Sunday, May 5, 2024
Home » 2024 முதல் கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள்

2024 முதல் கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள்

- தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்க எதிர்பார்ப்பு

by Prashahini
December 13, 2023 3:36 pm 0 comment

எதிர்வரும் ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை தற்போதைய நிலைமையை விட இலகுவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றி அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவ ,மாணவிகளை கௌரவிப்பதற்காக கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் பரீட்சையில் 100% சித்திகளைப் பெற்று மாணவர்கள் மாத்திரம் கௌரவிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

மாணவர்கள் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்ற புள்ளிகளுக்கு மேலதிகமாக 4 ஆம் மற்றும் 5 ஆம் தரங்களில் வகுப்பறையில் நடத்தப்படும் மதிப்பீட்டில் 30% மதிப்பெண்கள் பெறப்பட வேண்டும் என்றும், இதற்காக மாணவர்களின் தொடர்ச்சியான பாடசாலை வருகையை பேண வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியர்கள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள் என்று சில பெற்றோர்கள் விமர்சிக்கலாம், ஆனால் அவ்வாறான சூழ்நிலைகளுக்கு இடமில்லை என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர்களுக்கும் ,மாணவர்களுக்கும் இடையில் ஆசிரியர்கள் மீது தெளிவான நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

வகுப்பறைகளில் மாணவர்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகிறார்கள் என்பதை பாடசாலை வலயங்கள் கண்காணிக்கின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சிறந்த கல்வியைக் கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்ட பின்லாந்தில் கூட 9 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலைகளில் வகுப்பறை அளவிலான மதிப்பீடுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்றும் 9 ஆம் வகுப்பிற்கு பின்னரே பரீட்சை மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT