Friday, May 3, 2024
Home » ஆசிரியப் பணிக்கு நபிகளாரின் வழிகாட்டல்கள்

ஆசிரியப் பணிக்கு நபிகளாரின் வழிகாட்டல்கள்

by gayan
September 28, 2023 5:52 pm 0 comment

முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த சமூகம் படிப்பறிவில்லா சமூகம். வரலாற்றில் அது ஜாஹிலிய்ய சமூகம் என குறிப்பிடப்படுகிறது. ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூட, ‘நாம் படிப்பறிவில்லா ஒரு சமூகம். எமக்கு எழுதவோ கணிப்பிடவோ தெரியாது’ (ஆதாரம்: புஹாரி) என்று கூறியுள்ளார்கள்.

எழுதப்படிக்கத் தெரியாத அந்த சமூகத்தின் ஒருவராக நபியவர்களும் எழுதப்படிக்கத் தெரியாதவராகவே இருந்தார்கள். அப்படியொரு சமூகத்தில் தான் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக நபியவர்கள் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டார்கள். அல்லாஹ் என்னைக் கடினபோக்குக் கொண்டவராகவோ கஷ்டப்படுத்துபவராகவோ அனுப்பவில்லை. மாறாக என்னை ஆசிரியராகவும் இலகுபடுத்திக் கொடுப்பவராகவுமே அனுப்பினான் (ஆதாரம்: முஸ்லிம்) என்று கூறி நபியவர்கள் தம்மை ஆசிரியராகப் பிரகடனப்படுத்தினார்கள்.

நபியவர்களுடைய பாசறையில் அலி (ரழி) போன்ற சிறுவர்களும் அபூபக்கர் (ரழி) போன்ற பெரியவர்களும் கதீஜா (ரழி) போன்ற மூதாட்டிகளும் ஆயிஷா (ரழி) போன்ற சிறுமிகளும் அபுதர் (ரழி) போன்ற ஏழைகளும் உஸ்மான் (ரழி) போன்ற செல்வந்தர்களும் பிலால் (ரழி) போன்ற அடிமைகளும் ஏக காலத்தில் கல்வி கற்றார்கள். அவர்கள் எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கவனிக்கும் வகையில் அனைவரும் நபிகளாரின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) என்றே அழைக்கப்பட்டார்கள். இது மாணவர்களிடையே பொதுத்தன்மை ஒன்றைப் பேண உதவியது. ஆசிரியர் மாணவர்களைத் தோழனாகக் கருதும் போது அவர்கள் தெரியாதவற்றையும், கேட்பதற்கு வெட்கப்படும் விடயங்களையும் கற்றுத் தெளிந்து கொள்ள வழி கிடைக்கிறது.

ஒரு முறை ”மதீ” பற்றித் தெரிந்து கொள்ள விரும்பிய அலி (ரழி) அவர்கள் தமது மாமன் முறையான நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டு மற்றொரு ஸஹாபி மூலம் நபிகளாரை அணுகித் தெளிவுபெற்றுக் கொண்டார்கள். (ஆதாரம்: புஹாரி). இதேபோன்று பெண்களும் நபிகளாரிடம் வெட்கத்தை விட்டு பல விடயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பில் அன்னை ஆயிஷா (ரழி) குறிப்பிடும்போது, அன்ஸாரிப் பெண்கள் மிகச் சிறந்த பெண்கள். அவர்களது வெட்கம் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதில் இருந்து அவர்களைத் தடுக்கவில்லை எனப் பாராட்டியுள்ளார்கள்.

இவ்வாறு தன்னிடம் கற்றுக்கொள்ள வருகின்ற மாணவன் தனது அனைத்துக் கேள்விகளையும் கேட்டுத் தெளிவுபெறக் கூடிய விதத்தில் ஆசிரியர் தோழமையுடன் பழகுவது ஆசிரியப்பணியின் வெற்றியாக அமைகிறது.

கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் இருவழித் தொடர்பாடல் முக்கியமாகும். இரு சாராரும் இதில் சமபங்கு ஏற்கும் பொழுது தான் கற்றல் கற்பித்தல் செயற்பாடு வெற்றியளிக்கிறது. கற்பித்தலை ஆரம்பிக்க முன்னர் கற்றலின் முக்கியத்துவத்தையும் அதற்கான வழிகாட்டலையும் வழங்குவது நபியவர்களின் முன்மாதிரியாக இருந்திருக்கிறது. அறிவைத் தேடிப் பெற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும் (ஆதாரம்: இப்னுமாஜா) என்றும், அறிவு என்பது முஃமினிடமிருந்து தொலைந்து போன சொத்து, அதனை எங்கு கண்டாலும் பெற்றுக் கொள்வதற்கு அவன் அருகதையுடையவனாவான் (ஆதாரம்: திர்மிதி) என்றும் குர்ஆனைக் கற்று அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுப்பதே உயர்ந்த தர்மம் (ஆதாரம்: இப்னு மாஜா) என்றும் கல்வியின் முக்கியத்துவத்தையும் ஆசிரியருக்குரிய மதிப்பையும் மாணவர்களிடம் நபியவர்கள் பதிய வைத்திருக்கிறார்கள்.

கல்வியின் பெறுமதி ஊட்டப்பட்டு கல்வியைக் கற்ற மாணவர்கள் அவர்களும் கல்வியைப் போதிப்பவர்களாக மாறுவதும் கல்வியின் சிறப்பை மக்களுக்கு முன்வைப்பவர்களாக மாறுவதும் இவ்வாறான கற்பித்தல் முறையின் சிறந்த விளைவுகளாகும். இந்த வகையில், மக்களே…., அறிவைத் தேடும்படி உங்களை உபதேசிக்கிறேன். யார் அதிலிருந்து ஒரு பகுதியைக் கற்றுக்கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வின் அன்பு எனும் போர்வையினால் போர்த்தப்படுகிறார் என நபியவர்களிடம் கற்ற உமர் (ரழி) கூறியிருக்கிறார்கள்.

அறிவைத் தேடிக் கற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காகவென அதனைக் கற்கும் போது அது இபாதத்தாகிறது. அதனை மீட்டுவது தஸ்பீஹாகிறது. அறிவைத் தேடிச் செல்வது ஜிஹாத் ஆகிறது என முஆத் இப்னு துபல் (ரழி) அவர்களும், காலையிலும் மாலையிலும் அறிவு தேடச் செல்வதை யார் ஜிஹாதாகக் கருதவில்லையோ அவருடைய அறிவிலும் கருத்திலும் குறைபாடுள்ளது என அபுதர் (ரழி) அவர்களும் சொல்வதற்கு அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் கல்வியின் முக்கியத்துவத்தையும் அதனை இறைவணக்கமாகவும் உணர்த்திப் பதிய வைத்தமை காரணமாகும்.

தமது தோழர்களின் ஆற்றல்களை இனங்கண்டு அவர்களை அந்தத் துறையில் வழிப்படுத்துவது நபிகளாரின் கற்பித்தலில் காணப்படும் சிறந்த முன்மாதிரியாகும். நால்வரிடமிருந்து அல்குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள். இப்னு மஸ்ஊத், முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப், அபுஹுதைபாவின் அடிமை ஸாலிம் (ரழி) (ஆதாரம்: புஹாரி) என அல்குர்ஆனைக் கற்பிப்பதற்கான நபர்களை இனம்காட்டினார்கள். எமது சமூகத்தில் சமூகத்தோடு இரக்கம் கொண்டவர் அபுபக்கர் (ரழி), மார்க்கத்தில் கடுமையாக இருப்பவர் உமர் (ரழி), தீர்ப்பு வழங்குவதில் மிகச் சிறந்தவர் அலி (ரழி), வாரிசுரிமைச் சட்டம் பற்றிய அறிவில் மிகைத்தவர் ஸைத் இப்னு ஸாபித் (ரழி), ஹலால் ஹராம் பற்றி மிக அறிவுள்ளவர் முஆத் இப்னு ஜபல் (ரழி) என ஒவ்வொருவரும் எந்தத் துறையில் சிறப்பானவர்கள் என்பதை நபியவர்கள் இனம்கண்டு வைத்திருந்தார்கள். நபிகளாருடைய கற்பித்தல் குறிப்பிட்ட நேரத்தை வரையறுத்ததாக இருக்கவில்லை. எப்போதும் தமது தோழர்களுடன் சுற்றிச் சுழல்வதாகவே அவருடைய ஆசிரியர் உறவு இருந்தது. இதனால் தமது தோழர்களின் இயல்புகளை அறிந்து வழிகாட்டுவதற்கு நபிகளால் முடியுமாக இருந்தது. இந்த வகையில் தான் ஒரு சிரேஷ்ட ஸஹாபியாக இருந்தும் கூட, அவர் பதவி கேட்டும் கூட அவர் மிருதுவானவர் என்பதால் அபுதர் (ரழி) அவர்களுக்கு எந்த நிர்வாகப் பொறுப்பையும் நபியவர்கள் கொடுக்கவில்லை.

கற்பித்தலின் போது தமது தோழர்களிடம் நபியவர்கள் நடந்து கொண்ட விதமும் முன்மாதிரி மிக்கதாகும். தமது தோழர்கள் அறிவிலும் செயற்பாடுகளிலும் சிலவேளை பண்பாடுகளிலும் குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தம்மிடம் கற்க வந்தவர்களிடம் நளினமாக நடந்து கொண்டார்கள். அவர்களை இன்முகத்தோடு வரவேற்பார்கள். அறிவு தேட வருபவர்களே…, உங்கள் வரவு நல்வரவாகட்டும் எனக் கூறி மாணவர்களை வரவேற்கும் நபியவர்கள், அறிவு தேடுபவர்களை மலக்குகள் தமது இறக்கைகளால் சூழ்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் அறிவு தேடுபவர்களில் கொண்ட அன்பின் காரணமாக ஒருவர் மேல் ஒருவராக பூமிக்கு அண்மையிலுள்ள வானத்தை எட்டி விடுகிறார்கள் (ஆதாரம்: அஹ்மத்) என்று சுபசோபனம் கூறி கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்துவார்கள்.

நபியவர்கள் தமது கற்பித்தலின் போது தோழர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதனை முஆவியா பின் ஹகம் அஸ்ஸுலமி (ரழி) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு எனது தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும். அவர்களைப் போன்று சிறந்த முறையில் கற்பிக்கும் ஆசிரியரை நான் இதற்கு முன்போ பின்போ கண்டதில்லை. தொழுகையில் நின்றபோது தெரியாத்தனமாக நான் தும்மிய ஒருவருக்குப் பதில் சொன்னபோது கடுமையான வார்த்தைகளால் நபியவர்கள் என்னை ஏசவுமில்லை. அடிக்கவுமில்லை. தொழுகையை நிறைவேற்றி முடிந்ததும் “இந்தத் தொழுகையில் சாதாரண நிலையில் தொழுவது போல பேசக் கூடாது என அறிவுரை பகர்ந்தார்கள்.

ஆகவே கற்பித்தலில் சிறந்த முன்னோடியாக நபிகளாரைப் பின்பற்றி சிறந்த ஆசிரியர்களாக மாறுவோம்.

பியாஸ் முஹம்மத்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT