– அமெரிக்க RM Parks நிறுவனம் இலங்கையின் Shell உடன் இணைந்து செயற்பாடு
அமெரிக்காவின், கலிபோர்னியாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பெற்றோலிய உற்பத்திகள் விநியோகஸ்தரான RM Parks Inc. நிறுவனம் இலங்கையின் Shell PLC நிறுவனத்துடன் இணைந்து, இலங்கைக்கு பெற்றோலி உற்பத்திகளை கொண்டு வருவதற்காக, இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டுள்ளது.
இது, 110 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைக் கொண்ட ஒரு ஒப்பந்தமாகும்.
குறித்த ஒப்பந்தத்தில், இலங்கை முதலீட்டுச் சபை சார்பாக, அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சாந்தனி விஜேவர்தன மற்றும் மணிலால் ஜயசிங்க ஆகியோரும், RM Parks நிறுவனத்தின் சார்பாக நிறுவனத்தின் தலைவர் ஜேசன் கலிசன் (Jason Callison) மற்றும் உப தலைவர் ஜஸ்டின் டிவிஸ் (Justin Divis) ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம்.வீரகோனும் இதில் இணைந்துகொண்டார்.
Shell நிறுவனம் தற்போது ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் ஏனைய பகுதிகளில் முன்னணி எரிசக்தி மற்றும் பெட்ரோலிய இரசாயன உற்பத்திகளின் விற்பனை மற்றும் விநியோக நிறுவனமாக செயற்பட்டு வருகிறது.
RM Parks நிறுவனமானது, கலிபோர்னியாவின் முன்னணி எரிபொருள் விநியோகஸ்தர் என்பதோடு, பெற்றோலிய இரசாயன விநியோகத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமை பெற்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் இயக்குவதன் மூலம் இலங்கையில் பெற்றோலியம் தொடர்பான உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வணிகத்தில் ஈடுபடும்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் மேற்கொள்ளவுள்ள நீண்ட கால ஒப்பந்தத்தின் படி, பெட்ரோல், டீசல், ஜெட் A-1, மண்ணெண்ணெய், உலை எண்ணெய் உள்ளிட்ட பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் ஈடுபடவுள்ளது. அதனுடன் தொடர்புடைய பெறுமதி சேர் தயாரிப்புகளை விரிவுபடுத்துதல் அதன் வணிகத்தின் ஏனைய பெற்றோலியம் அல்லது எரிவாயு உற்பத்திகள், துணை உற்பத்திகள் (விமான எரிபொருள் உள்ளிட்ட), EV சார்ஜிங் மற்றும் கார் கழுவுதல், இணைய கபேக்கள், ATM, உணவகங்கள் போன்ற பெறுமதி சேர் சேவைகளும் இதன் ஊடாக இடம்பெறவுள்ளது.