Thursday, May 2, 2024
Home » போர்ட் சிட்டி வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

போர்ட் சிட்டி வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 15 முடிவுகள்

by Prashahini
January 2, 2024 3:04 pm 0 comment

– விவசாயத் துறையை நவீனமயப்படுத்தல்
– சர்வதேச குறுஞ்செய்தி சேவை டிஜிட்டல் நிலையத்தை செயற்படுத்தல்

ஆசிரி போர்ட் சிட்டி ஹொஸ்பிட்டல் (தனியார்) கம்பனியை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆரம்ப வணிகமாகப் பெயரிடல் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரி போர்ட் சிட்டி ஹொஸ்பிட்டல் (தனியார்) கம்பனியால் 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டின் கீழ் கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்காக விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குதல் தொடர்பான வழிகாட்டல்) கட்டளைகளின் 2(ஆ) இன் கீழ் குறித்த கருத்திட்டத்தை விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான தகைமைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த ஏற்பாடுகளின் கீழ் குறித்த விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்காகவும், குறித்த கருத்திட்டத்தை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகமாக வர்த்தமானி அறிவித்தல் விதியொன்றின் மூலம் வெளியிட்ட பின்னர், குறித்த விதியை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02.முன்மொழியப்பட்ட இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLTFTA)

முன்மொழியப்பட்ட இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 9 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் 2023.12.18 தொடக்கம் 2023.12.20 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெற்றது. தற்போது குறித்த கலந்துரையாடல் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், சட்ட ரீதியானதும், நிறுவன ரீதியானதுமான பிரச்சினைகள் செயற்பாட்டுக் குழுவுக்கு சட்ட ரீதியான பரிசீலனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இவ் ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி வரியைத் தளர்த்துகின்ற வேலைத்திட்டத்தின் கூருணர்வுப் பட்டியலில் வகைப்படுத்தப்பட்ட இணைந்த வகைப்படுத்தப்பட்ட குறியீட்டு இலக்கத்திற்கு ஏற்புடைய திரட்டு இறக்குமதி வரிகளிலிருந்து 50% வீதம், ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்து 16 ஆவது ஆண்டு ஆரம்பிக்கும் போது ஒரே தடவையில் நீக்குவதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகளை உட்சேர்த்துக் கொள்வதற்கு, அதற்கமைய இறக்குமதி வரியைத் தளர்வுபடுத்தும் காலப்பகுதி 18 ஆவது வருடத்தை 16 ஆவது வருடமாகக் குறைப்பதற்கும், 9 ஆவது சுற்றுக் கலந்துரையாடலில் இரு தரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். குறித்த உடன்பாடுகளுக்கமைய தொடர்ந்து வரும் காலங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.விவசாயத் துறையை நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம்

குறைப்பயன்பாட்டு வளங்களை இலங்கையில் விவசாயத் துறையில் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்தி நாட்டின் உற்பத்தியின் விளைதிறனை அதிகரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, விவசாயிகளின் வருமானம் மற்றும் விளைதிறனை அதிகரித்தல், சந்தை ஒழுங்குறுத்துகை, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்திகளை அதிகரித்தல், இளைஞர் சமூகத்தை விவசாயத் தொழிற்றுறையில் கவர்ந்திழுப்பதன் மூலம் விவசாய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல் மற்றும் தகவல் தொழிநுட்பம் விவசாயத் துறையில் பயன்படுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக விவசாயத் துறையை துரிதமாக நவீனமயப்படுத்த வேண்டியுள்ளது. விவசாயத் துறை நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் படிமுறைகளுக்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

• 2048 ஆண்டாகும் போது அபிவிருத்தியடைந்த இலங்கையைக் கட்டியெழுப்பும் பணிப்பொறுப்புக்கு விவசாயத் துறையின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் தேசிய கொள்கை சட்டகமொன்றைத் தயாரித்தல்
• விவசாயத் துறை நவீனமயப்படுத்தலுக்கான செயலகமொன்றை ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவுதல்
• விவசாயத் துறை நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளை பயனுள்ள வகையிலும் நிலைபேறான வகையில் சரியான ஒருங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் “விவசாயத் துறை நவீனமயப்படுத்தல் சேவைகள் மற்றும் அறிவு மையத்தை” தாபித்தல்
• முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கமநல அபிவிருத்திச் சட்டம் உள்ளிட்ட ஏனைய ஏற்புடைய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளல்

04. ஜெனரல் ஸ்ரீமத் ஜோன கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் துருக்கி விண்வெளி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் துருக்கி விண்வெளி நிறுவனத்திற்கும் இடையிலான மனிதவள அபிவிருத்தி ஒத்துழைப்புக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதன்மூலம் துருக்கி விண்வெளி நிறுவனத்தில் சர்வதேச உள்ளகப் பயிற்சி வேலைத்திட்டத்திற்காக பயிலுநர்களாகப் பங்கேற்பதற்கு ஜெனரல் ஸ்ரீமத் ஜோன கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வாய்ப்புக்கனைப் பெற்றுக்கொள்வத உள்ளிட்ட பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.அணு மற்றும் ஏனைய கதிர்வீச்சுப் பொருட்கள் சட்டவிரோதமாக போக்குவரத்துச் செய்வதைத் தடுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய அணு மற்றும் பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான பரிந்துணர்வு ஒப்பந்தம்

அணு மற்றும் ஏனைய கதிர்வீச்சுப் பொருட்கள் சட்டவிரோதமாக போக்குவரத்துச் செய்வதைத் தடுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய அணு மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடு மற்றும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான பரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த வரைபு தொடர்பாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை, இலங்கை அணுசக்தி சபை, வெளிவிவகார அமைச்சு மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களம் போன்ற நிறுவனங்களின் அவதானிப்புக்கள் மற்றும் சட்டமா அதிபரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. ரிக்ரி சொஃப்ர்வெயார் பீரீஈ லிமிட்டட் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம்நிலை வணிகமாக பெயரிடல்

ரிக்ரி சொஃப்ர்வெயார் தனியார் கம்பனி 100,000 அமெரிக்க டொலர்கள் ஆரம்ப நேரடி வெளிநாட்டு முதலீட்டுடன் கூடிய தகவல் தொழிநுட்பம் தொடர்பான வணிகமொன்றை கொழும்பு துறைமுக நகரத்தில் ஆரம்பிப்பதற்காக முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2023 ஆண்டு 02 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (மூலோபாய முக்கியத்துவம் கொண்ட வணிகங்களுக்காக விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்கல் தொடர்பான வழிகாட்டல்) கட்டளைகளின் 2(ஆ) இன் கீழ் குறித்த கருத்திட்டத்தை விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான தகைமைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, அதற்கமைய, குறித்த ஏற்பாடுகளின் கீழ் குறித்த விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்காகவும், குறித்த கருத்திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட வணிகமாக வர்த்தமானி அறிவித்தல் விதியொன்றின் மூலம் வெளியிட்ட பின்னர், குறித்த விதியை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கையில் தொழிற்பயிற்சி கட்டம் II கருத்திட்டத்திற்கு ஜேர்மன் குடியரசின் தொழிநுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளல்

இலங்கையில் தொழிநுட்பவியல், தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் “இலங்கையில் தொழிற்பயிற்சி கட்டம் II கருத்திட்டம்” நடைமுறைப்படுத்துவதற்காக 2023 – 2026 காலப்பகுதியில் 07 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஜேர்மன் குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கருத்திட்டத்தை ஜேர்மன் குடியரசு சார்பாக அமுலாக்கல் முகவராண்மை நிறுவனமாக GIZ நிறுவனம் செயற்படும். முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக GIZ நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஒப்பந்த வரைபுக்கான வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அவதானிப்புக்கள் மற்றும் சட்டமா அதிபரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கன் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய அரசு மற்றும் வட அயர்லாந்து அரசுக்கும் இடையிலான சமுத்திர அரசுகளுக்கிடையிலான பங்காண்மை நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐக்கிய இராச்சிய அரசு மற்றும் வட அயர்லாந்து அரசு சமகாலத்தில் சமுத்திர ஆரோக்கியம் தொடர்பான உலகளாவிய தொடக்க முயற்சிகளுக்கு தலைமைத்துவம் வகித்து வருகின்றது. அதற்கமைய, 2030 ஆண்டாகும் போது உலகளாவிய சமுத்திரங்களில் குறைந்தபட்சம் 30% வீதத்தைப் பாதுகாப்பதும், சமுத்திரப் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான நீலப் பொருளாதாரத்தை அடைவதற்காக 500 மில்லியன் யூரோ பெறுமதியான “Blue Planet” நிதியத்தை உருவாக்குவதற்கும், பங்காள நாடுகளுக்கு அதன்மூலம் தேவையான நிதியுதவி வழங்குவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஐக்கிய இராச்சியத்தின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய நடவடிக்கைகள் திணைக்களத்தால் “Blue Planet” நிதியத்தின் விருப்புக்களை அடைவதற்காக இருதரப்பு மற்றும் பல்தரப்பு மட்டத்திலான வேலைத்திட்டங்கள் பல திட்டமிடப்பட்டுள்ளன.

குறித்த வேலைத்திட்டங்களில் ஒன்றான சமுத்திர அரசுகளுக்கிடையிலான பங்காண்மை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு தகைமை வாய்ந்த நாடாக இலங்கை அடையாளங் காணப்பட்டுள்ளது.அதற்கமைய, சமுத்திர அரசுகளுக்கிடையிலான பங்காண்மை நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஒத்துழைப்புக்காக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சிய அரசு மற்றும் வட அயர்லாந்து அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு ஏற்புடைய ஏனைய அமைச்சுக்கள் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் கருத்துக் கேட்டறிதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. மெல்சிரிபுர பண்ணைக்கு சொந்தமான 05 ஏக்கர் காணித்துண்டில் விளையாட்டு மைதானமொன்றை அமைப்பதற்கு வழங்கல்

தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மெல்சிரிபுர பண்ணையில் 05 ஏக்கர் காணியில் பொது விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிப்பதற்காக இப்பாகமுவ பிரதேச சபைக்கு ஒப்படைக்குமாறு வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பண்ணையில் மெதமுல்ல பிரிவில் 05 ஏக்கர்களை ஒதுக்கி வழங்குவதற்கு தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் சபை உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த காணித்துண்டை இப்பாகமுவ பிரதேச சபைக்கு ஒப்படைப்பதற்காக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விளையாட்டு ஒத்துழைப்புக்களுகான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் ரஷ்யாவுக்கும் இடையில் விளையாட்டு ஒத்துழைப்புக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு 2021.07.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பின்னர் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒருசில திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டமையால், எதிர்பார்க்கப்பட்டவாறு ஒப்பந்தத்தில் கையொப்பமிட முடியாமல் போயுள்ளது. குறித்த திருத்தங்களை உட்சேர்த்து மீண்டும் தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. நியூசிலாந்தில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தை நிறுவுதல்

நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தை நிறுவுவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. திருகோணமலை சீனன்குடா துறைமுகத்தின் மேற்புற தாங்கி திடலில் 61 எரிபொருள் தாங்கிகளை நிர்மாணித்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் வணிக மாதிரியின் கீழ் அபிவிருத்தி செய்தல்

திருகோணமலை சீனன்குடா துறைமுகத்தின் மேற்புற தாங்கி திடலானது 99 தாங்கிகளைக் கொண்டமைந்துள்ளதடன், 2022.01.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு, அவற்றில் 61 தாங்கிகளை திருகோணமலை பெற்றோலிய முனைய தனியார் கம்பனிக்கு 50 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.குறித்த 61 எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியவளக் கற்கை உள்ளிட்ட அடிப்படை படிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சாத்தியவளக் கற்கை மூலம் இக்கருத்திட்டம் 16 ஆண்டுகளில் 07 கட்டங்களாக அபிவிருத்தி செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது கட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாகப் பயனுறு வாய்ந்த 09 தாங்கிகளை மறுசீரமைப்புச் செய்வதற்கும், கிட்டத்தட்ட 1.75 கிலோமீற்றர் தூர வீதியைப் புனரமைப்பதற்கும், ஏற்புடைய ஏனைய வசதிகளை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிர்மாணித்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் (BOT) எனும் வணிக மாதிரியைப் பின்பற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, முதலாவது கட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கு உத்தேச அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக, குறித்த பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடிப்பதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் (இ – கிராம அலுவலர் தகவல் முறைமை) ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தல்

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் தொழிநுட்ப அமைச்சரால் உருவாக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் (இ – கிராம அலுவலர் தகவல் முறைமை) ஒழுங்குவிதிகள் 2022.12.22 திகதிய 2311ஃ40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளுக்கமைய குறித்த மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மூலம் வினைத்திறனாக சேவைகளை வழங்குவதற்காக இலத்திரனியல் ஆவணங்கள் மற்றும் இலத்திரனியல் அறிக்கைகளைப் பயன்படுத்துவதற்கான வசதிகள் வழங்கப்படும். குறித்த ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக தொழிநுட்ப அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. மீள்வனமாக்கல் மற்றும் தாவரக் காப்புச் சட்டமூலத்தைத் தயாரித்தல்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பாக சட்டகத்தின் கீழ், 2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் வனக்காப்பு ஒட்டுமொத்த நிலப்பரப்பின் 32% வீதமாக அதிகரிப்பதற்கும், வனாந்தரத்தால் உறிஞ்சப்படும் காபனின் அளவை சமகால நிலைமையை விடவும் 7மூ வீதத்தால் அதிகரிப்பதற்கும் இலங்கை உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கான வனமாக்கல், அழிவடைந்து போயுள்ள வனங்களை மீளமைத்தல், வனாந்தரத்திற்கு வெளியேயுள்ள அரச மற்றும் தனியார் காணிகளில் மரங்களை அதிகரித்தல் போன்றன தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான மரநடுகைத் திட்டங்கள் பல்வேறு தரப்பினர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படுவதுடன், அவற்றின் நன்மைகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் கிடைத்தாலும், அதற்காகப் பங்கேற்கின்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் மரங்களின் பயன்களை அதில் பங்கெடுக்கின்ற அனைத்துத் தரப்பினர்களுக்குப் பகிர்ந்தளிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், பொது இடங்களில் மரநடுகையின் மூலம் கிடைக்கின்ற காய்கள், இலைகள், மலர்கள் மற்றும் மரம் போன்ற உற்பத்திகளை மரநடுகையில் பங்கேற்கின்ற தரப்பினர்களுக்கு வழங்குவதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகள் தற்போது இல்லை. அத்துடன், மரநடுகைப் பணிகள் மிகவும் பயனுள்ள வகையில் நடைமறைப்படுத்துவதற்காக நிதிவசதிகளை வழங்குவதற்காக தனியார் துறையில், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக தேசிய மரநடுகை நிதியமொன்றைத் தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பணிகளுக்குரிய ஏற்பாடுள் உள்ளடங்கிய “மீள்வனமாக்கல் மற்றும் தாவரக் காப்புச் சட்டம்” எனும் பெயரிலான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. சர்வதேச A2P (Application – to – Person) குறுஞ்செய்தி சேவை டிஜிட்டல் நிலையத்தை செயற்படுத்தல்

A2P (Application – to – Person) என்பது தொடர்பாடல் மாதிரியாக அமைவதுடன், சாதாரண நபர்கள் அல்லது இறுதிப் பயனர்களுக்க செய்தியை அல்லது செய்தி அறிவிப்பை செய்கின்ற கணணி வேலைத்திட்டமொன்று அல்லது மென்பொருள் போன்ற செயலியாகும். குறுஞ்செய்தி (SMS) சேவைகள் முறைமை பிரஜைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான முக்கியமான தொடர்பாடல் ஊடகமாக வணிகங்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இச்செய்திகள், குறுஞ்செய்திகள் (SMS), பல் ஊடக செய்தி (MMS) அல்லது வேறு விதமான செய்திகளாக அனுப்புவதற்கு நபரொருவர் நடமாடும் தொகுதியொன்றுக்கு செயலியாகவோ அல்லது முறைமை மூலமாகவோ பகிர்ந்தனுப்பப்படும்.

குறுஞ்செய்தி சேவைகளை விரிவாகப் பயன்படுத்துவதன் மூலம் மோசடி மற்றும் முறைகேடான (Spam) மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக குறுஞ்செய்தி பரிமாற்றங்களை ஒழுங்குறுத்துகை செய்வதற்காக மத்திய குறுஞ்செய்தி சேவை வலையமைப்பு தொகுதி (SMS Firewall) தீர்வு காணப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஐக்கிய இராச்சியத்தின் தனியார் கம்பனியான ஐகெழடிip நிறுவனத்தால் சர்வதேசA2P குறுஞ்செய்தி சேவைகள் நிலையமொன்றை செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன்,குறித்த முன்மொழிவை மதிப்பீடு செய்து விதத்துரைப்புக்களை சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தெசிய கொள்கைகள் அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT