Monday, May 6, 2024
Home » மனிதனது அன்றாட கருமங்களில் பிரதானமானது வாசிப்புப் பழக்கம்

மனிதனது அன்றாட கருமங்களில் பிரதானமானது வாசிப்புப் பழக்கம்

by Rizwan Segu Mohideen
October 11, 2023 8:39 am 0 comment

‘நினைத்த இடத்திற்குச் செல்லவும், வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை எடுக்கவும்’ என்பது இவ்வருட வாசிப்பு மாதத்திற்கான கருப்பொருள்

ஒரு மனிதன் அன்றாட கருமங்களை ஆற்றுவதைப் போல், வாசிப்பென்பதும் அன்றாட கடமைகளில் ஒன்றாக மாறும் போதே அவன் உயிருள்ளவனாகின்றான். மனிதனைப் புடம் போடுவதற்கு அவனைத் தூண்டுவது வாசிப்பு ஆகும்.

‘நினைத்த இடத்திற்கு செல்லவும், -வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை எடுக்கவும்’ என்பதே இவ்வருட வாசிப்பு மாதத்திற்கான கருப்பொருளாகும்.

வாசிப்பானது பாடசாலைப் பருவத்திலிருந்து விதைக்கப்பட வேண்டியதாகும். இதனால் ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாகக் கல்வியமைச்சு பிரகடனம் செய்து பல்வேறு செயற்றிட்டங்களை வருடந்தோறும் முன்னெடுத்து வருகின்றது. ஒக்டோபர் மாதத்தை வாசிப்பு மாதமாக கல்வியமைச்சு பிரகடனம் செய்துள்ள போதிலும், ஒக்டோபர் 23 முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை பாடசாலை நூலக வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அதனை 23 ஆம் திகதி பாடசாலை நூலக தினமாகவும், 24 ஆம் திகதி நூலகச் சூழல் சுத்தம் செய்யும் தினமாகவும், 25 ஆம் திகதி நூல்களைப் பாதுகாத்தல் தினமாகவும், 26 ஆம் திகதி நூல் சேகரிப்பு தினமாகவும், 27 ஆம் நாள் நூலகப் பயன்பாட்டு மாணவர்களை கௌரவிக்கும் தினமாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

வாசிப்பு மாதத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் 110 பக்கங்களைக் கொண்ட பாடசாலை நூலக மற்றும் கற்றல்வள நிலையங்களின் திருத்தப்பட்ட ஆலோசனைக் குறியீடொன்றை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. பாடசாலை அதிபர், நூலகப் பொறுப்பாசிரியர் ஆகியோரின் வழிகாட்டலுடன் இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நல்ல ஆளுமை கொண்ட சிறார்களை நாட்டிற்கு வழங்குவதற்கு இலங்கையின் பாடசாலை முறையினூடாக ஆற்றும் பணி முக்கியமானதாகும். வகுப்பறைக்கு மேலதிகமாக பாடசாலை நூலகத்தை பேணவேண்டியது அவசியமாகும்’ என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் ‘பாடசாலை வகுப்பறைக்கு வெளியே பாடசாலை வளாகத்திற்குள் மாணவர்களைக் கவர்ந்த ஆசிரியராக விளங்குவது நூலகமாகும். பிள்ளைகளுக்கு இலக்கியத்தை ரசிக்கவும், வாழ்க்கையை கற்றுக் கொடுக்கவும் அறிவை இற்றைப்படுத்தவும் தாளாளமாகக் கைகொடுப்பது பாடசாலை நூலகமாகும்’ என கல்வியமைச்சின் செயலாளர் என்.எம். ரணசிங்கவும் ஆலோசனைக் குறியீட்டில் வழங்கியுள்ள செய்திகள் முக்கியத்துவமுடையதாக காணப்படுகின்றன. போதைப்பொருள் பாவனை, ஊடகக் கலாசார சீர்கேடு, கட்டுபாடற்ற வாழ்வு, ஒழுக்கமின்மை முதலிய காரணிகளால் திசைமாறிச் செல்லும் மாணவர் சமூகம் கட்டுப்பாடுகளுடன் ஒழுங்கமைக்கப்படுவதற்கு வாசிப்பின் மீதான மாணவர் ஆர்வத்தினை ஏற்படுத்துவது இன்றிமையாத் தேவையாகும். அதற்கென பாடசாலை நூலகங்கள் கவர்ச்சியாக வடிவமைக்கப்படுவதுடன் மாணவர்களைத் தூண்டும் வகையிலான தேடலுடன் கூடிய செயற்றிட்டங்கள் பாடசாலைகளில் வடிவமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

பிறந்த நாள் பரிசாக நூல்களை அன்பளிப்புச் செய்தல், புத்தகக் கண்காட்சியை நடத்துதல், புத்தக நன்கொடை தினமொன்றை அறிமுகம் செய்தல், வாசிப்பின் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கிலான போட்டிகளையும் விரிவுரைகளையும் ஏற்படுத்துதல், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல், வாசிப்பு முகாம்களை நடத்துதல் ஆகியன வாசிப்பினைத் தூண்டுவதற்கான சிறந்த ஆலோசனைகளாகும்.

‘கருவுற்றிருக்கும் தாய் நல்ல நூல்களை வாசிக்கும் போது அக் குழந்தைகளின் மூளை விருத்தி உந்தப்படுகின்றது’ என்கின்ற உளவியலாளர்களின் கூற்றினையும் ‘குழந்தையின் முதல் ஆசான் தாய். அக்குழந்தை தாலாட்டிலிருந்தே கற்கவும் அறியவும் ஆரம்பிக்கிறது’ என்கின்ற இலக்கிய ஆய்வாளர் தமிழ் அண்ணலின் கூற்றினையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது வாசிப்புக்கான கரு வீட்டிலிருந்தே விதைக்கப்பட வேண்டுமென்பது வெளிப்படுகின்றது. அதற்கான சூழல் அங்கு கிடைக்காத போது, ஒரு குழந்தையின் புகுந்த வீடாக அடையாளம் காணப்பட்டுள்ள பாடசாலையின் மூலமே இதனைக் கட்டியெழுப்ப முடியும். அதற்கான மிக நல்லதொரு களத்தை வழங்குவது பாடசாலைகளின் நூலகங்களேயாகும்.

அந்நூலகங்களை வளப்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான பங்காளிகளாக மாற வேண்டியவர்கள் மாணவர்களே. பாடசாலைப் பரீட்சைக் கல்வியோடு மட்டுப்பட்டு விடுகின்ற மாணவர்களைவ விட நூலகங்களை சிறுபராயம் முதலே வசமாக்கி மேன்மையடைந்த மாணவர்களே சமூக மதிப்புமிக்க அடையாளங்களாக சமூகத்தில் திகழ்கின்றனர்.

அறிவாளியையும் அறிவிலியையும் வேறுபடுத்துவது வாசிப்பேயாகும். உளரீதியான பாதிப்புக்களிலிருந்து வாசிப்பு பாதுகாப்பளிக்கின்றது. மொழி விருத்தி அடைவதுடன் தன்னம்பிக்கை வளர்கிறது. ஞாபக சக்தி விருத்தி பெற்று, கௌரவம் உயர்ந்து, தொழிலில் தேர்ச்சி அடைந்து, பல்துறை ஆளுமையுள்ள மனிதனாகத் தன்னை அடையாளப்படுத்த வாசிப்பே வழிகோலுகிறது.

மகாத்மா காந்தியிடம் ‘உங்களிடம் ஒரு கோடி ரூபாய் தரப்பட்டால் என்ன செய்வீர்கள்’ எனக் கேட்ட போது ‘ஒரு நூலகம் அமைப்பேன்’ எனக் கூறியமை நூலகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவல்ல அம்சமாகும்.

‘புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் நூலகங்களே’ என்கிறார் லெனின்.

‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தகங்களை வாசிக்க அனுமதியுங்கள்’ என்றார் நெல்சன் மண்டேலா.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT