Friday, May 17, 2024
Home » மண்சரிவு அனர்த்த விடயத்தில் மக்களிடம் அவதானம் தேவை!

மண்சரிவு அனர்த்த விடயத்தில் மக்களிடம் அவதானம் தேவை!

by sachintha
October 17, 2023 6:00 am 0 comment

தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இக்காலநிலையின் விளைவாக நாட்டின் சில மாகாணங்களில் அடிக்கடி பலத்த மழை பெய்து வருவதோடு, ஏனைய சில மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது.

இக்காலநிலையின் விளைவாக தாழ்நிலங்கள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், நீரேந்து பிரதேசங்கள் என்பவற்றில் நீர் நிரம்பியுள்ளது. தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக அதன் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டன.

அதேவேளை, இக்காலநிலையின் விளைவாக நில்வளகங்கை கடந்த வாரம் பெருக்கெடுத்தது. அதனால் மாத்தறை மாவட்டத்தின் தாழ்நிலங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. குறிப்பாக அக்குரஸ்ஸ, மாலிம்பட, திககொட, கம்புறுப்பிட்டிய, திக்வெல்ல போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளின் பல தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அத்தோடு களுகங்கை, அத்தனுகலு ஓயா என்பவற்றின் தாழ்நிலங்களிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டது. இதன் விளைவாக அந்தந்தப் பிரதேச மக்கள் பலத்த அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தார்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மலையகத்திலும் அவ்வப்போது கடும்மழை பெய்து வருவதால் பண்டாவளை நகரம் நேற்றுமுன்தினம் வெள்ளத்தில் மூழ்கியது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இச்சீரற்ற காலநிலையினால் மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண்சரிவு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கடந்த சில தினங்களாக முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றது.

அந்த வகையில் பொகவந்தலாவ, தெரேசியா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு தொகுதியொன்றின் பின்புலத்தில் மண்மேடொன்று திடீரென சரிந்து விழுந்ததில் 05 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளன. அதனால் அக்குடியிருப்புக்களில் வசித்த முப்பது பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கொஸ்லந்த, மீரியபெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 248 குடும்பங்களைச் சேர்ந்த 778 பேர் மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் சில வருடங்களுக்கு முன்னரும் மண்சரிவு ஏற்பட்டதோடு பலர் உயிரிழந்ததும் தெரிந்ததே.

இந்நிலையில் தற்போதைய சீரற்ற காலநிலையின் விளைவாக மீண்டும் அப்பிரதேசத்தில் மண்சரிவு அச்சுறுத்தல் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதனால் இப்பகுதியில் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 144 குடும்பங்களும் மஹகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 23 குடும்பங்களும் திவுல்கஸ்முல்லவைச் சேர்ந்த 81 குடும்பங்களுமென 248 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிபாரிசுகளுக்கு அமைய பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ள இம்மக்களுக்குத் தேவையான நிவாரண வசதி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், கொத்மலை பிரதேசத்திலுள்ள வேத்தலாவ என்ற கிராமத்தின் நிலத்தின் கீழ்ப்பகுதியில் நேற்றுமுன்தினம் முதல் அச்சம் தரக்கூடிய வகையிலான மர்மமான சத்தங்கள் கேட்பதாக மக்கள் தெரித்துள்ளனர். அதனால் அக்கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை இரவு வேளையில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஒழுங்குகளை நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மேற்கொண்டுள்ளார்.

தற்போதைய சீரற்ற காலநிலையினால் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதோடு அச்சுறுத்தலும் நிலவுகின்றது. இந்நிலையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன மண்சரிவு அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன.

அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வாழும் மக்கள் சேறுசகதியுடன் திடீரென நீரூற்று ஏற்படல், உயர்ந்த மரங்கள், தொலைபேசி, மின்கம்பங்கள் சரிதல், வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களிலும் நிலத்திலும் திடீரென வெடிப்புக்கள், பிளவுகள் ஏற்படல், அவை விரிவடைதல், தாழிறக்கங்கள், இயற்கையாகக் காணப்படும் நீரூற்றுக்கள் தடைப்படுதல் அல்லது காணாமல் போதல் போன்றவாறான அறிகுறிகளை அவதானித்தால் தாமதமின்றி விரைவாக அவ்விடங்களை விட்டு அகன்று பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வேண்டும். அவ்வறிகுறிகள் பெரும்பாலும் மண்சரிவுக்கான முன்னெச்சரிக்கையாகவே இருக்கும் என்பதுதான் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்தாகும்.

ஆகவே தற்போதைய சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் குறித்தும் அவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தேசதங்களையும் தவிர்த்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுவது இன்றியமையாததாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT