Home » அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களது பிரச்சினைகளை தீர்க்க ஒன்றுபடுங்கள்

அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களது பிரச்சினைகளை தீர்க்க ஒன்றுபடுங்கள்

by admin
July 4, 2023 10:52 am 0 comment

சஜித் தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு

அரசியல் நோக்கங்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். போலியான தர்க்கங்களை முன்வைத்து தோல்வியைத் தழுவிக் கொள்வதற்கு பதிலாக நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மைக்குப் புறம்பானதென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்த பெருமையுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கிணங்க, அவசியமெனில் சபாநாயகரிடத்தில் கலந்துரையாடி எதிர்க்கட்சியினருக்கு மேலதிக பொறுப்புக்களைப் பெற்றுக்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் 32 வருட அரசியல் வாழ்வை சிறப்பிக்கும் வகையில் ஹம்பாந்தோட்டை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று ஹம்பாந்தோட்டை மாகம் ருஹுனு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “அமரவிரு அபிமன் 32” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது “அமரவிரு அபிமன் 32” ஞாபகார்த்த நினைவுச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டு முதற்பிரதி ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஹம்பாந்தோட்டை மக்கள் சார்பாக நினைவுச் சின்னமொன்றை அமைச்சர் மஹிந்த அமரவீர ஜனாதிபதிக்கு வழங்கிவைத்ததுடன் ஹம்பாந்தோட்டை மக்களுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர, ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் வகையில் ஜனாதிபதியினால் அமைச்சருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி:

“தனது 32 வருட அரசியல் வாழ்வில் 28 வருடங்களை பாராளுமன்ற அங்கத்துவத்துடன் கழித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, மக்களுக்கு சிறப்பான சேவைகள் பலவற்றை செய்துள்ளார். இவர் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் களம் தொடர்பிலான அனுபவங்கள் நிறைந்தவர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்தியிருந்தேன்.

இறுதியில் ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் அந்தச் சந்திப்பை புறக்கணித்திருந்தன.

நானும், ஆர்.சம்பந்தனும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அந்த சந்திப்பில் கலந்துகொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம்.

எவ்வாறாயினும் மே 09 நிகழ்வின் பின்னர் நாம் அனைவரையும் ஒன்றிணைக்க முற்பட்டோம். பிரதமர் பதவியைப் பொறுப்பேற்காவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி எங்களுடைய வேலைத்திட்டங்களுடன் இணைந்துகொள்ளும் என எதிர்பார்த்த போதும் அது நடக்கவில்லை.

அதன் பின்பே தற்போதைய ஆளும் தரப்பை கட்டமைத்து எமது பணிகளை ஆரம்பித்தோம்.

நான் ஜனாதிபதியாகவும், பிரதமராக தினேஷ் குணவர்தனவும் பொறுப்பேற்றுக்கொண்ட அரசாங்கத்தின் விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர தெரிவு செய்யப்பட்டார். விவசாயம் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டும் முடங்கிக் கிடந்த காலத்திலேயே அவர் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

2023 ஆம் ஆண்டு தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக நல்லதொரு விளைச்சலை பெற்றுக்கொள்ள முயற்சித்தோம். உணவுப் பாதுகாப்பிற்கான குழுவொன்றையும் நிறுவினோம். ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். எதிர்கட்சியினர் முன்வரவில்லை. இறுதியாக தன்னிறைவான விளைச்சல் கிடைத்த பின்னர் அதிகாரிகள் மக்களுக்கு அரிசியை பகிர்ந்தளித்தனர். அந்த நேரத்தில் தங்களால் பங்களிப்புச் செய்ய முடியாமல் போனமைக்காக எதிர்கட்சி உறுப்பினர்கள் வருத்தமடைந்தனர்.

மேற்படி பணிக்கு அர்பணிப்புடன் பங்களிப்பை வழங்கிய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் அவரின் கீழான அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

அதேபோல் கால்நடை வளங்களை மேம்படுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாட்டின் சிறந்த கால்நடை வள நிறுவனமான அம்பேவல நிறுவனம் ரிதீகமவில் தங்களுக்கான பண்ணையொன்றை பெற்றுத்தருமாறு கோரியுள்ளது. அப்பகுதியில் கால்நடை வளங்களை மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

.இந்தியாவின் பிரதான நிறுவனங்களில் ஒன்றான “அமுல்” நிறுவனம் கால்நடை அபிவிருத்திச் சபையுடன் இணைந்த வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT