Saturday, May 18, 2024
Home » ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதை உறுதி செய்தது சர்வதேச ஒலிம்பிக் குழு

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதை உறுதி செய்தது சர்வதேச ஒலிம்பிக் குழு

by sachintha
October 17, 2023 6:00 am 0 comment

லொஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை இணைப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கிரிக்கெட்டுடன் பிஃளாக் கால்பந்து, ஸ்குவாஷ், லக்ரோஸ் மற்றும் போஸ்போல் அல்லது சொப்ட்போல் விளையாட்டு உள்ளடக்கப்படுவதை மும்பையில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் குழுக் கூட்டத்தில் நேற்று (16) உறுதி செய்யப்பட்டது.

இதன்படி ஆடவர் மற்றும் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக்கு குழு ஆறு அணி விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் இணைப்பதற்கு பரிந்துரைத்திருந்தது. எனினும் இந்த போட்டிகளில் எத்தனை அணிகளை இணைப்பது, அணித் தேர்வு பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

“உலகில் இரண்டாவது பிரபலமான விளையாட்டை இணைப்பதை இட்டு ஒலிம்பிக் குழு உற்சாகம் அடைகிறது” என்று 2028 ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் விளையாட்டுகள் பணிப்பாளர் நிகொலோ கம்ப்ரியானி தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கியில் இதற்கு முன்னர் ஒரே ஒரு முறையாக 1900 ஆம் ஆண்டு கிரிக்கெட் இடம்பெற்றது. பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு இடையில் நடைபெற்ற ஒரே ஒரு போட்டியில் பிரிட்டன் 158 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

லொஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிவித்த சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் தலைவர் கிரெக் பார்க்லே குறிப்பிடுகையில்,

“லொஸ் ஏன்ஜல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளமையை நாம் உற்சாகத்துடன் அறிவிக்கிறோம். எம்முடைய மிகச்சிறந்த விளையாட்டை ஒலிம்பிக்கில் காட்சிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேநேரம் மேலும் பல ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்படுமாயின், இது வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிக சிறந்த விடயமாக இருக்கும்” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT