Monday, May 20, 2024
Home » ஜனாதிபதியுடனான சந்திப்புகளை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள்

ஜனாதிபதியுடனான சந்திப்புகளை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்

by mahesh
December 23, 2023 6:30 am 0 comment

வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியுடனான சந்திப்புகளை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியுடன் தமிழ்க் கட்சிகள் மூன்றுக்கும் மேற்பட்ட சந்திப்புகளை மேற்கொண்டுள்ளன. சந்திப்புகள் பல விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக இந்த சந்திப்பில் வலி. வடக்கு காணிகள் விடுவிப்பது, மாகாண சபை நேரடி நிதிகளை பெறும் தொகையை அதிகரிப்பது, யாழ்ப்பாண விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் கிளிநொச்சி நவீன நகராக்கத் திட்டம் தொடர்பிலும் ஆராய்வதற்கு என்னை நியமித்துள்ளார். இந்த சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், இவ்விடயங்களை கையாள்வதற்கு விசேட நீதிபதிகளை உள்ளடக்கிய விசேட நீதிமன்றமொன்றை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது மாகாண சபை அனுமதியுடன் உயர் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து மூன்று வருடங்களின் பின் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சந்திப்புகளை தமிழ் கட்சிகள் உரிய வகையில் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்” என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT