Friday, May 3, 2024
Home » தொடர்ந்தும் அரையிறுதி எதிர்பார்ப்புடன் இலங்கை இன்று இந்தியாவுடன் களத்தில்

தொடர்ந்தும் அரையிறுதி எதிர்பார்ப்புடன் இலங்கை இன்று இந்தியாவுடன் களத்தில்

by Rizwan Segu Mohideen
November 2, 2023 12:25 pm 0 comment

உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு முன்னேறுவது தொடர்பில் தொடர்ந்து எதிர்பார்ப்புடன் இருக்கும் இலங்கை அணி இன்று இதுவரை தோல்வியுறாத அணியாக ஆடிவரும் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

மும்பை, வான்கடே அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறும் எதிர்பார்ப்பை தக்கவைப்பதற்கான கடைசி வாய்ப்பாக அமையும். மறுபுறம் இந்திய அணி அரையிறுதியை உறுதி செய்யும் எதிர்பார்ப்புடன் களமிறங்கவுள்ளது.

உலகக் கிண்ணத்தில் இந்திய அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் வெற்றியீட்டி 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் வென்றால் போதுமானது. எனவே, இந்திய அணி இன்றைய தினத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேற முயற்சிக்கும்.

மறுபுறம் இலங்கை இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் 2இல் மாத்திரம் வென்று 4இல் தோல்வியை சந்தித்து 4 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. எனவே, இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இதன்படி இலங்கை அணி எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டினால் மொத்தம் 10 புள்ளிகளை பெற முடியும். அதேபோன்று நிகர ஓட்ட விகிதத்தையும் அதிகரிப்பது அவசியமாக உள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா அல்லது கடைசியில் இதே புள்ளிகளை பெற வாய்ப்பு உள்ள அணிகளை இலங்கையால் பின்தள்ளி முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேற முடியும்.

எவ்வாறாயினும் இதற்கு புள்ளிப்பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் எஞ்சிய மூன்று போட்டிகளில் (நேற்றைய போட்டி தவிர்த்து) குறைந்த இரண்டு ஆட்டங்களில் தோல்வியை சந்திக்க வேண்டும்.

எனினும் இலங்கை அணி இந்த உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து சோபிக்கத் தவறி வருகிறது. கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானிடமும் தோற்ற நிலையில் இன்றைய ஆட்டத்திலும் அணியில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக இலங்கை மத்திய வரிசையில் ஏற்பட்டிருக்கும் பலவீனம் இன்னும் சரிசெய்யப்படவில்லை. ஆப்கானுடனான போட்டியிலும் அது வெளிப்பட்டது. எனவே தொடர்ந்து சோபிக்கத் தவறிவரும் தனஞ்சய டி சில்வா நீக்கப்பட்டு அவருக்கு பதில் துனித் வெல்லாளகே அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆரம்ப வரிசையில் குசல் ஜனித் பெரேரா சோபிக்காத நிலையில் திமுத் கருணாரத்ன அழைக்கப்பட்டபோதும் கடந்த போட்டியில் அவரும் ஓட்டங்கள் பெற தவறினார். மாற்று வீரராக அணியில் இணைக்கப்பட்ட துஷ்மன்த சமீரவும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தத் தவறிவிட்டார்.

டில்ஷான் மதுஷங்க மாத்திரமே பந்துவீச்சில் இலங்கை அணிக்கு நம்பிக்கை தருபவராக உள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் பலம்மிக்க இந்தியாவை எதிர்கொள்வதற்கு இலங்கை முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டி உள்ளது.

கடைசியாக ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை எதிர்கொண்டபோது 50 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி நடைபெறும் வான்கடே ஆடுகளம் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சுக்கு உதவக் கூடியதாக உள்ளது. கடந்த 20 போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியின் ஓட்ட சராசரி 258 ஆகும். எனவே, நாணய சுழற்சியில் வெல்லும் அணி அன்றைய தினத்தில் ஆடுகளத்தின் தன்மையை பார்த்தே முதலில் துடுப்பெடுத்தாடுவதா அல்லது பந்துவீசுவதா என்பதைத் தீர்மானிக்க முடியும்.

எவ்வாறாயினும் இந்த மைதானத்தில் தென்னாபிரிக்கா ஆடிய இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட் இழப்புக்கு 399 ஓட்டங்களை பெற்றதோடு பங்களாதேஷுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை இழந்து 382 ஓட்டங்களை குவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT