Monday, May 20, 2024
Home » மகத்துவம் மிக்க ஸபர் மாதம்

மகத்துவம் மிக்க ஸபர் மாதம்

by gayan
August 25, 2023 11:51 am 0 comment

இஸ்லாமிய வருடத்தின் இரண்டாவது மாதமே ஸபர் ஆகும். இது ஸபர் முளப்பர் என்ற வார்த்தை கொண்டும் அழைக்கப்படுகிறது. ஸபர் ஒரு வெற்றி மாதமாகும். இருந்தும் சிலர் இதனைப் பீடை மாதம் எனக் கருதுகின்றனர். இதற்கு நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் ஸபர் மாதத்தை பீடை மாதமாக கருதினார்கள். அவ்வாறு கருதுவது தவறு என்று கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)

இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது நபி (ஸல்) அவர்களின் முதலாவது ஹிஜ்ரத் பயணமாகும். இஸ்லாம் இவ்வுலகில் உறுதியாக கால் பதிக்க இறைவனின் நாட்டத் தோடு நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத்தே காரணம் என்றால் அது மிகையாகாது. நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களோடு ஸபர் மாதம் 27 ஆவது நாளில் தான் அத்தகைய புனிதமிக்க தியாகப் பயணத்தை மேற்கொண்டார்கள்.

மக்காவில் இருந்த வரை பொறுமையை மேற்கொள்ளுங்கள் என்பதாக அநியாயக்காரர்களுக்கு எதிராக கைகள் கட்டப்பட்டிருந்த ஸஹாபாக்களுக்கு எதிரிகளின் அத்துமீறலை தடுக்கப் புனிதப் போர் செய்யும் அனுமதியை அல் குர்ஆனின் 22ஆவது அத்தியாயம் 39ஆவது இறை வசனத்தின் மூலம் முதன் முதலில் ஹிஜ்ரி 02ஆம் ஆண்டு ஸபர் மாதத்தில்தான் அல்லாஹுதஆலா வழங்கினான்.

அதே வருடம் ஸபர் மாதம் பன்னிரண்டாம் நாள் இஸ்லாமின் முதல் புனிதப் போர் நடைபெறவிருந்த ‘அப்வா’ எனுமிடத்திற்கு முஸ்லிம்கள் சென்றார்கள். ஆனால் யுத்தம் நடைபெறவில்லை. இப்பயணத்தில் பனூ ழமிரா எனும் கூட்டத்தாருடன் நபியவர்கள் ஒப்பந்தம் செய்து மதீனா திரும்பினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மகளார் பாத்திமா (ரழி) அவர்களுக்கும் அலி (ரழி) அவர்களுக்கும் திருமணம் நடந்ததும் ஹிஜ்ரி 02 ஆண்டு ஸபர் மாதத்தில் தான். அப்பொழுது பாத்திமா (ரழி) அவர்களுக்கு வயது 19, அலி (ரழி) அவர்களுக்கு 24 வயது ஆகும்.

யமாமாவின் அதிபதி துமாமா பின் உஸால் ( ரழி) அவர்கள் ஹிஜ்ரி 06 ஆண்டு முஹர்ரம் அல்லது ஸபர் மாதத்தில் தான் இஸ்லாத்தைத் தழுவினார்கள். துமாமா ஒரு படை நடவடிக்கையில் கைதியாக பிடிக்கப்பட்டார்கள். அவர் மதீனாவுக்கு கொண்டு வரப்பட்டு மஸ்ஜிதுந் நபவீயின் தூணில் கட்டி வைக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை அவிழ்த்து விடுமாறு உத்தரவிட்டார்கள். துமாமா (ரழி) அவர்கள் விடுதலையாகிச் சென்று குளித்து விட்டு மீண்டும் நபியவர்களிடம் வந்து கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு முஹர்ரம், ஸபர் மாதத்திற்கிடையில் யமனிலிருந்து தூஸ் கோத்திரத்தினர் நபியவர்களிடம் வந்தார்கள். அபூஹுரைரா (ரழி) அவர்களும் துஃபைல் பின் அம்ர் (ரழி) அவர்களும் இதே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே. இச்சந்திப்பின் மூலம் 70 அல்லது 80 தூஸ் குடும்பத்தைச் சார்ந்த 400 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு ஸபர் மாதம் அம்ர் பின் ஆஸ் (ரழி), காலித் பின் வலீத் (ரழி) ,உதுமான் பின் அபீ தல்ஹா (ரழி) ஆகியோர் மதீனா வந்து நபியவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தை தழுவினார்கள்.

ஹிஜ்ரி 9ஆம் ஆண்டு ஸபர் மாதத்தில் யமனில் இருந்து பனு உத்ரா என்ற கோத்திரத்தைச் சார்ந்த 12 பேர் கொண்ட ஒரு குழு வந்தது. இக்குழுவினர் அனைவரும் நபியவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு திரும்பினர்.

மதீனாவிலிருந்து தொலைதூரத்தில் உள்ள பலமான கோட்டை நகரம் கைபர். அங்கு வசித்து வந்த யூதர்கள் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தனர். ஆகையால் ஹிஜ்ரி 7ல் முஹர்ரம் மாதத்தின் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டார்கள். நீண்ட முற்றுகைக்குப் பிறகு ஸபர் மாதத்தில் கோட்டை வெற்றி கொள்ளப்பட்டது.

அதே வருடத்தின் ஸபர் மாதத்தில் தான் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையேயுள்ள ‘வாதியே குரா’ எனும் ஊரில் உள்ள யூதர்களின் சூழ்ச்சியை முறியடிப்பதற்காக அவர்களை எதிர்த்து வெற்றி கண்டு பெரும் கனீமத் பொருட்களுடன் நாயகமும், அவர்களின் தோழர்களும் வெற்றி வீரர்களாக மதீனா திரும்பினார்கள்.

ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு ஸபர் மாதம் (கி.பி 626 ஜூன்) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள்.

ஹிஜ்ரி 7ம் ஆண்டு ஸபர் மாதம் நபி (ஸல்) அவர்கள் ஸபிய்யா (ரழி) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். கைபர் யுத்தத்தில் ஸபிய்யா கைதியாக பிடிக்கப்பட்டார். தலைவரின் மகளாக இருந்ததால் யூதர்கள் மனமகிழ்ந்து இஸ்லாத்தை தழுவலாம் அல்லது முஸ்லிம்களுடன் நட்புறவுடன் நடந்து கொள்ளலாம் என்பதற்காக திருமணம் செய்து கொண்டார்கள். அதே வருடத்தில் ஸபர் மாதத்தில் தான் தவ்ஸ் கூட்டத்தை சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தில் இணைந்தார்கள். அதிகமான நபிமொழிகளை அறிவித்துள்ள அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் இந்த தவ்ஸ் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜ்ரி 2ம் ஆண்டு ஸபர் மாதத்தில் தான் அப்வா அல்லது வத்தான் யுத்தத்திற்காக நபியவர்கள் புறப்பட்டார்கள். குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து வந்து கொண்டிருந்தது. அவர்களை எதிர்கொள்வதற்காக நபியவர்கள் 60 முஹாஜிரீன்களுடன் சென்றார்கள். இதில் அன்ஸாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுவே நபியவர்கள் கலந்து கொண்ட முதல் புனித போராகும். சண்டை எதுவும் நடக்கவில்லை. எதிரிகள் தப்பித்து விட்டனர். எனினும் இப்பயணத்தில் பனூ ளம்ரா என்ற கோத்திரத்தாருடன் நபியவர்கள் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

ஹிஜ்ரி 7ம் ஆண்டு ஸபர் மாதம் வாதில் ‘குரா ‘ யுத்தம் நடந்தது. கைபர் யுத்தம் முடிந்து திரும்பும்போது இவர்களுடைய கோட்டை முற்றுகையிடப்பட்டது. இங்கும் இஸ்லாத்தை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்த யூதர்கள் இருந்தனர். நான்கு நாள் முற்றுகைக்குப் பின் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.

இவ்வாறு சிறப்பும் மகத்துவமும் மிக்கதே ஸபர் மாதமாகும்.

மௌலவி

எம்.யூ.எம். வாலிஹ்…

(அல் அஸ்ஹரி), வெலிகம

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT