Tuesday, May 21, 2024
Home » மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று!

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று!

by mahesh
January 6, 2024 6:00 am 0 comment

கொவிட் தொற்றில் இருந்து உலகம் மீண்டெழுந்து விட்டது என்றுதான் உலக மக்கள் அனைவரும் நிம்மதி கொண்டிருந்தனர். கொவிட் தொற்று உலகை விட்டு முற்றாக நீங்கி விட்டதென்றும், எதிர்காலத்தில் அதுபற்றிய அச்சமே தேவையில்லையென்றும்தான் மக்கள் எண்ணியிருந்தனர்.

ஆனால் உண்மை அதுவல்ல… கொவிட் தொற்று உலகை விட்டு நீங்கியிருந்த வேளையில், அந்த வைரஸின் திரிபுகள் உலகை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. கொரோனா வைரஸின் புதிய திரிபொன்று உலகை தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. எமது அயல்நாடான இந்தியாவில் அதன் தாக்கங்கள் சற்று அதிகமாகவே உள்ளன. இந்தியாவில் கேரள மாநிலத்தில் அந்த வைரஸ் வேகமாகப் பரவியுள்ளதுடன், ஓரிருவர் அதற்குப் பலியாகியம் உள்ளனர்.

ஜே.என்.1 என்ற அந்த கொரோனா திரிபு வைரஸ் தமிழ்நாட்டிலும் பலருக்குப் பரவியுள்ளது. அந்த பிறழ்வு வைரஸ் இலங்கையில் பரவியுள்ளதாக இதுவரை உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இலங்கையில் அந்த வைரஸ் இதுவரை பரவியுள்ளதா அல்லது இல்லையா என்பதை உறுதிபடக் கூற முடியாமலுள்ளது.

வைரஸ் நுண்கிருமிகளின் இயல்பு இவ்வாறானதுதான். அக்கிருமிகள் திரிபடைந்து கொண்டேயிருக்கும் இயல்பைக் கொண்டுள்ளன. அதிலும், கொரோனா வகை வைரஸ்கள் விரைவில் திரிபடைந்து செல்லும் இயல்பைக் கொண்டுள்ளன. உலகில் கொரோனா தொற்று தோற்றம் பெற்றதில் இருந்து இதுவரை ஏராளமான திரிபுகள் உருவாகியுள்ளன. ஆனாலும் முதன் முதலில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் ஏற்படுத்திய உயிரிழப்புகளை அதன் பின்னர் உருவாகிய பிறழ்வு வைரஸ்கள் ஏற்படுத்தவில்லை.

அவ்வாறே தற்போது உலகை மீண்டும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற ஜே.என்.1 பிறழ்வு வைரஸும் பாரியளவிலான உயிரிழப்புகளை இன்னும் ஏற்படுத்தவில்லை. இந்தியாவில் ஓரிரு உயிரிழப்புகளே இதுவரை சம்பவித்துள்ளன. இந்த வைரஸ் தொற்று விரைவாகப் பரவினாலும் கூட, முன்னரைப் போன்று உயிரிழப்புகள் அதிகளவில் சம்பவிக்காதென்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது.

ஆனாலும் இந்த விடயத்தில் மக்கள் அலட்சியமாக இருந்து விட முடியாது. மீண்டுமொரு பெருந்தொற்றையும் அதன் பாதிப்புகளையும் தாங்கிக் கொள்ளக் கூடிய வல்லமை எமது நாட்டு மக்களுக்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் இல்லையென்பதுதான் உண்மை. கொவிட் தொற்றின் பாதிப்புகளை இலங்கை மக்களும் அனுபவித்து வந்துள்ளனர் என்பதை மறந்து விடலாகாது. ஆகவே கொவிட் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

கொவிட் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்குரிய வழிகள் எவையென்பது நமது மக்களுக்குத் தெரியாத விடயமல்ல. கொவிட் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகப் பிரதானமானது முகக்கவசம் ஆகும்.

கொவிட் நோயாளி ஒருவரிடமிருந்து நீங்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவதிலிருந்து முகக்கவசம் உங்களுக்கு அதிகூடிய பாதுகாப்பைத் தருகின்றது. அதேசமயம் நீங்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தால், நோய்க்கிருமிகளை நீங்கள் மற்றவருக்குப் பரப்புவதிலிருந்தும் முகக்கவசங்கள் பாதுகாப்பு வழங்குகின்றன. எனவே வீட்டை விட்டு வெளியே செல்லும் சமயங்களில் முகக்கவசம் அணிந்து கொள்வதை மறந்துவிடலாகாது.

நாட்டுமக்களை மீண்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் அண்மையில் வேண்டுகோள் விடுத்தும் இருந்தனர்.

அதேசமயம் முகக்கவசங்கள் நல்ல தரமானதாகவும், முகத்தில் நன்கு பொருந்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். முகக்கவசம் தரமானதாக இல்லையென்றால் அதனை அணிந்து கொள்வதால் எதுவித பயனும் கிடையாது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நாட்டில் கொவிட் பரவல் தொடர்பில் அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையிலும் ஜே.என்.01 உபபிறழ்வு பரவலாமென்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே சுகாதாரப் பிரிவினர் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.கொரோனா வைரஸின் புதிய திரிபான ஜே.என்.01 கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் 41 நாடுகளில் பரவியுள்ளது. இலங்கையில் பரவும் அபாயம் இருக்கின்றதா என்பது தொடர்பில் அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை அந்தத் தொற்று பரவும் அபாயம் குறைவாக இருந்த போதிலும், பொதுமக்கள் அவதானமாக செயற்படுவது பாதுகாப்பானதாகும். நாட்டில் கொவிட் கட்டுப்பாட்டுக்கான பரந்த தடுப்பூசி திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், நாட்டு மக்கள் இத்தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு முகக்கவசம் அணிந்து கொள்வது உகந்தது ஆகும்.

முன்னைய கொவிட் காலத்தில் கடைப்பிடித்ததைப் போன்று மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம் உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT