Home » ஐ.நா. பொதுச் செயலாளரால் அறிவிக்கப்பட்ட அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

ஐ.நா. பொதுச் செயலாளரால் அறிவிக்கப்பட்ட அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

by Rizwan Segu Mohideen
September 21, 2023 9:51 am 0 comment

ஐ.நா. சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று (20) நடைபெற்ற காலநிலை அபிலாஷைகள் பற்றிய  மாநாட்டிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை அடிப்படையாக கொண்டு, காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய உலக பொருளாதாரத்திற்கான நியாயமானதும் துரிதமானதுமான மாற்றத்திற்காக உலகளாவிய கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான மைல்கல்லாக ஐ.நா பொதுச்செயலாளரால் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.

விரைவில் அமுல்படுத்தப்படக்கூடிய காலநிலை சார்ந்த செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாநாட்டில் பங்குபற்றிய இராஜதந்திர பிரதிநிதிகளின் முன்மொழிவுகளையும் பாராட்டினார்.

காலநிலை சார்ந்த பிரச்சினைகளால் இலங்கைக்கு 2050 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% ஐ இழக்க நேரிடும் என நிபுணர்கள் கணித்துள்ளனதாகவும் இலங்கையின் காலநிலை தழுவல் திட்டத்திற்கு இரண்டு அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இலங்கையின் இயற்கை வளங்களான காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பசுமை வளர்ச்சிக்கான ஒரு மூலோபாயமாக COP 27 இல் காலநிலை செழிப்புத் திட்டம் வெளியிடப்பட்டது.

2022ஆம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தை பசுமைப் பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் இலங்கையில் நடைபெற்று வரும் பொருளாதார மறுசீரமைப்பு செயல்முறையுடன் இணைந்ததாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலநிலை நியாய மன்றம் நிறுவ ஆதரவளிப்பதே, இலங்கையின் காலநிலை அபிலாஷைகளில் இரண்டாவது அம்சமாகும். அத்தோடு காலநிலை அனர்த்தங்களின் போதான நட்டங்கள் மற்றும் பாதிப்புகள் அதற்கு இசைவாக்கம் அடைதல் மற்றும் மட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு காலநிலை சவால்களுக்கு தீர்வு காண சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த மன்றத்தின் நோக்கமாகும்.

இந்த முயற்சிகளுக்கு மேலதிகமாக, உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இரு விடயங்களை இலங்கை முன்மொழிந்துள்ளது. அதன் முதற்கட்டமாவே, காலநிலை மாற்றத்தைத் தணிக்க உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான களத்தை வழங்கும் ஒரு சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக தன்னகத்தே உள்ள வள முகாமைத்துவத்தின் அவசியத்தை தெரிந்துகொண்டு, இலங்கையில் அதிகபட்ச செல்வாக்கு செலுத்தக்கூடிய துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

வெப்ப வலயத்திற்குள் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, அந்த வலயத்தில் வாழும் “பாதிக்கப்பட்ட சமூகம்” அசாதரணமான விளைவுகளை எதிர்கொள்கிறது.

அதன்படி, உயர் உயிரியல் பல்வகைமை வெப்பவலயப் பகுதியை இலக்காகக் கொண்டு உத்தேச வெப்பவலய காலநிலை அபிலாஷை வேலைத்திட்டத்தை முன்வைக்கிறேன்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் முதலீடு செய்தல், இயற்கை அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிதல் மற்றும் வெப்ப வலயத்திற்குள் சுற்றாடல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை வெப்ப வலயங்களில் மட்டுமல்லாது, உலகில் உள்ள மிதவெப்பப் பகுதிகளிலும் மாற்றத்தின் பலன்களை அடைந்துகொள்ள கூடியதாக இருக்கும்.

வெப்பவலயக் காலநிலை இலட்சியத் திட்டம் மற்றும் பிராந்தியத்தில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் பொருளாதாரங்களுக்கான முன்மொழியப்பட்ட கடன் நிவாரணம் போன்ற முன்முயற்சிகள் ஐ.நா பொதுச்செயலாளரால் முன்மொழியப்பட்ட துரித காலநிலை நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கின்றன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் தினுக் கொழும்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பான செய்தி...

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT