Wednesday, May 8, 2024
Home » சிம்பாப்வே அணி பயிற்சியாளர் இன்றி இலங்கை சுற்றுப்பயணம்

சிம்பாப்வே அணி பயிற்சியாளர் இன்றி இலங்கை சுற்றுப்பயணம்

by sachintha
December 22, 2023 12:26 pm 0 comment

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டேவிட் ஹோக்டன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டேவிட் ஹோக்டனுக்கு புதிய பொறுப்பு ஒன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் சிம்பாப்வே கிரிக்கெட் சபை திட்டமிட்டிருந்த நிலையில் அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிம்பாப்வே அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் தலைமை பயிற்சியாளருக்கு பதிலாக தொழிநுட்பக் குழு ஒன்றை நியமிக்க சிம்பாப்வே கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி இலங்கை வரும் சிம்பாப்வே அணி இலங்கைக்கு எதிராக தலா மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.

சிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 18 மாதங்களாக டேவிட் ஹோக்டன் செயற்பட்டுவந்தார். அவரின் பதவிக்காலத்தில் சடுதியான முன்னேற்றங்களை சிம்பாப்வே அணி காட்டியிருந்த போதும், இறுதியாக டி20 உலகக் கிண்ணத்துக்கான வாய்ப்பை இழந்திருந்தது.

இவ்வாறான நிலையில் புதிய பாதை ஒன்றில் சிம்பாப்வே அணி செல்ல வேண்டும் என்ற காரணத்துக்காக தன்னுடைய பதவியிலிருந்து விலகியுள்ளதாக டேவிட் ஹக்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை போதைப்பொருள் தடுப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக சிம்பாப்வேயின் இரு வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் சபை இடைநிறுத்தியுள்ளது. சிம்பாவே அணியின் சர்வதேச வீரர்களான வெஸ்லி மதவரே மற்றும் பிரன்டன் மவுடா இருவரும் எந்த ஒரு கிரிக்கெட் செயற்பாடுகளிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

23 வயதான வெஸ்லி மதவரே சிம்பாப்வே அணிக்காக 98 சர்வதேச போட்டிகளில் ஆடி இருப்பதோடு 26 வயதான பிரன்டன் மவுடா 26 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT