Tuesday, May 14, 2024
Home » கைதான 9 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல்

கைதான 9 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல்

- மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மு.க. ஸ்டாலின் கடிதம்

by Prashahini
July 25, 2023 3:51 pm 0 comment

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் , 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (24) இரவு தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், தமிழக கடற்தொழிலாளர்களின் 2 படகையும் அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.

தொடர்பான செய்திகள்...

கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக இன்று (25) 09 கடற்தொழிலாளர்களையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்.விசேட நிருபர்


தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதமொன்றை எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலின் இன்று (25) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சூழ்நிலையில், நீண்டகாலமாக நிலவிவரும் இப்பிரச்சினையைத் தீர்க்க தூதரக அளவிலான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு தான் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இருப்பினும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து ஆழ்ந்த கவலையுடனும், ஏமாற்ற உணர்வுடனும் இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு, இலங்கை அதிபர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினை குறித்து பிரதமர் விவாதிக்க வலியுறுத்தி இருந்ததாகவும், மீனவர் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும், இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை மதிக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கும் இலங்கை அதிபருடனான சந்திப்பு வழிவகுக்கும் என தாம் நம்பியதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும், கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களும், அவர்களது IND-TN11-MM-837, IND-TN11-MM-257 பதிவு எண்கள் கொண்ட 2 விசைப்படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் நேற்று (24) சிறைபிடிக்கப்பட்டுள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால், அவர்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும், இந்தச் சம்பவங்கள் இருதரப்பு உறவுகளை சீர்குலைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடுமையான சமூக-பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றும் கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளை பாதுகாப்பாக திரும்ப ஒப்படைக்கவும் கேட்டுக் கொண்டுள்ள அவர், பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவும், இதுதொடர்பாக சாத்தியமான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT