Friday, May 3, 2024
Home » ஈரான் உதவி உமா ஓயா திட்டத்தை திறந்து வைக்க வருமாறு ஈரான் ஜனாதிபதிக்கு அழைப்பு

ஈரான் உதவி உமா ஓயா திட்டத்தை திறந்து வைக்க வருமாறு ஈரான் ஜனாதிபதிக்கு அழைப்பு

- இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் பல்வேறு துறைசார் உறவுகளை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம்

by Rizwan Segu Mohideen
September 21, 2023 9:34 am 0 comment

– கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவொன்றை விரைவில் நிறுவுமாறு ஈரான் ஜனாதிபதி பரிந்துரை
– இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசிக்கும் (Seyyed Ebrahim Raisi) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) நியூயோர்க்கில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான நீண்ட கால உறவுகள் மற்றும் பல வருடங்களாக ஒருவருக்கு ஒருவர் வழங்கிய ஒத்துழைப்புக்களை நினைவுக்கூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த காலப்பகுதியில் ஈரான் வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

புதிய பிரவேசத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த ஈரான் ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ளும் முகமாக கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஈரானிடத்திலுள்ள அதி நவீன விவசாய தொழில்நுட்பத் தெரிவுகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டதோடு, எதிர்காலத்தில் அது தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பிலும் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

ஈரானுக்கும் இலங்கைக்கு இடையிலான பிராந்திய தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், இந்து சமுத்திர ரிம் சங்கத்தின் (IORA) உறுப்பு நாடுகளையும் அதனில் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இரு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தினர்.

மின்சக்தி மற்றும் எரிசக்தித் துறையில், குறிப்பாக உமா ஓயா திட்டத்திற்கு ஈரான் வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உமா ஓயா பல்துறை திட்டத்தினை திறந்து வைப்பதற்காக இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

அந்த விஜயத்திற்கு இணையாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள இருநாட்டுத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், உள்ளிட்டவர்கள் இலங்கை சார்பில் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த்தோடு, ஈரான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லஹியனும் (Hossein Amir-Abdollahian) கலந்துகொண்டார்.

இது தொடர்பான செய்தி...

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT