Tuesday, May 21, 2024
Home » இஸ்லாமிய புத்தாண்டை வரவேற்போம்!

இஸ்லாமிய புத்தாண்டை வரவேற்போம்!

by gayan
July 14, 2023 11:38 am 0 comment

முஹர்ரம் பெற்றுள்ள மகத்துவம்

இஸ்லாமிய வருட கணிப்பின் படி மற்றொரு புதுவருடமாக ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் அடுத்துவரும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ளது.

இறைவனுக்காகவும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த திருத்தூதுக்காகவும் முஸ்லிம்கள் மேற்கொண்ட அரும் பெரும் தியாகமே ஹிஜ்ரத் என்ற ‘துறந்து செல்லல்’ ஆகும். தம் சன்மார்க்க வாழ்வைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தமது நாட்டையும், வீட்டையும், சொத்து சுகங்களையும் துறந்து செல்ல சித்தமாயிருக்க வேண்டும் என்பதே ஹிஜ்ரத்தின் தத்துவமாகும்.

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவரது உயிரிலும் மேலானது தான் அவருடைய இஸ்லாமிய வாழ்வு. அவ்வாழ்வுக்கு பங்கம் ஏற்படுமானால் அவர் எல்லா வித அர்ப்பணிப்புக்களுக்கும், ஹிஜ்ரத்துக்கும் தயாராகி விடுவார். இது ஹிஜ்ரத் கற்பிக்கும் பாடம்.

அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்ய வேண்டும். அவனது அந்தஸ்து அவனது நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதே ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

அல்லாஹ் அல் குர்ஆனில் குறிப்பிட்டிருப்பதன் படி, புனிதமான நான்கு மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவை. இது தான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்’ (அல்குர்ஆன் 09:36)

இதேவேளை நபி (ஸல்)அவர்கள், ‘வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும் .அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும் என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி)

இதன்படி, இஸ்லாத்தில் புனிதமான மாதங்கள் நான்கு என்பது தெளிவாகின்றது. அவையே துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகியனவாகும். இம்மாதங்கள் கொண்டுள்ள புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேண வேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு எடுத்தியம்பியுள்ளது. ஹுரும் என்ற அரபுச் சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை தரக்கூடியன.

உதாரணமாக, ‘ஹராம்’ என்பதற்கு ‘தடுக்கப்பட்டவை’ என்பதே பொருளாகும். ‘தக்பீரதுல் இஹ்ராம்’ என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் இஹ்ராமும் ஆகும். இஹ்ராம் என்பது தடுக்கப்பட்டவை எனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ‘ஹுரும்’ என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ‘ஹுரும்’ என்பது ‘ தடுக்கப்பட்டவை’ அல்லது ‘புனிதமானவை’ என்று விளங்க முடியும்.

‘அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும்’ (அல்குர்ஆன் 22:30)

அல்லாஹ் தடுத்துள்ள விடயங்களை மனிதன் முற்று முழுதாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனித மாதங்களில் பேணுதலாகவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம் மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு பாவங்களை ஈட்டித் தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வதும் பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித் தரும்.

இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இப்புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவை. இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாதம் பல சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இரண்டாம் கலீபாவான உமர்(ரழி) அவர்கள் இஸ்லாத்தின் வருடக்கணிப்பீட்டினை அறிமுகப்படுத்துவது குறித்து நபித்தோழர்களை ஒன்று சேர்த்து ஆலோசனை நடாத்தினார்கள். அதில் எப்பொழுது இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. இச்சமயம் பலரும் பலவாறு தத்தம் கருத்துகளை முன்வைத்தார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு வருடத்தையும் ஆரம்பிப்பதென முடிவு செய்யப்பட்டது.

அதேநேரம் அல்லாஹ், மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதமும் முஹர்ரம் தான்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆசுரா தினத்தில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அச்சமயம் நபி (ஸல்) அவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள் ‘இது ஒரு புனிதமான நாள். இந்நாளில் தான் அல்லாஹ் கொடுங்கோலன் பிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான். மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்’ என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மூஸாவைப் பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்’

(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

இஸ்லாமிய புத்தாண்டை வரவேற்க காத்திருக்கும் நாம் கடந்த காலத்தில் எம்மால் ஏற்பட்டிருந்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவமீட்சி (தௌபா) பெற்றுக் கொள்வதோடு, எதிர்வரும் புத்தாண்டை பாவக்கறையற்றவர்களாக வரவேற்போம். நாட்டின் சுபீட்சத்துக்கும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களின் நலன்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்.

மௌலவி

எம்.யூ.எம்.வாலிஹ்…

(அல் அஸ்ஹரி), வெலிகம

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT