Monday, May 20, 2024
Home » போதைப் பாவனை: ஓர் இஸ்லாமிய நோக்கு

போதைப் பாவனை: ஓர் இஸ்லாமிய நோக்கு

by sachintha
September 1, 2023 12:06 pm 0 comment

இலங்கையில் இன்று மிக மோசமாக வியாபித்துள்ள போதைப்பொருள் பாவனையானது பல்வேறு வகையான தாக்கங்களையும் பாதிப்புகளையும் தனிமனிதர்கள் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் ஏற்படுத்தி வருகின்றன. இதனை ஒழிப்பதற்காக பல்வேறு வகையான நடவடிக்கைகள் அரசாலும் சமய, சமூக விவகார அமைப்புகளாலும் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் அதில் எதிர்பார்க்கப்படக்கூடிய அளவு திருப்திகரமான அடைவுகளை கண்டு கொள்ள முடியவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

தனிமனித ஆளுமையை கட்டியெழுப்புவதற்கும், சிறந்த சமூக உருவாக்கத்திற்கும் மிகப்பெரும் சவாலாக மாறியுள்ள போதைப்பொருள் பாவனையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லையெனில் மனித நாகரீகத்திற்கு எதிரான, மனித பண்பாடுகள் அற்ற ஒரு தலைமுறை உருவாவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும். இதனால் தான் இஸ்லாம் போதைப்பொருள் பாவனை சம்பந்தமாக கடுமையான எச்சரிக்கைகளை பிறப்பித்துள்ளது. இது பற்றி அல்லாஹுத்தஆலா அவனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்,

“விசுவாசிகளே…. மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் சைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவை ஆகும். ஆகவே இவைகளில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”. (அல் மாயிதா: 90)

இத்திருவசனத்திலே அல்லாஹுத்தஆலா ஒரு மனிதனுக்கு போதையை ஏற்றி, அவனது புத்தியை பேதலிக்க செய்கின்ற மதுபானம் அருந்துதல் எனும் பாவச்செயலை இணை வைத்தல் என்னும் பாவத்தோடு இணைத்து சொல்லி இருப்பது, அதன் பாதக தன்மையையும், அதன் கொடிய தாக்கங்களையும் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. மேலும் இது சைத்தானிய அருவருக்கத்தக்க செயல் என்பதாக இறைவன் கூறுவதில் இருந்து இது மனித விழுமியங்களையும் பண்பாடுகளையும் அழித்து, இப்பூமியை சைத்தானிய சாம்ராஜ்யமாக மாற்றுகின்ற அழிகருவியாக அல்லாஹ் அடையாளப்படுத்தி இருக்கிறான். தனி மனிதரொருவருக்கு போதை ஏற்படுத்துகின்ற உடல் உளப் பாதிப்புகள் பலவாகும். குறிப்பாக,

1- ஒரு மனிதன் போதைவஸ்துக்களை பயன்படுத்துவதன் மூலம் தன்னை மயக்க நிலைக்கு கொண்டு சென்று, தன்னிலை மறந்த பேதையாக மாறிவிடுகின்றான். இந்நிலையில் இவன் ஒரு மனிதனாக யாராலும் பார்க்கப்படுவதில்லை. இது மட்டுமன்றி ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் வெறுப்புக்குரியவனாக மாறி விடுகின்றான்.

2- ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற மிகப்பெரும் அருட்கொடையாக கருதப்படுகின்ற உடல் ஆரோக்கியத்தை அவன் தொலைத்து விடுகிறான். ஈரல் நிரந்தர பாதிப்புக்குள்ளாவதால் உடலின் நஞ்சகற்றல் தொழிற்பாடு தடைப்பட்டு போய் விடுகின்றது. எனவே உடலில் நச்சு பதார்த்தங்களின் சேர்க்கையால் உடல் உறுப்புகளில் புற்று நோயை தோற்றுவிக்கின்றது.

3- போதைப்பாவனைக்கு அடிமையானவன் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றான். தான் அடிமையாக இருக்கின்ற போதைவஸ்துக்களை கொள்வனவு செய்வதற்காக பல இலட்சம் ரூபாய்களை தொடர்ச்சியாக செலவு செய்து தனது பொருளாதார வளத்தை அழித்து கொண்டதன் பிற்பாடு மிக மோசமான சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றான்.

4- போதைப் பழக்கத்துக்கு அடிமையானவன் அமைதி இழந்து, நிம்மதி இழந்து, உறவுகளை, சொந்த பந்தங்களை இழந்து ஆதரவற்றவனாக கைவிடப்பட்டு, புனர்வாழ்வு மையங்களில் கொண்டு சேர்க்கப்படுகின்றான்.

5- போதை ஏற்றிக்கொண்ட மனிதனுக்கு தொழுகை, நோன்பு போன்ற ஆன்மீக சன்மார்க்க கடமைகளில் ஈடுபடுவதற்கான தடையை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. இதைவிட ஒரு முஸ்லிமுக்கு துக்ககரமான துரதிஷ்டவசமான நிலை இருக்க முடியாது.

அதேநேரம் போதைப்பொருள் பாவனையால் சமூக ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்படவே செய்கின்றன.

போதைப்பொருள் பாவனை வக்கிர குணம் கொண்ட ஒரு வன்முறைச் சமூக உருவாக்கத்திற்கு வித்திடுகின்றது. இதை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “மதுபானத்தின் மூலமும், சூதாட்டத்தின் மூலமும், உங்களுக்கிடையில் விரோதத்தையும், குரோதத்தையும் உருவாக்கவும், அல்லாஹ்வின் நினைவில் இருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக சைத்தான் விரும்புகின்றான். (ஆகவே இவைகளில் இருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா?”

இன்று குடும்பங்களுக்கிடையிலும், சமூகங்களுக்கு இடையிலும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்ற பல்வேறு வகையான சிக்கல்களுக்கும், முரண்பாடுகளுக்கும், குரோத செயற்பாடுகளுக்கும் போதைப்பொருள் பாவனை பிரதான பங்கினை வகிக்கின்றது.

அநியாயமான முறையில் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதற்கும் வாகன விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணியாக இருப்பதும் போதைப்பொருளேயாகும்.

இன்று சமூகத்தில் காணப்படுகின்ற பல்வேறு வகையான சமூக நோய்களுக்கும் போதைப்பொருள் பாவனை அதிகம் பங்களிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறுவர் துஷ்பிரயோகங்கள், கற்பழிப்புகள், களவு, தற்கொலை, கொலை முயற்சி, பிள்ளைகளின் பராமரிப்பு பிரச்சினைகள் போன்ற இன்னோரன்ன பல பஞ்சமா பாதகச் செயல்கள் சமூகத்திலே தலை விரித்தாடுவதற்கும் இப்போதைப்பொருள் துஷ்பிரயோகம் பெரிதும் பங்களித்திருக்கின்றன.

இதன் விளைவாக தனிமனித ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படுகின்ற தாக்கங்கள் உலகை அழிவின் விளிம்பை நோக்கி அழைத்துச் செல்கின்றன. ஒரு ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பை சிதைத்து உயிர்ப்பற்ற ஒரு சமுதாயத்தை தோற்றுவிப்பதற்கான வழியை ஏற்படுத்துகின்றன. இன்று உலகை உலுக்கி கொண்டிருக்கும் பாதாள உலக சாம்ராஜ்யத்தின் வருமானத்திற்கான பிரதானமான வழியாக காணப்படுகின்ற இப்போதைப்பொருள் வியாபாரம் எங்களது அடுத்த தலைமுறையை அழித்துக் கொண்டிருக்கின்றன என்பதனை நாம் ஒவ்வொருவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே இவ்வுலகை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்றால் அனைத்து விதமான போதைப்பொருள் பாவனைகளும் இஸ்லாமிய வழிகாட்டல்களின் அடிப்படையில் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு தேவையான கட்டளைகளையும் வழிகாட்டல்களையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. அதற்கேற்ப மனித சமூகத்தைப் பாதுகாக்க முயற்சிப்போம்.

கலாநிதி அல் ஹாபிழ் எம்.ஐ.எம்.சித்தீக்…

(அல்–ஈன்ஆமி) B.A.Hons, (Al- Azhar university, Egypt)

M.A.& PhD (International Islamic university, Malaysia)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT