Wednesday, May 15, 2024
Home » விலைக்குறைப்பின் பிரதிபலன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும்

விலைக்குறைப்பின் பிரதிபலன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும்

by admin
July 4, 2023 10:45 am 0 comment

நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான போது அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களதும் விலைகள் அதிகரிக்கலாயின. இவ்விலையேற்றம் காரணமாக மக்கள் பலவிதமான அசௌகரியங்களையும் எதிர்கொண்டனர். ஆன போதிலும் நாட்டின் பொருளாதார நலன்களைக் கருத்தில் கொண்டு அந்த அசௌகரியங்களின் போது மக்கள் பொறுமை காத்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் நாட்டுக்கு நன்மைகளை அளிக்க ஆரம்பித்தன. இதன் பயனாக பொருளாதார நெருக்கடி நிலவிய போது நாட்டில் காணப்பட்ட நெருக்கடிகளும் அசௌகரியங்களும் கட்டம் கட்டமாக நீங்கலாயின. அத்தோடு பொருளாதார மீட்சிக்கான வேலைத்திட்டங்களின் பிரதிபலன்களை அடிப்படையாகக் கொண்டு பொருட்களின் விலைகளும் கட்டம் கட்டமாக குறைக்கப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் ஏற்கனவே பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. சில பொருட்களுக்கு பல தடவை விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் குறிப்பிடத்தக்கவையாகும்.

நாடு அடைந்து கொள்ளும் பொருளாதார நலன்களுக்கு அமைய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்ற போதிலும் அதன் பிரதிபலன்கள் இன்னும் முழுமையாக மக்களை சென்றடையாத நிலைமையும் காணப்படவே செய்கிறது. இதற்கு சில தனியார் வர்த்தகர்களும் காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் கையாளும் ஏகபோக உரிமை காரணமாக நாடு பொருளாதார ரீதியில் பெற்றுக் கொள்ளும் பிரதிபலன்களை மக்களுக்கு உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாக பிரதேசமட்ட வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், சில வர்த்தகர்கள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது உடனடியாக விலைகளை அதிகரிக்கின்றனர். ஆனால் அப்பொருட்களுக்கு விலை குறைப்பு செய்யப்படும் போது அதனைச் செய்வதற்கு தயங்குவதுடன் விலைக் குறைப்பைத் தவிர்ப்பதற்காகப் பலவிதமான சாக்குப்போக்குகளைக் கூறுகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் எல்லாப் பொருட்களையும் போன்று பேக்கரி உற்பத்திகளுக்கும் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

அந்த வகையில் கடந்த மாத முற்பகுதியில் எரிவாயுவுக்கு விலை குறைப்பு செய்யப்பட்ட போது பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் குறைக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன, ‘எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க முடியாது. 75 வீதமான பேக்கரிகள் மின்சாரத்தில் இயங்குவதாகவும் எரிவாயு விலை அதிகரித்த போது தாம் பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை’ என்றும் குறிப்பிட்டதோடு பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்கவும் மறுக்கப்பட்டது.

தற்போது மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. எரிவாயுவுக்கு மீண்டும் விலைக் குறைப்பை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்ஜித் விதானகே, ‘மின்கட்டணக் குறைப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தச் சூழலிலும் விலைக் குறைப்பைத் தவிர்ப்பதற்கு ஏதாவது சாக்குபோக்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறுமா? என்ற கேள்வியும் நிலவவே செய்கிறது. ஆனால் கடந்த முறை போன்று, இம்முறை மின் கட்டணத்திற்கு தான் விலை குறைக்கப்பட்டுள்ளது எனக்கூறி பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு கோரிக்கையைத் தவிர்க்க முயற்சிக்க முடியாது. ஏனெனில் எரிவாயுவுக்கும் விலை குறைக்கப்பட உள்ளது. அதனால் பேக்கரி உற்பத்திகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ விலைக் குறைப்பு செய்தாக வேண்டும். அதுவே நியாயமானது.

ஆகவே அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களதும் விலைகள் குறைக்கப்படும் போது அதன் பிரதிபலன்கள் மக்களையும் சென்றடைய வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனால் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் போது அதன் பிரதிபலன்கள் மக்களுக்குக் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கென வலுவான கட்டமைப்பு ஏற்பாடுகள் இன்றியமையாததாகும். அப்போதுதான் பொருளாதார மறுமலர்ச்சியின் பிரதிபலன்கள் மக்களுக்கும் கிடைக்கப்பெறக் கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT