Sunday, May 12, 2024
Home » தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் பயணம்
கடலை இரசித்தவாறு மீண்டும்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் பயணம்

by Rizwan Segu Mohideen
August 20, 2023 11:28 am 0 comment

’50 ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தை, மாமா ஆகியோர் கப்பலில் இந்தியாவுக்கு சென்று புடவைகளை எடுத்து வந்து தொழில் செய்து வந்தனர். அந்தக் காலத்தில் வெளிநாடு செல்வதென்றால் பெரிய விஷயமாக கருதப்பட்டது. அவர்கள் செல்லும் போதும் நாடு திரும்பும் போதும் எல்லோரும் சென்று அவர்களை ரயில் நிலையத்தில் வழியனுப்புவதும் வரவேற்பதும் வழக்கம். அவர்கள் எங்களுடன் இருக்கும் போது ‘தலைமன்னார் -இராமேஸ்வரம் கப்பல் பயணம் பற்றிய சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். ரயிலுக்கு டிக்கெட் எடுத்தால், அதில் கப்பலிலும் பயணம் செய்யலாம். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் தான் டிக்கெட் வாங்கவேண்டும். அதற்கென டி. ஆர். விஜேவர்த்தன வீதியில் தனியான டிக்கெட் கருமபீடமொன்றும் பிரிவும் அந்தகாலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ரயில் டிக்கெட்டில் தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகள் அச்சிடப்பட்டிருக்கும். கப்பலில் சைவ உணவுகள் தாராளமாக கிடைக்குமாம். குடிநீரை தவிர மற்றயவை அனைத்தும் பணம் கொடுத்து வாங்க வேண்டுமாம். எங்களுடைய ஊரிலிருந்தும் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்துக்கும் அதிகளவான பக்தர்கள் இந்த கப்பல் சேவை ஊடாகவே சென்றுவருவதுண்டு. புயல், யுத்தம் என்று கப்பல் சேவையை நிறுத்திவிட்டார்கள். அதனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. மீண்டும் தலைமன்னார், – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்கின்றார் சிலாபத்தைச் சேர்ந்த 75 வயதான வீரராஜன்.

‘அந்தக் காலத்தில் இந்தியாவிலிருந்து கல்லூரி மாணவர்கள் இலங்கையை சுற்றிப் பார்க்க கப்பலில் சுற்றுலா வருவார்கள். அவர்கள் வரும் போது கவரிங் நகைகள், பொட்டு, இனிப்புப் பண்டங்கள் என்று பலவிதமான பொருட்களை கொண்டு வந்து இங்கு விற்று பணமாக்கி அதை செலவுக்கு வைத்துக் கொள்வார்கள். அப்படி நானும் அவர்களிடம் கவரிங் நகைகள் வாங்கி அணிந்திருக்கிறேன். சில நேரங்களில் பொருட்களை பண்டமாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு. இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து ஆசிரியர்கள் பணிபுரிவார்கள். அப்படி ஒருகாலம் இருந்தது என்கிறார் தலைமன்னாரைச் சேர்ந்த 64 வயதான எலிசபத் அம்மாள்.

‘தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளிவந்தவுடன் பலரும் அந்தக் காலத்து கப்பல் பயண நினைவுகளை அசைபோட ஆரம்பித்துள்ளனர். தலைமன்னார் ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிரதான நுழைவாயிலாக இருந்தது. மன்னார் நகரிலிருந்து ஒரு மணி நேர பஸ் பயணம். வண்ணமயமான மீன்பிடிப் படகுகள், பிரமிக்க வைக்கும் கலங்கரை விளக்கம், ஓலையால் வேயப்பட்ட கூரைகள் மற்றும் களிமண் சுவர்களால் கட்டப்பட்ட பாரம்பரிய வீடுகள், கம்பீரமாய் காட்சியளிக்கும் தலைமன்னார் இறங்கு துறை, கடலைகளின் ஓசை என கரையோர நகரங்களின் வசீகரத்தையும் அழகையும் இந்நகரம் தன்னகத்தே கொண்டுள்ளது. காலனித்துவ காலத்தில் ஆண்டு முழுவதும் முத்து குளித்தல் தொழிலுக்கு பெயர் பெற்ற இடமாகவும் தலைமன்னார் விளங்கியது.

இலங்கை- இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலமாகவே கடல்வழிப் போக்குவரத்து இருந்தது. இராமாயணகாலத்தில் இராமேஸ்வரத்திலிருந்து அனுமனின் படைகள் அமைத்த பாலத்தின் வழியாக இராமன் இலங்கைக்கு வந்து இராவணனிடமிருந்து சீதையை மீட்டுச் சென்றதாக புராணம் கூறுகின்றது. சோழ மன்னர்கள் கடல்வழியாக படையெடுத்து இலங்கையை கைப்பற்றி ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகின்றது. இது இவ்வாறிருக்க ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ‘போட் மெயில்’ என அழைக்கப்படும் ரயில், கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்புக்கும் சென்னைக்கும் இடையில் போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்துவதற்காக 1876ஆம் ஆண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் ஒரு கட்டமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடலுக்குள் 145 தூண்களுடன் பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1913இல் நிறைவடைந்தது. 1914ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி முதல் ‘போட் மெயில்’ சேவை ஆரம்பமாகியது.

சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை ரயில் பயணம், அதனைத் தொடர்ந்து தனுஷ்கோடியிலிருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான 36 கிலோமீற்றர் நீண்ட கப்பல் பயணம், பின்னர் மீண்டும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரை ரயில் பயணம் என்று போக்குவரத்து சேவை நீடித்திருந்தது. குறைந்த கட்டணத்தில் இந்தியா சென்று வருவதற்கு இது பேருதவியாகவிருந்தது. திரை கடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப இலங்கை, இந்திய வர்த்தகர்கள், தொழிலாளர்கள் கப்பல் சேவை ஊடாக பெரும் பொருள் ஈட்டி இலாபம் பெற்றனர்.

இலங்கையிலிருந்து பலர் இந்தியாவிலுள்ள பிரசித்திப் பெற்ற வணக்கஸ்தலங்களுக்கு குறைந்த செலவில் சென்றுவந்தனர். இந்தியாவிலிருந்து பலர் இலங்கைக்கு கல்வி, தொழிலுக்காக வந்துசென்றனர். இதனால் தலைமன்னார் ஒருகாலத்தில் இலங்கையை இணைக்கும் பெரும் நகரமாகவிருந்தது. அதேபோல் தமிழகத்தின் இராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்கள் பெரும் அபிவிருத்தி கண்டன.

1964ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட 07 இலட்சம் இந்திய வம்சாவளி மக்களும் பதுளையிலிருந்து ரயிலில் தலைமன்னார் வரை சென்று அங்கிருந்து கப்பல் சேவை ஊடாக இராமேஸ்வரத்தை சென்றடைந்ததாக கூறப்படுகின்றது.

எனினும் துரதிர்ஷ்டவசமாக 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனுஷ்கோடியை தாக்கிய புயல் காரணமாக பாம்பன் பாலத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. பாம்பன் பாலத்தின் ஊடாக சென்ற ரயில் கடலில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 130 பேர் வரை உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி இந்திய – இலங்கை ரயில்- படகு சேவைக்கான முனையமாகவிருந்த தலைமன்னார் இறங்கு துறைமுகத்துக்கும் குறிப்பிட்ட அளவு சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 45 நாட்களின் பின்னர் பாலம் புனமைக்கப்பட்டு 1965ஆம் ஆண்டு தலைமன்னார் முதல் இராமேஸ்வரம் வரை மீண்டும் கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகியது.

இராமானுஜம் என்று பெயரிடப்பட்ட கப்பல் வாரத்துக்கு 03 நாட்கள் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பயணித்தது. இந்த கப்பலில் அதிகபட்சமாக 400 பேர் வரையிலும் பயணம் செய்யலாம்.

ஆனால் இலங்கையின் உள்நாட்டு போர் தீவிரமடைந்தமையால் 1983ஆம் ஆண்டு இக்கப்பல் சேவையும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆங்கிலேயர்கள் ஆரம்பித்த இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

யுத்தம் காரணமாக தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான ரயில் பாதையும் முற்றாக சேதமடைந்தது. இந்நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து முடங்கிபோயிருந்த இலங்கை- இந்தியா கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக இந்திய அரசாங்கம் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதில் பெரும் ஆர்வம் காட்டியது. எனினும் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னரே இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் யாழ். காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளிவந்திருந்தன. எனினும் தற்போது அது தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்குமிடையிலான கப்பல் சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

ஏனெனில் தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் குறுகிய தூரமாக காணப்படுகின்றமையால் விரைவான பயணத்தை மேற்கொள்வதற்காக, இத்திட்டம் தலைமன்னாருக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி ரயில் சேவையுடன் இணைப்பதற்கான வசதிகள் காணப்படுவதால் இத்திட்டம் தலைமன்னாருக்கு மாற்றப்பட்டது. அதற்கமைய இலங்கை –இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்காக யுத்தத்தால் சேதமடைந்த தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது தலைமன்னார் இறங்குதுறையின் தற்போதைய நிலைமைகளை கண்காணித்தனர். அதன்படி புனரமைப்பு பணிகளுக்காக 1,800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இறங்குதுறையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்துக்கு சொந்தமான காணியில் 10 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்புனரமைப்பு திட்டத்தின் கீழ் நவீன பயணிகள் முனையம், களஞ்சியசாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அரச மற்றும் உள்ளூர், வெளிநாட்டு தனியார் துறையின் பங்களிப்புடன் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

புயல் காற்று காரணமாக அழிக்கப்பட்ட தனுஷ்கோடி துறைமுகம் இந்திய அரசாங்கத்தினால் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான எதிர்கால பயணிகள் கப்பல் சேவைக்கு இந்திய அரசினால் தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதுதொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கருத்து தெரிவிக்கையில், தலைமன்னார் கரையோரப் பகுதி அபிவிருத்தி செய்யப்படுவதை தொடர்ந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆரம்பகாலம் முதல் இருந்துவரும் உறவை பலப்படுத்த முடியும்.

குறிப்பாக இந்தியாவிலுள்ள சுற்றுலா யாத்திரிகை தலங்களுக்கு விசேட கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியும். தம்பதிவ, பௌத்த யாத்திரை செல்ல விரும்பும் பக்தர்கள் குறைந்த கட்டணத்தில் இந்தியா சென்றுவர முடியும். அதுமட்டுமின்றி இரு நாடுகளுக்கிடையிலான வியாபார நடவடிக்கைகள் விருத்தியடையும். வடபகுதி மக்களின் உற்பத்திப் பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்டான்லி டீ மெல் கருத்து தெரிவிக்கையில்,

தலைமன்னார்- – இராமேஸ்வரன் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் முகமாக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமாயின் மன்னார் மாவட்டம் பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குறிப்பாக சுற்றுலாத்துறை பாரியளவில் அபிவிருத்தியடையும். பயணிகள் கப்பல் சேவை தான் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சரக்கு கப்பல் சேவையும் ஆரம்பிக்கப்படுமாயின் இங்குள்ள வியாபாரிகளுக்கு மேலும் பயனளிக்கும் என அவர் தெரிவித்தார்.

வசந்தா அருள்ரட்ணம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT