Monday, October 7, 2024
Home » பாலியல் குற்றச்சாட்டு; சுமார் ஒரு வருடத்தின் பின் தனுஷ்க நிபராதி என விடுதலை

பாலியல் குற்றச்சாட்டு; சுமார் ஒரு வருடத்தின் பின் தனுஷ்க நிபராதி என விடுதலை

- கடந்த நவம்பரில் கைதான தனுஷ்கவிற்கு நாடு திரும்ப வாய்ப்பு

by Rizwan Segu Mohideen
September 28, 2023 9:12 am 0 comment

இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிட்னி டோவ்னிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சாரா ஹகட் இன்றையதினம் (28) இத்தீர்ப்பை அறிவித்தார்.

இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானதாக இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

குறித்த வழக்கு விசாரணை கடந்த வாரம் (21) நிறைவடைந்த நிலையில், அது தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த வாரம் 4 நாட்களாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் செய்திகள் <<<>>>’தனுஷ்க குணதிலக ‘<<<>>>

கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டி முடிந்து நாடு திரும்புவதற்காக அன்றைய தினம் நவம்பர் 06ஆம் திகதி அதிகாலை 4.36 மணிக்கு இலங்கை அணியினர் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னதாக வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் வைத்து கைது செய்யப்பட்ட தனுஷ்கவிடம் பதிவு செய்த இரண்டரை மணிநேர வாக்குமூல குரல் பதிவை நீதிபதி சாரா ஹகேட் ர் முன்னிலையில் கடந்த வாரம் ஒலிக்கச் செய்யப்பட்டிருந்தது.

தாம் உடல் ரீதியாக இணைந்த பிறகு, குறித்த பெண் முன்ஜென்மம் பற்றி பேசத் தொடங்கியதாகவும், இருவரும் முன்ஜெனமத்தில் தாய்லாந்தில் தங்கள் அண்டை வீட்டாராக வாழ்ந்ததாக அப்பெண் தெரிவித்ததாக குறித்த ஒலிப்பத்திவில் தெரிவித்திருந்தமை தெரிய வந்தது.

Tinder எனும் செயலி ஊடாக அறிமுகமாக குறித்த பெண்ணை நவம்பர் 02 ஆம் திகதி சிட்னியில் உள்ள ஒபரா பார் உணவகத்தில் தனுஷ்க சந்தித்துள்ள நிலையில், அங்கு இரவு பீசா சாப்பிட்டுவிட்டு அவரது வீட்டிற்கு சென்றதாகவும், பின்னர் தான் அதிகாலை 3.00 மணிக்கு முன்னதாக வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்ப வேண்டும் என்றும், அந்த பெண்ணிடம் கூறியதாகவும், தனுஷ்க பொலிசாரிடம் வழங்கிய அந்த வாக்குமூல ஒலிப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர படகு சேவை வழியாக அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்ற இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு, ஒரு பாடலைப் பாடும்படி தான் கூறியதாக அவரது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பாடும் போது அப்பெண் கிட்டார் வாசிக்கவும் ஆரம்பித்தார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தனுஷ்கவின் வாக்குமூலத்திற்கு அமைய, இருவரும் உறவு கொண்ட பின்னர் பேசிக் கொண்டு நேரத்தைக் கழித்ததாகவும், இதன் போது தனக்கு ஒரு வகை சக்தி இருப்பதாக அப்பெண் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு எதிர்காலத்தில் நடக்கவுள்ளதை பார்க்க முடியும் என அவர் தெரிவித்ததையடுத்து, இருவருக்குமிடையில் சமய விடயங்கள் தொடர்பில் உரையாடல் இடம்பெற்றதாகவும், தான் ஒரு பௌத்த மதத்தை சேர்ந்தவர் என்பதால் அதில் ஆர்வம் ஏற்பட்டதாகவும் தனுஷ்க தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வாக்குமூலம் அளிக்கும் போது, தனது தாய் தொடர்பில் தெரிவித்து, தனுஷ்க நீதிமன்றத்தில் கதறி அழுதமையும் கடந்த வாரம் தெரியவந்திருந்தது.

தனக்கு சக்தி இருப்பதாக குறித்த பெண் கூறியது சிரிப்பாக இருந்தாலும், தனது முன் ஜென்மத்தை பற்றி ஏதாவது சொல்லுமாறு கேட்டதாகவும் இதன்போது கண்களை மூடிக் கொண்டு, இருவரும் தாய்லாந்தில் அண்டை வீட்டாராக வாழ்ந்ததாக அப்பெண் கூறியதாகவும் தனுஷ்க பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

“நாம் இருவரும் தாய்லாந்தில் பிறந்தோம்,” என்று அவர் கூறினார். அப்போது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. ஏனென்றால் அவர் விசித்திரமான பெண் என உணர்ந்தேன். அதனால் நான் தெரிவித்தேன், மீண்டும் நான் ஹோட்டலுக்கு செல்ல வேண்டும், ஏனென்றால் அதிகாலை 3:00 மணிக்கு முன்னதாக ஹோட்டலுக்கு வர வேண்டும் என்று வீரர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை நான் மீற விரும்பவில்லை” என்று தனுஷ்க அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பின்னர் வாடகை வாகனம் ஒன்றை பதிவு செய்யும்படி அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.

“மீண்டும் மறுநாள் போண்டி கடற்கரையில் சந்திக்க முடிவு செய்திருந்தோம். பின்னர் நான் அவருக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பினேன். என தனுஷ்கவின் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனுஷ்கவின் சட்டத்தரணி முருகன் தங்கராஜ், அப்பெண்ணை குறுக்கு விசாரணை செய்தபோது, ​​முன் ஜென்ம கதையை மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நீதிமன்ற அமர்வில் தனுஷ்கவின் தங்கை, முன்னாள் காதலி மற்றும் நெருங்கிய தோழியிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அவர் ஒருபோதும் பெண்களை துன்புறுத்தும் அல்லது அவமரியாதை செய்யும் நபரோ இல்லை என்று அவர்கள் இதன்போது, நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மென்மையான இதயம் கொண்ட அவர் மிகவும் நல்லவர் என அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தனுஷ்கவின் ஒலிப்பதிவு நீதிமன்றில் ஒலிக்கச் செய்யப்டும் முன்னர், குறித்த பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பில் முதலில் ரோஸ் பே பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளான கத்ரீனா லக்காடிஸ் என்பவரிடம் முறைப்பாடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதன்போது தன்னிடம் பொலிஸ் குறிப்பேடு இருக்கவில்லை எனவும், அதனால் தாம் பல காகிதங்களில் அவரது முறைப்பாட்டை பதிவு செய்ததாக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ்க தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் கூறியதாகவும், பின்னர் முறைப்பாட்டை பதிவு செய்த ஆவணங்களை புகைப்படம் எடுத்து விசாரணை அதிகாரிக்கு அனுப்பியதாகவும் குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டை பதிவு செய்வதை விட, அதனை ஒலிப்பதிவு செய்வது முக்கியமானதாக நீங்கள் நினைக்கவில்லையா என, தனுஷ்கவின் சட்டத்தரணி இதன்போது கேட்டுள்ளார்.

குறித்த குறிப்புகளை நீங்கள் சிறு சிறு கடதாசியிலா எழுதுநீர்கள் எனவும் அதனை பின்னர் குப்பைக் கூடையில் வீசினீர்களா என சட்டத்தரணி அவரிடம் கேட்டபோது, ​​மிகவும் வெட்கமடைந்த கான்ஸ்டபிள், அந்த குறிப்புகளை தூக்கி வீசியிருக்கக்கூடாது என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

“நீங்கள் களத்தில் கடமைகளைச் செய்ய நிறுத்தப்பட்டுள்ளீர்கள். தொலைபேசிக்கு பதிலளிப்பது, கடுமையான முறைப்பாடுகள் உள்ளிட்ட பொதுமக்களின் முறைப்பாடுகளை பதிவு செய்வதும் அதில் உள்ளடங்குவதாக தனுஷ்கவின் சட்டத்தரணி பொலிஸ் கான்ஸ்டபிளை தொடர்ந்து கேள்வி எழுப்பியதாகவும் அங்கு அவர் சங்கடத்திற்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனுஷ்க ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் சமூக வலைத்தள தடை உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். பின்னர் குறித்த தடைகள் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x