Friday, May 3, 2024
Home » எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்தி அனைவரும் ஒரே இலங்கையர்களாக முன்னேற வேண்டும்

எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்தி அனைவரும் ஒரே இலங்கையர்களாக முன்னேற வேண்டும்

- கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி

by Prashahini
January 8, 2024 1:38 pm 0 comment

அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கி சமூக, கலாசார, சமய மற்றும் கல்வி ரீதியாக நாட்டில் வலுவான அடித்தளத்தை உருவாக்க முன்னோடியாகப் பணியாற்றியவர் மறைந்த டி.பி. ஜயதிலக்க முன்னெடுத்தது போன்ற வேலைத்திட்டமொன்று நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நிகழ்காலத்தை விட எதிர்காலத்தில் கவனம் செலுத்தி ஒரே இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07) பிற்பகல் நடைபெற்ற கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் 125 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் 1898 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அனகாரிக தர்மபாலவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்பகாலத் தலைவராக டி.பி. ஜயதிலக தெரிவு செய்யப்பட்டதோடு நாட்டின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய பௌத்த அமைப்பாக கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் நாட்டிற்கான பரந்த நோக்கத்தை நிறைவேற்றி வருகின்றது.’ஒரே இலங்கைக்கான கருத்தாடல்’என்ற தொனிப்பொருளில் இவ்வருட ஆண்டு நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு மலர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், பத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சங்கத்தின் பிரதானிகள் , ஆட்சிக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி இணைந்து கொண்டார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு 125 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த சங்கம் இலங்கையின் வரலாற்றை உருவாக்கிய சங்கம் என்றே கூற வேண்டும். அந்தக் காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்தவ இளைஞர் சங்கங்கள் நிறுவப்பட்டன. அப்போது நாங்கள் பௌத்த மறுமலர்ச்சியுடன் இருந்தோம். ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல தேரர், ஒல்கட் போன்றவர்கள் எமது நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு தலைமை தாங்கினார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் உலகின் முதலாவது இளம் பௌத்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சங்கத்தின் நோக்கு மேற்கத்திய நாடுகளின் நோக்கை விட வேறுபட்டது. பௌத்த கல்வியில் நாட்டை முன்னேற்றுவதற்கு இச்சங்கம் பெரும் உதவியாக இருந்தது. டி பி. ஜயதிலக இதற்கு தலைமை வழங்கினார். அவரின் பாரியார் களனி ரஜமஹா விகாரைக்கும் பெரும் சேவை செய்தார்.

இளைஞர்பௌத்த சங்கத்தை எமது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெரும் சக்தியாக நாங்கள் கருதுகிறோம். 125 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த சங்கத்தை கௌரவிக்க விரும்புகிறேன். கொழும்பு கோட்டையில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணி இன்னும் 99 வருடங்களுக்கு இச்சங்கத்திற்கு வழங்கப்படுகின்றது. மேலும், அந்த இடத்தைச் சுற்றிலும் சுற்றுலா பகுதியாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் தொனிப்பொருள் ‘ஒரே இலங்கைக்கான கருத்தாடல்’ என்பதாகும். இதுவே இன்றைய நாட்டுக்குத் தேவை. இன்று அனைவரும் எமக்கு ஒரு இலங்கை தேவை என்று கூறுகிறார்கள்.
யுத்தத்துடன் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் 2025ஆம் ஆண்டாகும் போது தீர்வு வழங்க எதிர்பார்க்கிறோம். இடம்பெயர்ந்தோர் மற்றும் காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான அரசியல் தீர்வுகள் வழங்கப்படும்.

அத்துடன், நாகதீப விகாரையை மையமாகக் கொண்ட சமய நிலையத்தை மேலும் விரிவுபடுத்தவும், யாழ்ப்பாணத்தில் தனித்துவமான இந்து ஆலயத்தை நிறுவவும் எதிர்பார்க்கிறோம். நாம் ஒன்றுபட்டு முன்னேறுவோம். இது குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாட வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்ப அவர்களின் ஆலோசனைகள், திட்டங்கள், ஆலோசனைகள் தேவை.

நாம் நிகழ்காலத்தையன்றி எதிர்காலத்தை பற்றி நோக்க வேண்டும் . டி. பி. ஜயதிலக்க உருவாக்கியது போன்ற திட்டம் மீண்டும் அவசியம். மேலும், அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நாடாக முன்னேறக்கூடிய ஒரு திட்டம் தேவை.

இலங்கை ஆரம்பகாலம் முதலே விவசாயத்தை மையமாகக் கொண்ட நாடாகும். பாதுகாப்பான விவசாயத்தின் மூலம் நமது உணவுப் பயிர்களை ஏற்றுமதி செய்யலாம். இது போன்ற பாரிய செயற்திட்டங்கள் எம் முன்னால் அதிகம் இருக்கிறது.

மேலும், ஊழல் தடுப்பு ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கான குழு அரசியலமைப்பு சபையால் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், நமது நிதி விதிமுறைகளுக்குப் பதிலாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின்படி நிதிக் கட்டுப்பாடு குறித்த அறிக்கையை அளித்துள்ளோம்.

எவ்வாறு விலைமனு கோருவது, நிதியை எவ்வாறு செலவு செய்வது உள்ளிட்ட அனைத்தும் அதில் இடம் பெற்றுள்ளன. அதனை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் தனி ஆணைக்குழுவை நியமிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. அரச நிதி அதிகாரிகளும் தங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

மேலும் இந்த நாட்டில் அரசியல் கட்சிகளை நிர்வகிக்கும் சட்ட விதிகள் தேவை. உலகின் பிற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் அரசியல் செயல்முறைகளை ஆய்வு செய்ய ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய விடயம்.

நாம் உலகளாவிய ரீதியில் செயற்படுவதாக இருந்தால், நாம் ஏனைய நாடுகளுடன் இணைய வேண்டும். அதற்கு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தேவை. சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளது. அதற்காக இந்தியாவுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்து வருகிறது. சீனாவுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் தாய்லாந்துடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குறிப்பாக தாய்லாந்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு நாடாக எமக்கு மிகவும் முக்கியமானது.

மியான்மாருடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. மியான்மாரில் பிரச்சினைகள் இருந்தாலும் அதில் நாம் ஈடுபட வேண்டியதில்லை. லாவோஸ் மற்றும் வியட்நாமுடன் நமது உறவுகளைப் பேண வேண்டும். அவர்களின் பொருளாதாரம் உலகிற்கு திறந்து விடப்பட்டது போல் நமது பொருளாதாரத்தையும் உலகிற்கு திறந்து விட முடியும். அவர்கள் வெற்றி பெறும்

போது, நாம் எப்படி தோல்வியடைவோம்? கம்போடியாவைக் கருத்தில் கொண்டால், அவர்கள் மிகக் குறுகிய காலத்தில் பெரும் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர். சில கட்சிகள் வழமையான விதத்தில் சிந்தித்தாலும், அனைவரும் ஒன்றிணைந்து ஒரே பொருளாதாரத் திட்டத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் தற்போதைய தலைவர் மகேந்திர ஜயசேகர,

கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் இக்கூட்டத்தில் உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் பெருமையடைகிறேன். கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் உலகின் மிகப் பழமையான மற்றும் முக்கியமான சங்கமாகும். 1898 இல் டி. பி. ஜயதிலக எனும் பௌத்த இளைஞர் மற்றும் சி. எஸ். திசாநாயக்க என்ற இளம் கத்தோலிக்கரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம், நாட்டின் தேசிய மற்றும் மத ஒற்றுமைக்காகவும் நாடுகளை ஒன்றிணைப்பதற்காகவும் பெரும் சேவையை ஆற்றின.

மேலும், தேசிய அரசியலில் பிரபலமானவர்களாக வலம் வந்த டி. பி. ஜயதிலக, டி. எஸ். சேனநாயக்க, சேர் ஏர்னஸ்ட் சில்வா போன்ற இளம் தலைவர்கள் கொழும்பு இளம் பௌத்த நிழலில் வளர்ந்தவர்கள். கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் ஊடாக 1919-1920 காலப்பகுதியில் தேசிய சபை ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் தேசிய சபை ஆரம்பிக்கப்பட்டபோது தமிழ் தலைவர்களான பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம், முஸ்லிம் தலைவர்களான சேர் ராசிக் பரீத், டி. பி. ஜாயா போன்றவர்கள் இதன் ஊடாக தேசிய அரசியலில் ஈடுபட்டார்கள்.

கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் ஊடாக 125 வருட வரலாற்றில் இந்த தேசியத் தலைமை கட்டியெழுப்பப்பட்டது. நம் அனைவருக்கும் ஒரே நோக்கம் உள்ளது. நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வளமான நாட்டை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும். கடந்த காலங்களில் நடந்த தவறுகளை சரி செய்து கொண்டு முன்னேறுவது எப்படி என்பதை அனைவரும் ஆலோசிக்க வேண்டும். இது சாத்தியமில்லை என்றால், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் வெற்றி பெற முடியாது. இந்த நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கு தேவையான கட்டமைப்பு என்ன என்பது பற்றி அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி கருத்தாடல் ஒன்றை நடத்த வேண்டும்.

இலங்கை அமரபுர பீட பதில் மகாநாயக்க தேரரும் இலங்கை அமரபுர மகா சங்கத்தின் தலைவருமான வண. கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரர், எத்கந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதி, ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரர் மற்றும் இந்து, கத்தோலிக்க, முஸ்லிம் மதத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு இளைஞர் பௌத்த சங்க ஆட்சிக் குழுவின் தலைவர் அஜித டி சொய்சா, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரசன்ன அபேகோன், வெளிநாட்டு தூதுவர்கள், கல்விமான்கள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT