Home » நாடு அபிவிருத்தியடைவதற்கு அறிவியல், ஆராய்ச்சி அவசியம்

நாடு அபிவிருத்தியடைவதற்கு அறிவியல், ஆராய்ச்சி அவசியம்

by gayan
December 12, 2023 6:00 am 0 comment

இலங்கை சுதந்திரமடைந்து ஏழு தசாப்த காலம் கடந்து விட்டது. இருந்தும் இன்னும் வளர்முக நாடாகவும் மூன்றாம் மண்டல நாடாகவுமே அடையாளப்படுத்தப்படுகிறது இந்நாடு.

1505 முதல் 1948 வரையான 443 வருடங்கள் வரை இந்நாடு ஐரோப்பியரின் ஏகாதிபத்தியத்திற்கு உள்ளாகி இருந்தது. அதற்கு முன்னரான காலப்பகுதியில் இந்நாட்டுக்குத் தேவையான அனைத்தும் இங்கேயே உற்பத்தி செய்து கொள்ளப்பட்டன. வாசனைத் திரவியங்கள், அரிசி என்பன கூட சில நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உணவு உற்பத்தி விவசாயத்துறையில் முன்னணியில் திகழ்ந்துள்ள இந்நாடு, ஒரு காலத்தில் தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாகவும் விளங்கியுள்ளது.

நாடொன்றின் சுயபொருளாதார மேம்பாட்டுக்குத் தேவையான வளங்களை இந்நாடு இயற்கையாகவே பெற்றுக் கொண்டிருக்கிறது.

பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றுக்கொள்ளும் ​போது பொருளாதார ரீதியில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்தது இலங்கை. ஆனால் அன்று இந்நாட்டை விடவும் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்த பல நாடுகள் இலங்கையை விடவும் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளன. அவற்றில் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் குறிப்பிடத்தக்கன. ஆனால் இலங்கை தொடர்ந்தும் மூன்றாம் மண்டல நாடாகவும் வளர்முக நாடாகவும்தான் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் இந்நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. இவ்வாறானதொரு நெருக்கடியை அண்மைக்கால வரலாற்றில் இந்நாடு சந்திக்கவில்லை. இப்பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாடும் மக்களும் பலவிதமான அசௌகரியங்களையும் பாதிப்புக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் விளைவாக உருவான பொருளாதார மற்றும் அரசியல் கொதிநிலையானது ஆட்சியை மாற்றியமைத்தது. நாட்டின் தலைமைப் பதவியை இழக்கும் நிலைக்கு அன்றைய ஆட்சியாளர்களைத் தள்ளியது. இந்நிலையில் நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

அவ்வேளையில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை துணிந்து ஏற்றார். பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளித்தார். அதனை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டங்களை அவர் ஆரம்பித்தார். அவ்வேலைத்திட்டங்கள் குறுகிய காலப்பகுதி முதல் பிரதிபலன்களை அளிக்கத் தொடங்கியதோடு, பொருளாதார நெருக்கடி காலத்தில் நிலவிய அசௌகரியங்களும் நீங்கி நாடு மறுமலர்ச்சி பாதையில் பிரவேசிக்க வழிவகுத்திருக்கிறது.

நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டும். தொடர்ந்தும் மூன்றாம் மண்டல நாடாகவும் வளர்முக நாடாகவும் இருக்க முடியாது. அதுவே இந்நாட்டை உண்மையாக நேசிக்கும் அனைத்துத் தரப்பினரதும் கருத்தாகும். ஜனாதிபதியின் விருப்பமும் எதிர்பார்ப்பும் அதுதான். அதற்கு ஏற்பவே வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் நவீன டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக விஞ்ஞான, தொழில்நுட்பத் துறைகளில் முன்னேற்றமடைவதன் ஊடாகவே உணமையான பொருளாதார அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடியும். அதுவே பொருளாதார நிபுணர்களின் கருத்துமாகும்.

இன்றைய காலகட்டத்தில் உலகின் பல நாடுகளது முன்னேற்றத்திற்கும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பாரிய பங்களிப்பை நல்கியுள்ளன. இந்நிலையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சித் துறைகளுக்கென முதன்முறையாக அதிகூடிய நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறார்.

இது தொடர்பில் பேராசிரியர் ஸ்ரான்லி விஜேசுந்தரவின் ஜனனதின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, ‘விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேலும் 08 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இத்துறைகளுக்கு இதுவரை இந்தளவு தொகை நிதி ஒதுக்கப்படவில்லை. நாம் முன்னேற வேண்டுமானால், அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றுள்ளார்.

அதேநேரம் ‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய ரீதியில் வளர்ச்சி பெற்று வருகிறது. இத்துறையை இலங்கையில் மேம்படுத்தும் வகையில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ எனவும் குறிப்பிட்டிருக்கிறார் ஜனாதிபதி.

உண்மையில் நாடென்ற வகையில் முன்னேற்றமடைவதற்கு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அத்துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள் பெரிதும் முன்னேற்றமடைந்து வருகின்றன.

ஆகவே நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற உண்மையான நோக்குடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அது பொருளாதார சுபீட்சத்துக்கும் மக்களின் வளமான வாழ்வுக்கும் அளிக்கப்படும் பாரிய சேவையாக அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT