Sunday, May 5, 2024
Home » தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியிலும் காசாவில் மற்றொரு போர் நிறுத்தத்திற்கு பேச்சு

தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியிலும் காசாவில் மற்றொரு போர் நிறுத்தத்திற்கு பேச்சு

- மொசாட் தலைவர் – கட்டார் பிரதமர் சந்திப்பு

by Rizwan Segu Mohideen
December 18, 2023 4:05 pm 0 comment

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிய உளவுப் பிரிவுத் தலைவர் போர் நிறுத்தம் ஒன்றுக்கான மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வரும் கட்டார் பிரதமரை சந்தித்து பேசிய நிலையிலேயே புதிய பேச்சுவார்த்தை பற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (16) செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா போர் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் வெற்றி வரை போராடுவோம் என்றும் தெரிவித்தார். இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் காசா இராணுவமற்ற பகுதியாக மாற்றப்படும் என்றும் கூறினார்.

எனினும் காசாவில் வெள்ளை ஆடையுடன் வந்த மூன்று பணயக்கைதிகளை இஸ்ரேலிய இராணுவம் தவறுதலாக கொன்ற சம்பவத்தை அடுத்து நெதன்யாகுவுக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இந்நிலையில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான புதிய பேச்சுவார்த்தைக்கு அறிவுறுத்தியதாக நெதன்யாகும் தெரிவித்துள்ளார்.

வெள்ளைத்துணி ஏந்தி வந்தவர்களை ராணுவம் ஏன் சுட்டது என்பது தெரியவில்லை. ஆரம்பத் தகவல்படி இஸ்ரேலிய இராணுவம் வழக்கமான விதிமுறைகளை மீறிப் பணயக்கைதிகளைச் சுட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் படுகொலையைத் தொடர்ந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் இன்னமும் காசாவில் ஹமாஸ் வசம் உள்ளனர்.

அவர்களை மீட்டுக்கொண்டுவர இஸ்ரேலிய அரசாங்கம் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று டெல் அவிவில் திரண்ட மக்கள் குரல்கொடுத்தனர்.

பணயக்கைதிகள் மிரட்டல் என்று நினைத்துச் சுட்டுக்கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவு தலைவர் டேவிட் பெர்னீ, கட்டார் பிரதமர் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானியை கடந்த வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். காசாவில் மற்றொரு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது மற்றும் பணயக்கைதிகள் மற்றும் பலஸ்தீன கைதிகள் பரிமாற்றம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

ஐரோப்பாவில் இடம்பெற்றிருக்கும் இந்த சந்திப்பானது இஸ்ரேல் மற்றும் கட்டார் மூத்த அதிகாரிகளிடையிலான முதல் சந்திப்பாக அமைந்துள்ளது. கட்டாரின் மத்தியஸ்தத்துடன் ஏற்கனவே ஏழு நாள் போர் நிறுத்தம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் நவம்பர் பிற்பகுதியில் அந்தப் போர் நிறுத்தம் முறிந்தது.

ஹமாஸ் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘எமது மக்கள் மீதான ஆக்கிரமிப்பை முழுமையாக நிறுத்தும் வரை எந்த ஒரு கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தையும் ஆரம்பிக்கப்படமாட்டாது என்று உறுதி அளிக்கிறேன். அனைத்து மத்தியஸ்தர்களுக்கும் எமது அமைப்பு இது பற்றி கூறியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் நேற்றும் (17) காசாவில் சரமாரி தாக்குதல்களை நடத்தியது. தெற்கு காசாவில் கான் யூனிஸ் நகரின் மையப்பகுதியில் சனிக்கிழமை இரவு இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்த அதேநேரம் ஹமாஸ் போராளிகள் ரொக்கெட் குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை பயன்படுத்தி பதில் தாக்குதல்களை நடத்தி வந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து வருகிறது. உணவுகள் குறைந்து, நீர் மோசமடைந்து வருகிறது. மரணம், அச்சம் மற்றும் அழிவுகளே அதிகரித்து வருகின்றன’ என்று எகிப்து எல்லைக்கு அருகில் உள்ள ரபா பகுக்கு இடம்பெயர்ந்திருக்கும் 40 வயதான நான்கு குழந்தைகளின் தாய் சமிரா தெரிவித்தார்.

மத்திய நகரான டெயிர் அல் பலாஹ் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்தது. காசா பகுதியில் இரண்டாவது மிகப் பெரிய நகரான கான் யூனிஸின் கிழக்கு பக்கமாக இருக்கும் பானி சுஹைலா தெற்கு மாநகரப் பகுதியிலும் இஸ்ரேல் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு காசாவில் உள்ள இரு பாடசாலைகளில் சுற்றிவளைத்து சோதனை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று முன்தினம் கூறியது. பலஸ்தீன போராளிகளுடன் தொடர்ந்து கடும் மோதல் நீடித்து வரும் நிலையில் மேலும் இரு படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று உறுதி செய்தது. இதன்படி கடந்த ஒக்டோபர் பிற்பகுதியில் காசாவில் தரைவழி தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. இதே நேரம் காசா பகுதியில் இருக்கும் ஒரே கிறிஸ்தவ தேவாலயத்தில் இஸ்ரேலிய படையினரால் ஒரு கிறிஸ்தவத் தாய் மற்றும் மகள் கொல்லப்பட்டதாக ஜெரூசலத்தின் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட அல் ஜசீரா படப்பிப்பாளர் சமர் அபூ தக்காவின் இறுதிக் கிரியை கான் யூனிஸில் இடம்பெற்றதோடு அதில் பல ஊடகவியலாளர்களும் பங்கேற்றிருந்தனர். இந்தப் போர் ஆரம்பித்தது தொடக்கம் 60க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஆரம்பித்த இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 19,000 ஐ நெருங்கியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காசா மீது இரண்டு மாதங்களைத் தாண்டி இஸ்ரேல் நடத்தும் இடைவிடாத தாக்குதல்களால் அந்த குறுகிய நிலத்தின் பெரும் பகுதி அழிவுக்கு உள்ளாகி இருப்பதோடு காசாவில் 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா கூறியுள்ளது. இது அந்தப் பகுதியின் மக்கள் தொகையில் 90 வீதத்தை நெருங்கும் எண்ணிக்கையாகும். பசி மற்றும் விரக்தியால் காசாவுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை மக்கள் அபகரிக்கத் தூண்டுவதாகவும், இது சமூக ஒழங்கை சீர்குலைக்கும் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது. பெரும் அவலத்தை சந்தித்துள்ள காசா மக்களுக்கு உதவி விநியோகங்களை கொண்டு செல்வதில் சர்வதேச உதவி அமைப்புகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

‘மக்கள் பட்டினியாலும், எதிர்ப்புச் சக்தி பலவீனப்பட்டு பட்டினி மற்றும் நோய்களால் உயிரிழக்க ஆரம்பித்தால் அது பற்றி நான் ஆச்சரியப்படப்போவதில்லை’ என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி தெரிவித்துள்ளார்.

காசாவில் தொடர்பாடல்கள் கடந்த வியாழக்கிழமை துண்டிக்கப்பட்ட நிலையில் அது தொடர்ந்து நீடிப்பதாக அந்த ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு பல பில்லியன் டொலர் இராணுவ உதவிகளை வழங்கி வரும் அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா காசாவில் பொதுக்களின் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறித்து கவலையை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் மற்றும் ஜெர்மனி தலைவர் அன்னலேனா பீர்பொக் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில், ‘காசாவில் நிலையான போர் நிறுத்தம் ஒன்று அவசரமாகத் தேவை’ என்று வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் தனது கெரம் ஷலொம் எல்லைக் கடவை ஊடாக நேரடியாக காசாவுக்கு உதவிகள் செல்ல அனுமதித்துள்ளது.

காசா போர் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில் மத்திய கிழக்கெங்கும் பதற்ற சூழல் நீடித்து வருகிறது. இஸ்ரேலிய இராணுவத்திற்கும் சிரியா மற்றும் லெபனானில் உள்ள போராளிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் இடம்பெற்று வருகிறது. குறிப்பாக லெபனானின் ஈரான் ஆதாவு ஹிஸ்புல்லா போராளிகளுக்கு இடையே தொடர்ச்சியாக பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

லெபனான் எல்லையில் உள்ள மர்கலியொத் பகுதியில் ஒரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்ததாக இஸ்ரேல் இராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது. வான் தாக்குதல் சம்பவம் ஒன்றிலேயே இது நிகழ்ந்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ஒருவர் உறுதி செய்ததாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் போர் ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான செங்கடல் கப்பல் பாதைக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ஆதரவு யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்கள் காரணமாக தமது கப்பல்களின் பயணப்பாதையை மாற்றிக் கொண்டதாக இரு பிரதான கப்பல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை மெர்ஸ்க் மற்றும் ஹபங் லொயிட் என்ற கப்பல் நிறுவனம் தனது பயணப் பாதையை மாற்றிய நிலையிலேயே மடிடேரியன் சிப் கம்பனி மற்றும் சீ.எம்.ஏ சி.ஜி.எம். என்ற கப்பல் நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாக யெமன் கிளர்ச்சியாளர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT