– பெளர்ணமியில் அனைத்து இடங்களும் பூட்டு
எதிர்வரும் கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25, 2023 அன்று நாடு முழுவதும் மதுபானம் விற்பனை நிலையங்களையும் மூடுமாறு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர், மேலதிக ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மதுவரி திணைக்கள அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர வகைப் பிரிவின் கீழ் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான கலால் அனுமதிப்பத்திரம் பெற்ற ஹோட்டல்களுக்கு மேற்படி உத்தரவு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பெளர்ணமி தினமான 2023 டிசம்பர் 26 ஆம் திகதி நாடு முழுவதும் மது விற்பனைக்கான கலால் திணைக்கள அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு, கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.