Monday, May 13, 2024
Home » போர்வை முஹியத்தீன் பள்ளிவாசல் ‘கந்தூரி

போர்வை முஹியத்தீன் பள்ளிவாசல் ‘கந்தூரி

by Rizwan Segu Mohideen
October 27, 2023 3:07 pm 0 comment

மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ தொகுதியில் அமைந்துள்ள போர்வை (கொடப்பிட்டிய) கிராமத்தில் அமைந்துள்ள முஹியத்தீன் பள்ளிவாயலில் ‘ஸெய்யிது ஸாதாத் பக்கீர் முஹியத்தீன்’ வலியுல்லாஹ்வின் ஸியாரம் அமைந்துள்ளது. அன்னாரின் பெயரால் வருடாந்தம் நடத்தப்படும் கந்தூரி வைபவம் இம்மாதம் 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானதோடு நாளை 28ஆம், 29 ஆம் திகதிகளில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு 29 ஆம் திகதி பகல் கந்தூரி வைபவம் இடம்பெற உள்ளது.

அழகுமிகு நில்வளா கங்கைத் தீரத்தில் அமைந்துள்ளது போர்வை எனும் ஊர். வருடாவருடம் ஆறு பெருக்கெடுத்து பல சேதங்களை ஏற்படுத்தினாலும் ஊர் மக்கள் அதற்குப் பழகி விட்டனர். ‘போர்வை முஹியத்தீன் பள்ளிவாயல்’ அருகே ஓடும் நில்வளா கங்கையின் எழில் மனதை ஈர்க்கும் வசீகர சக்தியைக் கொண்டுள்ளது.

இப்பள்ளிவாயல் தென்னிலங்கையில் அமைந்திருந்தாலும் நாடெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் அனைவரினதும் அபிமானத்தைப் பெற்றுள்ளது. முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் ஏனைய மதத்தவர்களும் கூட இப்பள்ளிவாயலில் நம்பிக்கையும் பற்றும் கொண்டுள்ளனர்.

இலங்கை 17 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தரின் ஏகாதிபத்தியத்தில் சிக்கியிருந்த வேளையில், கரையோரப் பகுதிகள் யாவற்றையும் தம் பிடிக்குள் கொண்டு வர கடும் முயற்சி செய்து மாத்தறையையும் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதனால் மாத்தறை, தெவிநுவர, பள்ளியவத்த போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் மீது ஒல்லாந்தர் மேற்கொண்ட கொடுமைகள் தாங்க முடியாத நிலையில் தம் வாழிடங்களையும் சொத்துக்களையும் கைவிட்டு வேறுவேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் தான் ஹொரதொட, மாரம்ப, பள்ளிகேவத்த என்ற இடங்களில் குடியேறினர்.

இக்காலப் பகுதியில் நில்வளா கங்கையின் ஓரமாக அமைந்திருந்த ‘போர்வை’ எனும் ஊர் உன்னிச்சை மரங்கள் நிறைந்த காடாக இருந்த இடத்தில் குடியேற்றமற்ற பகுதியாக காணப்பட்டது.

காலியைச் சேர்ந்த மாணிக்கக்கல் அகழும் முஸ்லிம்கள் இங்கு வந்து பாதுகாப்பாக தங்கியிருந்து மாணிக்கக்கல் அகழும் பகுதியாக இது இருந்துள்ளது. இதற்கான சான்றுகள் போர்வை கிராமத்தில் காணப்படுகின்றன.

இவ்வாறு வியாபார நோக்கமாக வந்த ஒருவர் இன்றுள்ள ஸியாரம் இருக்கும் இடத்தில் ‘மீஸானை சுற்றி பல தென்னை மரங்கள் இருப்பதை கண்டுள்ளார். அதனை அடிப்படையாக வைத்து அல்லாஹ்வின் நல்லடியார் ஒருவர் இங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பதை அவர்கள் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாரம்ப, பள்ளியாவத்த நில்வளா கங்கையின் மறுபக்கமாக வாழ்ந்த மக்கள் படிப்படியாக இப்பக்கமாக குடியேறத் தொடங்கினர்.

இதேவேளை முஸ்லிம்கள் இவ்விடத்திற்கு ‘ஸியாரத்’ (தரிசனம்) செய்ய வந்ததன் காரணமாக வெளியிடங்களிலும் இத்தலம் பிரசித்தி பெற வாய்ப்பு ஏற்பட்டது. அத்தோடு இப்பெரியாரின் பெயரில் வருடாந்தம் ரபீஉல் ஆகிர் 11 ஆம் நாள் கந்தூரி வைபவம் நடத்தப்பட ஆரம்பமானது. இங்கு வருபவர்கள் நேர்த்தியாக ஸியாரத்தை மூடுவதற்காக துணிகளை (போர்வை) கொண்டு போர்த்துவது வழக்கமாகிவிட்டது. அதன்பின் அப்பகுதியை போர்வை என்றழைக்க ஆரம்பித்து இன்றும் போர்வை என்றே ஆகிவிட்டது. இக்கந்தூரி வைபவம் சிறப்பாக நடத்தப்பட அத்துரலிய பிரதேச செயலாளரின் ஒத்துழைப்போடு பள்ளிவாசல் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போர்வையூர் எஸ்.எச்.எம். ஹபீல்டீன்
தங்காலை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT