.

பத்திரிகை அலுவலகங்களின் நூலகங்களிலும், அவர்களின் பத்திரிகைச் சேமிப்புகளிலும் சென்று கதைகளைத் தேடிப் பாடுபட்டிருக்கிறார். சிறுகதைகள் வெளியான ஆண்டுகள் என்று ஜோசப் அவர்கள் உத்தேசமாகக் கூறிய ஆண்டுகளில், குறித்த பத்திரிகையில் ஒரு கதையும் வெளியாகவில்லை என்பதும் தெரிய வருகிறது.

இந்த எல்லாச் சிரமங்களின் மத்தியிலும் ஜோசப்பின் தேடி மாளாத 18 சிறுகதைகளை விக்கிரமசிங்க தேடிச் சேகரித்து அனுப்பியிருந்தார். என்னிடமும் சில மிக அரிதான கதைகள் இருந்தன.விக்ரமசிங்க இல்லை எனில், இந்தப் பெருந்தொகுப்பு சாத்தியமில்லை.

இவ்வளவிற்கும் அப்பால், சென்னையின் பிரபலமான எமரால்ட் வெளியீட்டகத்தின் உரிமையாளர் ஒளிவண்ணன் அவர்களுடன் பேசி, அவர்களின் வெளியீடாக இவ்வாண்டில் வெளியாவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மேற்கொண்டிருந்தார். இந்த ஆண்டில் சென்னை புத்தகக் கண்காட்சியில் புதிய 60 தமிழ், ஆங்கில நூல்களை அந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. எனக்கும் விக்ரமசிங்கவிற்குமான தொடர்பு 55 ஆண்டு காலங்களைத் தொடுகிறது. சிற்றெறும்பின் சுறுசுறுப்புடன் செயற்படுபவர் என்று அமரர் இர.சிவலிங்கம் விக்ரமசிங்கவை வர்ணித்ததில் வியப்பில்லை.

எங்கள் தொடர்பு அனைத்துமே மலையக நூல் வெளியீடுகள் சார்ந்தனவாகவே அமைந்தன. விக்ரமசிங்க விரிந்த தொடர்பு வட்டத்தைக் கொண்டவர்.

‘தெளிவத்தை ஜோசப் கதைகள்’ என்ற இப்பெருந்தொகுப்பு மலையகத்திற்கு மட்டுமல்ல, தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் அருங்களஞ்சியமாகும்.

மு.நித்தியானந்தன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT