Friday, May 3, 2024
Home » ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கை உற்பத்திகள் ஏற்றுமதி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கை உற்பத்திகள் ஏற்றுமதி

வாய்ப்புகள் ஆராயுமாறு பிரதமர் வலியுறுத்து

by damith
December 4, 2023 8:30 am 0 comment

இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சந்தைகளுக்கு ஆடை உற்பத்திகள்,கடலுணவுப் பொருட்கள், கறுவா மற்றும் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஐரோப்பிய ஒன்றிய தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோவுக்கு (Carmen Moreno) இடையிலான சந்திப்பொன்று (01)அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் இக்கட்டான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய பெறுமதியான ஆதரவுக்கும் பிரதமர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்துவரும் வலுவான உறவையும், GSP பிளஸ் வசதியின் மூலம் ஐரோப்பிய சந்தைக்கான இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

இலங்கையின் கல்வித்துறையின் அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுடனான ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பில் கவனத்தில் கொள்ளப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய பல்கலைக்கழகங்களுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு தூதுவர் தனது ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றிய பூகோள மூலோபாயத்தின் மூலம் ஊக்குவிக்கப்படக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அரச மற்றும் தனியார் முதலீடு, பசுமை எரிசக்தி,பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி, டிஜிட்டல் மயமாக்கல், சுகாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களுக்கான முதலீட்டு கடன்களைப் பெற்றுக்கொள்வதில் ஐரோப்பிய முதலீட்டு வங்கியுடன் ஏற்படுத்தக்கூடிய பங்காண்மை குறித்து இந்த சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலாத்துறையிலுள்ள வாய்ப்புகளை வலியுறுத்திய தூதுவர், இந்த விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT